பெண்கள் தொழில் முதலீட்டை ஈர்க்கும் வழிகள் என்ன? மூன்று பெண் தொழில்முனைவர்கள்... மூன்று ஆலோசனைகள்...
ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் வகையில் இயற்கை நியதி மாறினாலே பெண்ணுலகில் மாற்றம் வரும் - பினிதா மகேஸ்வரி
பெண்களைப் பற்றி சில அடிப்படை உண்மைகளை ஆண்கள் அறிந்திருக்கவில்லை - நாங்கள் பன்முகத்தன்மை கொண்ட சூப்பர் ஹீரோக்கள் என்பது அவர்களுக்கு இன்னும் புரியவில்லை - ஆண்ட்ரிலியா தாஸ்குப்தா
நாம் வாழும் சமூகத்தை தொடர்ந்து கவனித்து அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொண்டால் வெற்றி நிச்சயம் - மசூம் மினாவாலா
"இந்த உலகின் கசப்பான உண்மை ஒன்று இருக்கிறது. அது எங்கள் பாலினம் சார்ந்தது. எங்கள் பாலினம் பெண்ணாக இல்லாதிருந்தால் எங்கள் வாழ்வியல் அனுபவங்கள் மிக மிக வித்தியாசமானதாக இருந்திருக்கும். இந்த கடுமையான கோட்பாடு அதன் வீச்சுடன் தொழில் துறையிலும் பரவியுள்ளது. ஆம், தொழில் முனையும் பெண்களுக்கான சவால்கள் அதிகமானது.
பாலைவனச் சோலை போல நிதி செயலாக்கத் துறையில் பெண்கள் தடம் பதிக்கத் துவங்கியுள்ளனர். ஆனால், இதேத் துறையில் இருக்கும் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் அனைவருமே வெவ்வேறு அளவுகோலால் தரம் நிர்ணயிக்கப்படுகின்றனர்" எனக் கூறுகின்றனர் சாதனை மங்கையர் சிலர்.
இங்கே நாம் பார்க்கயிருப்பது சவால்கள் நிறைந்த நிதித் துறையில் சாதித்துக் காட்டிய அந்த மங்கையரின் வெற்றிக் கதை.
ஆண்ட்ரிலியா தாஸ்குப்தா: ஈட், ஷாப், லவ் அமைப்பின் இணை நிறுவனர்.
ஆண்ட்ரிலியா தாஸ்குப்தா, இளம் தொழில் முனைவர். இவர் தொழில்துறையில் கால் பதிக்க நினைத்த வேளையில் நிறைந்த கர்ப்பிணியாக இருந்தார். அப்போது அவரிடம் முதலீட்டாளர்கள் பலரும் எழுப்பிய... "உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? அப்படி என்றால் நீங்கள் உங்கள் குடும்பத்துக்கு தானே?" என்பதே. பெண் என்றால் அவரைப் பற்றி சில முன்முடிவுகளுடனேயே இந்த சமூகம் அவரை அணுகுகிறது எனக் கூறும் ஆண்ட்ரிலியா "இவ்வுலகை ஆண்களுக்கான உலகமாக அவர்கள் மாற்றியிருக்கின்றனர்.
தமது யோசனைகளுக்கு, அறிவாற்றலுக்கு நிது முதலீடு பெறுவது பெண்களுக்கு மிகச் சவாலானது. சிலருக்கு ஆண் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்பட்டு விடுகின்றன. ஆனால், சிறந்த அறிவாற்றல் இருந்தாலும் கூட பெண்களுக்கு சமவாய்ப்பு மறுக்கும் அதர்மம் நடைபெறுகிறது.
என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் என் தொழிலில் சகாவாக என் கணவர் காலடி எடுத்துவைத்தார். அப்போது அதுவரை நான் ஏதோ ஆரம்ப நிலைப் பணிகளை கவனித்துக் கொண்டவராகவும் என் கணவர் வருகையே தொழில் கட்டுமானத்தை மேம்படுத்தும் என்பது போலவும் பேசப்பட்டது.
ஆனால், பெண்களைப் பற்றி சில அடிப்படை உண்மைகளை ஆண்கள் அறிந்திருக்கவில்லை - நாங்கள் பன்முகத்தன்மை கொண்ட சூப்பர் ஹீரோக்கள் என்பது அவர்களுக்கு இன்னும் புரியவில்லை.
இது ஒருபுறம் இருக்கட்டும் பெண்களை வெறும் போகப் பொருளாகப் பார்க்கும் பார்வையும் ஆண் உலகில் சிறிதும் மாறவில்லை. ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஒரு ஆண், ஐ.ஐ.எம் நிறுவனங்களில் இருந்து அழகான, வசீகரமான பெண்களை நான் பார்த்ததில்லை என்றார். நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். அவரது பார்வை என்னை அத்தகைய அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. ஒரு வெற்றி பெற்ற பெண்ணை அவர் உடற்கூறியல் சார்ந்த விமர்சனங்களால் இழிவுபடுத்திவிடுவது சமூக கட்டமைப்பில் பிண்ணிப் பிணைந்துள்ளது" என்றார்.
மசூம் மினாவாலா, ஸ்டைல் பியெஸ்டாவின் உரிமையாளர்:
மசூம் மினாவாலா பாரம்பரியமிக்க குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். மும்பையில் பிறந்து வளர்ந்தார். அவர் வளர்க்கப்பட்ட விதம் அவருக்கும் இந்திய சமூக கட்டமைப்பை மிக நெருக்கமாக அறிவுறுத்தியிருந்தது. இருந்தாலும், கடின உழைப்பை இனிமையான வெற்றியை கொண்டு வரும் என்பதை மட்டும் அவர் நன்றாகவே அறிந்திருந்தார்.
