குறுகிய வட்டத்தில் வாழ்வதில் இருந்து விடுபட்டு உங்களுக்கு பிடித்த விஷயத்தில் ஈடுபடுவது எப்படி?
உங்களது ஆர்வம் எப்போதும் உங்களுக்குள்ளேயே இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. நீங்கள் வெளியே ஆராய்ந்து அதைக் கண்டறியவேண்டும். சில சமயம் திறந்த மனதுடன் இருந்தால் மட்டுமே அது உதவும். பல்வேறு விஷயங்களை நீங்கள் முயற்சித்தால் மட்டுமே உங்களுக்கு உண்மையான திருப்தியை எது அளிக்கும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
அலுவலகத்தில் நமக்கென ஒதுக்கப்பட்ட அறை, அலுவலகம், வீடு ஆகியவற்றின் எல்லைகளைத் தாண்டி ஏதாவது செய்யவேண்டும் என்கிற கனவு நம்மில் பலருக்கு இருக்கும். நம்மில் சிலர் ஏதோ ஒன்றை செயல்படுத்துவதற்கான திட்டத்தை கண்டறிந்திருப்போம். ஆனால் சூழ்நிலை அல்லது வளங்களின் பற்றாக்குறை காரணமாக செயல்படுத்த இயலாமல் போகக்கூடும். நம்மில் சிலர் வேலையை ராஜினாமா செய்துவிடவேண்டும் என்று விரும்புவோம். ஆனால் சரியான நேரத்திற்காக காத்திருப்போம். சிலர் நமக்கு முழு நிறைவளிக்கும் பேரார்வமுள்ள விஷயத்தை இன்னும் தேடிக்கொண்டிருப்போம். வித்தியாசமாக ஏதாவது முயற்சிக்கவேண்டும். நம்முடைய மதிப்பை உணரவைக்கும் விதத்தில் ஏதாவது செய்யவேண்டும் என்கிற விருப்பம் நம் அனைவருக்கும் இருக்கும்.
உங்களது ஆற்றல் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை எனில் மன அழுத்தம் ஏற்படும். வாழ்க்கையில் எதை சாதிக்க வேண்டும் என்பதை நேரம் கடத்தாமல் தீர்மானிக்கவேண்டும் என்கிற அழுத்தம் ஏற்படும். அப்படிப்பட்ட பல அழுத்தங்கள் நீங்களாகவே உருவாக்கிக் கொள்வதுதான் என்பதே என்னுடைய கருத்து. சற்றே ஆராயந்து, திட்டமிட்டு, முயற்சித்துப் பார்த்தால் அவ்வாறு ஒரு எல்லைக்குள் கட்டுப்பட்டிருப்பதாக நீங்கள் நினைத்து வருந்துவதைத் தடுக்கமுடியும்.
வளரும் பருவத்தில் நான் எப்படி இருக்கவேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தேன். காலம் செல்லச் செல்ல இது மாறிக்கொண்டே இருந்தது. முதலில் கால்ந+டை மருத்துவர். பிறகு டிசைனர். இவ்வாறு என்னுடைய விருப்பமானது தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது. என்னுடைய பெற்றோர் எனக்கு அதிகளவு உறுதுணையாக இருந்தாலும் என்னுடைய மாறி வரும் விருப்பத்தைக் கண்டு எனக்கேற்ற சரியான முடிவை நான் எடுக்கவேண்டும் என்கிற பயம் அவர்களுக்கு ஏற்பட்டது.
