ஜெயம்கொண்டான் தேர்தல் களத்தில் 'கவிஞர் கிச்சன்' புகழ் பாடலாசிரியர்!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் திரைப்பட பாடலாசிரியர் ஜெயங்கொண்டான் (எ) மகேஷ் சின்னையன்.
சினிமாத் துறையில் இருக்கும் இவர் சுயேச்சை வேட்பாளராக அரசியல் களம் கண்டுள்ளார். இவருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் நடிகர் கஞ்சா கருப்பு.
சென்னை - கலைஞர் நகர் காமராஜர் சாலையில் 'கவிஞர் கிச்சன்' என்ற உணவுக் கூடத்தையும் ஜெயம்கொண்டான் நடத்தி வருகிறார். தமிழ்ப்படம் பார்த்துவிட்டு அதன் டிக்கெட் காட்டுபவர்களுக்கு உணவில் 10% விலக்கு அளிக்கிறார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் தனது அரசியல் பார்வை குறித்தும் தமிழ் யுவர் ஸ்டோரியிடம் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார் ஜெயம்கொண்டான்.
சுயேச்சை வேட்பாளரான உங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கிறது?
அமோக வரவேற்பு இருக்கிறது. எனது சொந்த ஊர் என்பதால் மட்டுமே என்னை மக்கள் வரவேற்கவில்லை. சினிமாவில் பாடலாசிரியராக இருக்கும் நான் அத்துறையில் சம்பாதிக்க அதிகம் வாய்ப்பு இருந்தும் மக்கள் பணியில் ஆர்வம் காட்டுவதுதான் மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை மக்கள் விரும்புகின்றனர். ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு இவ்வளவு வரவேற்பா என நானே ஆச்சர்யப்படும் அளவுக்கு மக்கள் என்னை ஆதரிக்கின்றனர்.
ஜெயம்கொண்டான் தொகுதிக்கு உங்கள் திட்டம் என்ன?
மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை கிடைக்கச் செய்வது, குழந்தைகளுக்கு இலவச கல்வி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, அனைவருக்கும் பொருளாதார முன்னேற்றம். இவையே எனது முக்கியத் திட்டங்கள். இவை உட்பட எனது தேர்தல் அறிக்கையில் மொத்தம் 61 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. எனது நலத்திட்ட அறிவிப்புகளைப் படித்து பார்த்துவிட்டு மக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர். தொலைநோக்கு பார்வையுள்ள திட்டங்கள் எனக் கூறுகின்றனர்.
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்ற பிரச்சாரம் தேர்தல் பிரச்சாரத்தைவிட விறுவிறுப்பாக இருக்கிறது? இது குறித்து உங்கள் கருத்து என்ன?
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஓட்டுக்கு பணம் வாங்க மக்கள் விரும்பவில்லை. பணத்தை நீட்டும் கட்சிக்காரர்களைக் கண்டால் மக்கள் எரிச்சல் படுகின்றனர். என்னிடம் நேரடியாக மக்கள் சொல்கின்றனர், "தம்பி.. நாங்கள் உழைக்கிறோம். அதில் பிழைப்பு நடத்துகிறோம். திடீரென்று இவர்கள் வந்து பணத்தை நீட்டுகிறார்கள். நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா?" எனக் கூறுகின்றனர். ஓட்டுக்கு பணம் வாங்க பெரும்பாலான மக்கள் தயாராக இல்லை. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் பணத்தை வாங்கிக் கொள்வதே ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் தலைகுணிவை ஏற்படுத்துகிறது. அதேபோல் இலவசங்களையும் மக்கள் விரும்பவில்லை. அரசியல் கட்சிகள்தான் அவர்கள் மீது திணிக்கிறது. இன்று வாக்குக்கு பணம் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் மே 19-ல் சரியான பாடம் கிடைக்கும். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கிறது.
மக்கள் புகட்டப்போகும் பாடத்தால் இனி அடுத்து வரும் தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பற்றி எந்த ஒரு அரசியல்வாதியும் யோசிக்கக் கூட மாட்டார்கள்.
கஞ்சா கருப்பு பிரச்சாரம் பற்றி சொல்லுங்கள்?
கஞ்சா கருப்பு எனது நெருங்கிய நண்பர். நட்பின் இலக்கணம் அவர். அவர் எனக்காக பிரச்சாரம் செய்வது மிகப் பெரிய பலம். பொதுவாக நட்பு ரீதியாக ஒரு பிரபலர் பிரச்சாரத்துக்கு ஒப்புக்கொண்டாலும்கூட ஏதோ ஓரிரு நாட்கள் உடன் வருவர். ஆனால், நான் பிரச்சாரத்தை துவக்கிய நாள் முதலாகவே கஞ்சா கருப்பு எனக்காக பிரச்சாரம் செய்கிறார். தெருத்தெருவாக, வீடுவீடாக மக்களிடன் எனக்காக வாக்கு சேகரிக்கார். தம்பி உடையான் படைக்கு அஞ்சான். நல்ல நண்பன் உடையான் எதற்குமே அஞ்சான்.
இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
இந்த நாடு இளைஞர்கள் கையில் வர வேண்டும். அதற்கு இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரை:
கோபி ஷங்கர்: மதுரை வடக்கு தேர்தல் களத்தில் இடையலிங்க இளைஞர்!
'என் அடையாளத்துக்கு முதல் அங்கீகாரம்'- ஜெ-வை எதிர்த்து களமிறங்கிய திருநங்கை தேவி பெருமிதம்!
மக்கள் பணிக்காக அமெரிக்க வேலையை தவிர்த்தேன்: மயிலை தொகுதி வேட்பாளர் சுரேஷ்குமார்