பெண்களுக்கென சில சமூக கட்டுப்பாடுகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் அதற்கு எதிராகவே போராடிக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாகவே எங்களை நாங்கள் அடையாளப்படுத்திக் கொள்ள, நிரூபிக்க இருமடங்கு அதிகமாக உழைக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.
உங்கள் தொழில் யோசனை மீது உங்களது உள்ளார்ந்த தனிப்பட்ட எண்ணங்களின் வெளிபாடு. அதில் தனிநபர் விருப்புகளின் தாக்கம் நிச்சயமாக எதிரொலிக்கும். எனவே, ஒரு பெண் தன் திட்டத்துக்கான மூலதனத்தை பெற முயற்சிக்கும்போது தனது தொழில் யோசனையை முன்வைப்பதற்கு ஈடாக தனது தனிப்பட்ட எண்ணங்களையும் ஒருங்கிணைத்து தெரியப்படுத்துவது அவசியம்.
எனது முதல் முயற்சியின் போது என் முகத்துக்கு நேராகவே முதலீட்டாளர்கள் சில வாதங்களை முன்வைத்தனர். எனது குடும்ப பாரம்பரிய பின்னணி, எனது வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்தலுக்கு நான் வைத்திருக்கும் திட்டங்களைப் பார்க்கும்போது எனக்கு நிதியுதவி செய்வது கடினம் என்றனர்.
ஆனால், நான் என் நிலைப்பாட்டை உறுதிபட எடுத்துரைத்தேன். என் நம்பிக்கையும், நேர்த்தியான அணுகுமுறை என் தொழிலுக்கான நிதி முதலீட்டைப் பெற உதவியது. வேலையையும் - தொழிலையும் நான் எப்படி சமன்பாடு செய்வேன் என்பதை அவர்களுக்கு புரிய வைத்தேன்.
எனவே இளம் தொழில் முனைவர், நிதி முதலீடு கோரும் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கும் முன் சரியான திட்டமிடல் செய்து கொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால் நான் ஒரு சிஇஓ-வை பணியமர்த்துவேன் போன்ற யோசனைகளை அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்" என பல்வேறு யோசனைகளைக் கூறுகிறார்.
பினிதா மகேஸ்வரி- ஏஞ்ஜெல் நெட்வொர்க்- துணைத் தலைவர்
இன்றளவும் நாம் ஒரு ஆணாதிக்க சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனக் கூறுகிறார் பினிதா மகேஸ்வரி. ஒவ்வொரு மாதமும் பல்வேறு முதலீட்டாளர்களை நான் சந்திக்கிறேன். அவர்களில் பலர் தொழில் முனையும் விருப்பத்துடன் வரும் பெண்களுக்கு முன்வைக்கும் கேள்விகள் பல அர்த்தமற்றதாக, அவர்கள் கொண்டு வந்திருக்கும் தொழில் யோசனைக்கு சற்றும் சம்பந்தமில்லாததாக இருக்கிறது.
தொழில் முதலீட்டு உதவி தேடி வரும் பெண்களில் பெரும்பாலோனோர் 20-களில் (20 வயது) இருக்கின்றனர். முதலீட்டாளர்களின் ஒரே சலசலப்பு, "அந்தப் பெண் திருமணம் செய்து சென்றுவிட்டால்...?" என்பதாகவே இருக்கிறது. இதற்கு அந்தப் பெண்ணிடம் பதில் இருக்கலாம். பதில் இல்லாமலும் இருக்கலாம்.
இந்தக் கேள்வி பெண்களின் திறமைகளை சோதிப்பதற்காக மட்டுமல்ல. அவரது எண்ண உறுதி எதை நோக்கி பயணிக்கிறது என்பதை அறிவதற்காகவும் இருக்கலாம். இத்தகைய கேள்வி நியாயமானதா அல்லது நியாயமற்றதா என்பது தனிப்பட்ட விவாத கருப்பொருள். இத்தகைய கேள்விகள் எழுப்புப்படுவதற்கு பெண்கள் மீதான சமூகப் பார்வையே காரணம்.
கார்ப்பரேட் துறையில், பெண்களுக்கான நிலை வேறாக இருக்கிறது. கார்ப்பரேட் உலகில் பெண்கள் அவர்களது தனிப்பட்ட வளர்ச்சியையும், தொழில் சார்ந்த வளர்ச்சியையும் உறுதி செய்ய நிறைய வழிவகைகள் ஏற்படுத்தித் தரப்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களில் இருக்கும் பெண் பணியாளர்கள் இயந்திரங்களின் பற்சக்கரங்கள் போல் உள்ளனர்.
அதே வேளையில் சுய தொழில் முனைவோருக்கான முதலீட்டைச் செய்யும் முதலீட்டாளர்கள் தொழில் முனைவருக்கு தொழிலில் ஏற்படும் நட்டங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது.
இதுவரை எந்த ஒரு தொழில் சார் ஆலோசனைக் கூட்டத்திலும் எந்த ஒரு பெண் முதலீட்டாளரும் பெண் விடுதலை பற்றி பேசி நான் பார்த்ததில்லை. அங்கு நடப்பதெல்லாம் பிசினஸ், பிசினஸ் மட்டுமே.
ஒருவேளை ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் வகையில் இயற்கை நியதி மாறினாலே பெண்ணுலகில் மாற்றம் வரும்" என்றார்.