எனக்கு 15 வயதானபோது மருத்துவராக வேண்டும் என்று திடமாக மனதில் தீர்மானித்தேன். என்னுடைய வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்த பொழுதுபோக்கு அம்சங்களான இசை மற்றும் ஓவியம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு மருத்துவப் படிப்பிற்காக என்னை ஆயத்தப்படுத்த நினைத்தேன். விரைவில் அறுவைச்சிகிச்சைக்கான கத்தியை கைகளில் ஏந்துவதைக் காட்டிலும் ஓவியம் வரையும் ப்ரஷ்ஷை பிடிக்கவே எனது கைகள் விரும்புகிறது என்பதை உணர்ந்தேன். மருத்துவ சீட்டை நிராகரித்தேன். பொறியியல் படிப்பை மேற்கொண்டேன். எனக்கு வழங்கப்பட்ட ஐடி பணியை மறுத்தேன். எம்பிஏ படித்தேன். ஐந்தே வாரங்களில் B-ஸ்கூலிலிருந்து வெளியேறினேன். நான் செய்த அனைத்தும் எனக்கு ஓரளவிற்கு பிடித்திருந்து. ஆனால் போதுமான அளவு பிடிக்கவில்லை என்பது எனக்கு தெளிவானது. வேறு ஏதோ ஒன்று என்னை அதிகம் ஈர்த்தது. அது என்னவென்று என் உள்மனதிற்குத் தெரியும்.
நான் எழுத விரும்பினேன். கல்லூரி நாட்கள் முழுவதும் எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் அதைத் தொழிலாக மேற்கொள்ள நினைத்ததில்லை.
ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தபோது நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். பகல் நேரத்தில் பாடபுத்தகத்தை எடிட் செய்தேன். இரவில் எழுதினேன். காமிக்ஸ் வரைந்தேன். ஜாஸ் கற்றுக்கொண்டேன். பயணம் மேற்கொண்டேன். படித்தேன். ஆராய்ந்தேன். நாள் முழுவதும் எனக்கு மிகவும் பிடித்த வேலைகளை செய்வதற்காக என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். என்னுடைய இடது பக்க மூளை பகலில் இயங்கியது. இரவில் மூளையின் வலது பக்கம் தடையின்றி பல்வேறு கருத்துக்கள் குறித்து தொடர்ந்து சிந்தித்தது. ஒரு விளம்பர நிறுவனத்தில் சில காலம் காபிரைட்டராக பணியாற்றிய நாட்கள் எனக்கு திருப்தியளித்தது. எழுத்தும் ஓவியமும் என்னுடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே மாறிய பிறகு இதைத்தான் என்னுடைய வாழ்நாளில் தொடரவேண்டும் என்று தெரிந்துகொண்டேன்.
வாழ்க்கை வேகமாக கடந்து சென்றுவிடும். வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆர்வம் இல்லாத செயல்களில் ஈடுபடுவதிலேயே செலவிடுகிறோம். ஒருவேளை வேறு எதிலாவது ஈடுபட்டிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்போமா என்கிற சந்தேகம் எப்போதும் நம்முள் இருந்துகொண்டே இருக்கும். அவ்வாறு நாம் சிக்கிக்கொண்டதாக நினைக்கும் சில பொதுவான சூழல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதே சூழ்நிலைகளை நான் சந்தித்தபோது அதிலிருந்து கற்ற படிப்பினைகளை இங்கே குறிப்பிட்டுள்ளேன்.
நான் பணியை விட்டுவிட விரும்புகிறேன் ஆனால் இயலாது...
சூழ்நிலைகளோ அல்லது கடமைகளோ உங்களை கட்டுப்படுத்தினாலும் நீங்கள் செய்யவேண்டிய விஷயத்தில் தெளிவாக இருந்தால் உடனே அதுகுறித்து திட்டமிடத் துவங்குங்கள். சின்னச் சின்ன தியாகங்கள் செய்ய நேரிட்டாலும் தயங்காமல் செய்யுங்கள். அவை உங்களது கனவை நிறைவேற்ற உதவும். இப்போதும் தாமதமாகவில்லை. அடுத்து என்ன செய்வதென்று தெரியாதபோது உங்களது பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். வெவ்வேறு விஷயங்களை முயற்சித்துப் பாருங்கள். வெளியே செல்லுங்கள் பயணம் மேற்கொள்ளுங்கள். நீங்கள் அலுவலகத்தில் பணிபுரிகிறீர்கள். உங்களுக்கு பணி இல்லாத நேரத்தில் நீங்கள் சிந்திப்பதற்கான சுதந்திரம் உங்களுக்குக் கிடைக்கிறது. இதுவே அலுவலகப் பணியில் கிடைக்கும் ஒரு மிகப்பெரிய சலுகையாகும்.
