முதலீடுகள் பற்றி வாரன் பஃபெட் சொல்லும் 5 சக்சஸ் ஃபார்முலாக்கள்!
முதலீடு சார்ந்து பிரபல தொழிலதிபர் வாரன் பஃபெட் சொல்லும் 5 சக்சஸ் பார்முலாக்கள்…
அண்மையில் தான் தனது 92-வது பிறந்தநாளை கொண்டாடினார் அமெரிக்க நாட்டின் தொழிலதிபர் வாரன் பஃபெட். உலகின் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவர் என அறியப்படுகிறார் இவர். இன்றைய தேதிக்கு அவரது சொத்து மதிப்பு 103 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
பர்க்ஷர் ஹத்துவே (Berkshire Hathaway) நிறுவனத் தலைவரான அவரது முதலீடு சார்ந்த பேச்சுகள் நகைப்புடன் கலந்த கருத்தான கருத்துகளாக இருக்கும். அது உலக மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தனக்கும், தனது நிறுவனத்தின் துணைத் தலைவர் சார்லிக்கும் 190 வயதாகவாக அவர் வேடிக்கையாக ஒரு கருத்து சொல்லி இருந்தார். அது அவர்கள் இருவரது வயதையும் சேர்த்துக் கணக்கிட்டு அவர் சொல்லி இருந்தது.
அமெரிக்கப் பொருளாதார வல்லுனரான பெஞ்சமின் கிரஹாமின் கருத்துகள் தான் ஆரம்ப நாட்களில் முதலீடு செய்ய வேண்டுமென்ற தாக்கத்தை அவருக்குள் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
“பங்குகள் சார்ந்த முதலீட்டை வணிக நோக்கத்துடன் பார்ப்பது, சந்தையின் ஏற்ற இறக்கங்களை சாதகமாக பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொள்வது போன்றவை தான் முதலீட்டின் அடிப்படை விதிகள். இதைத்தான் பெஞ்சமின் கிரஹாம் நமக்கு போதிக்கிறார். நூறு ஆண்டுகள் கடந்தாலும் அவரது வரையறை முதலீட்டின் அஸ்திவாரமாக இருக்கும்,” என பஃபெட் முன்னர் ஒருமுறை சொல்லியிருந்தார்.
முதலீடு சார்ந்த வாரன் பஃபெட்டின் 5 சக்சஸ் பார்முலாக்கள்…
1. நீண்ட கால பங்கு முதலீட்டில் நம்பிக்கை இருக்க வேண்டும்
“பங்குகளை பத்து ஆண்டுகள் வரை நீங்கள் வைத்துக் கொள்ளும் திட்டம் இல்லை என்றால் பத்து நிமிடம் கூட அது குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டியதில்லை,” என அவர் சொல்லியுள்ளார்.
அவரது முதலீட்டு யுக்திக்கு அடித்தளமே ஆராய்ச்சி என தெரிகிறது. ஒரு நிறுவனத்தின் சேவையோ அல்லது அதன் தயாரிப்புகளோ அடுத்த 10 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில் இருந்தால் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்கிறார். ஒரு பங்கில் முதலீடு செய்வதற்கு முன்னர் இது மாதிரியான மெனக்கெடல் இருப்பதன் மூலம் நீண்ட கால பலனை பெறலாம் என்கிறார்.
2.சந்தை வீழ்ச்சி நிலையை கண்டு அச்சப்பட வேண்டியதில்லை
"அடுத்தவர்கள் பேராசை கொண்டிருக்கும் போது பயப்படவும், அவர்கள் பயப்படும் போது பேராசை கொண்டவராகவும் இருங்கள்," என ஒருமுறை பஃபெட் சொல்லியுள்ளார். பேராசையும், பயமும் சந்தையை இயக்க செய்யும் முதலீட்டாளர்களின் இரண்டு உணர்ச்சிகள் என சொல்லப்படுகிறது.
சந்தையில் பங்குகளின் விலையில் சரிவும், ஏற்றமும் இருப்பது வழக்கம். இதில் பங்கு சரியும் போது அச்ச உணர்வும், உயரும்போது பேராசையும் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கும். அதனால், எப்போதுமே பங்குகளில் முதலீடு செய்யும் போது சிலவற்றுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது அவசியம் என்கிறார் பஃபெட். சில பங்குகளின் விலை தொடர்பில்லாத காரணங்களுக்காக வீழ்ச்சி அடையும். அதை சரியாக கணித்தால் தள்ளுபடி விலையில் அந்த பங்குகளை வாங்கலாம் என்கிறார்.
3.ஆக்சிஜனை போல கையில் பணம் இருப்பது அவசியம்
பங்குச் சந்தை கையில் பணம் இருப்பது பிரதானம் என்கிறார் பஃபெட்.
“இந்த விளையாட்டுக்கு அது (பணம்) ரொம்ப முக்கியம். இது வரலாறாக இருந்துள்ளது, இருக்கும். அதனை ஆக்சிஜன் என்று கூட சொல்லலாம். அது இல்லையென்றால் அடுத்த நாள் இங்கு விளையாடவே முடியாது. அது வெறும் சில நிமிடங்கள் இல்லை என்றாலும் கூட இங்கு எல்லாம் முடிந்துவிடும்,” என தனது நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பணம் குறித்து அவர் பேசியிருந்தார்.
அதனால் கையில் கொஞ்சமேனும் பணம் இருப்பது அவசியம் என்கிறார். அது இந்த சந்தை வழங்கும் வாய்ப்பை பயன்படுத்துவதில் தொடங்கி அவசர தேவைகளுக்கான சொத்துகளை விற்கும் நிலையை தவிர்ப்பது வரை உதவும் என்கிறார்.
4.உங்கள் தனித்திறனை நீங்கள் வளர்த்துக் கொள்வது சிறந்த முதலீடு
“இதுவரையில் செய்த சிறந்த முதலீடு எது என்றால் உங்களை நீங்களே வளர்த்துக் கொள்வதுதான் என்பேன். அதற்கு வரி கூட விதிக்கப்படுவதில்லை. ஏதேனும் ஒன்றில் சிறந்து விளங்கும் திறன் உங்களிடம் இருக்கலாம். அதை யாருமே பறிக்க முடியாது. அது உங்களிடமிருந்து மங்காததும் கூட. அதனால் அது சிறந்தது,” என பத்திரிகை பேட்டி ஒன்றில் பஃபெட் தெரிவித்துள்ளார்.
சந்தையில் நிலவும் மந்தமான நிலை, பணவீக்கம், வேலை இழப்பு போன்ற கவலைகள் இல்லாமல் இருக்க தொழில் சார்ந்த தனித் திறன்களை வளர்த்துக் கொள்ளும் விஷயத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது அவசியம் என அவர் நம்புகிறார்.
5.பங்கின் அவுட்கம் கணிக்க முடியாதது
ஒரு ஸ்மார்ட்டான முதலீட்டாளரால் பங்கின் அவுட்கம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது என அவர் தனது நிறுவன பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
"லாபம் அல்லது நஷ்டம் என பங்குகள் எந்த பக்கம் வேண்டுமானாலும் சாயலாம். ஆனால் பெரிய வெற்றி என்ற நம்பிக்கை தான் பல முதலீட்டாளர்களை சந்தை நோக்கி ஈர்த்துள்ளது," என அவர் தெரிவித்துள்ளார்.
பங்குகளில் முதலீடு செய்யும் ஆர்வம் கொண்டவர்கள் வாரன் பஃபெட்டின் இந்த கருத்துகளை கவனத்தில் கொண்டு முதலீடு செய்யலாம்.
-புதுவை புதல்வன்