தற்சார்பு தொழில் தொடங்க விருப்பமா? ஆதி முதல் அந்தம் வரை அறிவதற்கான ஒன்று கூடல்!
தற்சார்பு தொழிலினை துவங்க உள்ளீர்களா அல்லது ஏற்கனவே இருக்கும் தொழிலை விரிவாக்க திட்டமிட்டுள்ளீர்களா? இயற்கை பொருட்கள் தயாரிப்பாளர்கள், அங்காடி உரிமையாளர்கள், விற்பனையகங்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக பொருட்களை வழங்கும் தளங்களை கொண்டு உள்ளீர்களா? இக்கேள்விகளுக்கெல்லாம் உங்களது பதில் ‘ஆம்’ எனில் உங்களுக்கான நிகழ்வு தான் 'Sphere'.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை ரீட்டெயில் கடைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் 17 பேர் கொண்ட குழுவினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது இந்நிகழ்வு. நிகழ்வில் கடந்த பல ஆண்டுகளாகவே இயற்கையோடு ஒன்றிணைந்து தற்சார்பு வாழ்வியலை முன்னெடுத்து வருபவர்கள், ஒரே மேடையில் ஒன்று கூடுகின்றனர். அப்படியானால் இந்த வல்லுனர்களின் பங்களிப்பு உங்களுக்கு தேவையானதாக அமையும் தானே?

அவர்களது பொருட்களின் மூலப்பொருள் எது? எப்படி அவை உருவாகின்றன? என்பது போன்ற பொருள்கள் குறித்தும் ஆராய வழிவகை செய்யப்பட்டுள்ள அதே நிகழ்வில், தற்சார்புதொழில் புரிய விரும்புபவர்கள் திட்ட அறிக்கை தயார் செய்வது எப்படி என்பது பொருள் தயாரிப்பில் உள்ள சந்தேகங்கள் பல்வேறு பொது தலைப்புகளில் வினவி, விளக்கமான விடை பெற்றுக் கொள்ளலாம்.
‘நிகழ்’ எனும் பெயரில் மறுசுழற்சி செய்யப்படும் பொருட்கள் மட்டும் கொண்டு உள்அரங்க வடிவமைப்பை வழங்கிவரும் ‘சிரட்டை சிற்பி’ என்றழைக்கப்படும் ஆனந்த பெருமாள், தற்சார்பு பயணத்தில் இருப்பவர்களுக்காக அவர்களின் சமூக வலைதளங்களை வடிவமைத்தும், நிர்வகித்து கொடுத்துக் கொண்டு வரும் கீர்த்தனா, துணியினை கொண்டு பொருட்களுக்கு ஏற்ற வகையில் பேக்கிங் தீர்வுகள் கொடுத்து கொண்டுவரும் ‘பால குருநாதன், அச்சு மற்றும் பொதியல் (பேக்கிங்) வடிவமைப்பாளார் அஸ்வின், நம்மாழ்வார் அய்யாவின் நிரந்தர வேளாண்மை என்ற ஆவணப்படத்தை இயக்கிய ‘யா ஸ்டியோ’ வினோத், இந்த கல்வியாண்டின் தமிழக அரசின் அனைத்து பாடப்புத்தகங்களின் முன்பக்க அட்டையை வடிவமைத்த கதிர் ஆறுமுகம், கருப்பட்டியினால் ஆன பாரம்பரிய ஆரோக்கிய திண்பண்டங்களை மீட்டு எடுத்து வரும் ஸ்டாலின், இரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் கைகளால் குளியல் சோப்பை தயாரிக்கும் தியாகராஜன், முளைக் கட்டிய சிறுதானிய சத்து மாவை விற்பனை செய்து வரும் தங்கவேலு, கைநெசவு மற்றும் கை நூற்பினால் ஆன பருத்தி ஆடைகளை செய்துவரும் சிவகுருநாதன், துணியால் செய்யப்பட்ட மாதவிடாய் அணையாடை தயாரிக்கும் அபிராமி பிரகாஷ், சிறுதானிய மாவு வகைகளை தயாரிக்கும் சங்கர சுப்ரமணியன், பிறந்த குழந்தைகளுக்கான தூய பருத்தி ஆடைகளை உருவாக்கும் அருண், சிறுவர்களின் அக உலகை விரியச் செயயும் கற்பனையை சிறகடித்து பறக்க வைக்கும் எளிய கதைகளினை வழி முறையாக கொண்டுள்ள ‘தும்பி’ சிறுவர் மாத இதழின் ஆசிரியர் சிவராஜ், ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இவர்களது கதை கேட்பதற்கான களமாக அமையும் நிகழ்வில் பங்கேற்க மறவாதீர்!

இயற்கை வாழ்வியலை முன்னெடுத்திருக்கும் இவர்களது நிகழ்வு பற்றி, மக்கள் அறியச் செய்யும் பணியை யுவர்ஸ்டோரி தமிழ் செய்வதில் பெருமை அடைகிறது. இச்சிறப்பான நிகழ்வு பங்கெடுக்குப்போருக்கு சிறந்த அனுபவ சேகரிப்பை தரும் என்று நம்புகிறோம். தற்சார்பு விற்பனையகங்களே மற்றும் விற்பனையாளர்களே திரண்டு வந்து நிகழ்வை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இடம்: யாதும் - இயற்கை பொருளகம், 9, சபரிநகர் இரண்டாவது மெயின் ரோடு, போரூர், சென்னை
நாள் - அக்டோபர் 7, 2018 | நேரம் - காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
நிகழ்ச்சியை மேலும் தகவல்களுக்கு : 9952786316