நான் வெளியேறவேண்டும் ஆனால் பயமாக இருக்கிறது
உங்களை பயம் கட்டுப்டுத்துவதாக நினைத்தால் அதுவே நீங்கள் துணிந்து முயல்வதற்குக் காரணமாக இருக்கவேண்டும். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று நீங்கள் பயந்தால் என்ன மோசமாக நடந்துவிட வாய்ப்புள்ளது என்பதை நினைத்துப்பாருங்கள். சில விவாதங்கள் ஏற்படலாம். ஆனால் நாளை அதை அனைவரும் மறந்துவிடுவார்கள். ஆனால் முயற்சி செய்த திருப்தியுடன் நீங்கள் வாழலாம்.
நான் வெளியேறவேண்டும் ஆனால் அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை – முயற்சி வீணாகிவிட்டால்?
நீங்கள் தொடர்ந்து மாற்றத்தைத் தேடுபவராக இருந்தால் உங்களால் நாள் முழுவதும் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்திருக்க முடியாது. ஆனால் நமது நாட்களை அர்த்தமுள்ளதாக மாற்றவேண்டும் என்பதே மனித இயல்பு. அதைக் கண்டறிய ஒரே வழிதான் உள்ளது.
ஒரு குறிப்பிட்ட விதத்தில் இருக்கவேண்டும், ஒரு குறிப்பிட்ட துறையில் சாதிக்கவேண்டும் அல்லது மேலும் சாதிக்க போட்டியில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் போன்ற அழுத்தங்கள் நம் அனைவருக்கும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட பாதையில்தான் பயணிக்கவேண்டும் என்கிற அழுத்தம் காணப்படுகிறது. இன்று செஃப்பாக இருக்கும் நான் நாளை கார்பெண்டராக விரும்பினால் என்ன தவறு? இவ்வாறு துறை மாறினால் என்னுடைய ரெஸ்யூம் மோசமாக இருக்குமா? சாதிக்க வேண்டும் என்கிற நோக்கம் ஏன் குறிப்பிட்ட ஒரு துறை சார்ந்ததாக இருக்கவேண்டும்? நீங்கள் கணிதம் படித்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஜோசியராக விரும்பினால் உடனே நட்சத்திரங்கள் குறித்த ஆராய்ச்சியில் இறங்கவும். உங்களுக்கு நீங்களே தடை விதித்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. பேக்கிங், கோடிங், சைக்கிளிங், எழுதுதல் என பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து தொடர்ந்து அவற்றை மேற்கொள்ளுங்கள். ரிஸ்க் எடுங்கள். முயற்சித்துப் பாருங்கள், திறந்த மனதுடன் மாற்றத்தைத் தழுவிக் கொள்ளுங்கள். என்னுடைய ஒவ்வொரு விருப்பமும் ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தையும் அறிவையும், புரிதலையும் பெற எனக்கு உதவியுள்ளது. அவ்வாறு நான் முயற்சிக்கவில்லையெனில் எனக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்காது.
உங்களது ஆர்வம் எப்போதும் உங்களுக்குள்ளேயே இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. நீங்கள் வெளியே ஆராய்ந்து அதைக் கண்டறியவேண்டும். சில சமயம் திறந்த மனதுடன் இருந்தால் மட்டுமே அது உதவும். பல்வேறு விஷயங்களை நீங்கள் முயற்சித்தால் மட்டுமே உங்களுக்கு உண்மையான திருப்தியை எது அளிக்கும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். பெர்னாட்ஷா சொன்னது போல,
“வாழ்க்கை என்பது உங்களைக் கண்டறிவது அல்ல. உங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்வதே வாழ்க்கை.”
(பொறுப்புத்துறப்பு : ஆங்கில கட்டுரையாளர் ரம்யா ஸ்ரீராம். இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துக்களாகும். எந்த விதத்திலும் யுவர் ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)