'காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்க உதவும் ஏஐ' - புது நம்பிக்கை அளிக்கும் ஸ்டார்ட்-அப்'கள்!
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 9,000க்கும் அதிகமான குழந்தைகள் காணமல் போகின்றனர் என்கிறது தரவுகள். அன்புக்குரியவர்களை தொலைத்து இருளில் வாடும் குடும்பத்தாருக்கும், வழக்குகளை முடிக்க முடியாமலிருக்கும் காவல்துறைக்கும் புது நம்பிக்கையைக் கொடுத்துள்ளது ஏஜ தொழில்நுட்பமும், ஏஜ ஸ்டார்ட் அப் நிறுவனங்களும்!
ஒரு மாலைப் பொழுதில் 12 வயதான ஆதித்யா வீடு திரும்பாதபோது, அவனது பெற்றோர்களின் உலகம் தலைகீழாக மாறியது. அன்று மாலைத் தொடங்கி சரியாக 40 நாட்கள், தொலைந்து போன மகனை கண்டறியும் வழித்தேடி பரிதவித்தனர்.
ஆதித்யா போன்று இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 9,000க்கும் அதிகமான குழந்தைகள் காணமல் போகின்றனர்... என்கிறது தரவுகள். அன்புக்குரியவர்களை தொலைத்து இருளில் வாடும் குடும்பத்தாருக்கும், வழக்குகளை முடிக்க முடியாமலிருக்கும் காவல்துறைக்கும் புது நம்பிக்கையைக் கொடுத்துள்ளது ஏஜ தொழில்நுட்பமும், ஏஜ ஸ்டார்ட் அப் நிறுவனங்களும்!
காணாமல் போன குழந்தைகளை அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைப்பதன் மூலமும், குற்றவாளிகளை அடையாளம் காண்பதன் மூலமும் Khoji.in போன்ற எண்ணற்ற AI ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் காவல்துறையினரின் கூட்டாளியாக மாறி, வழக்குகளை துரிதமாக முடிக்க உதவி வருகின்றனர். Khoji.in உதவியுடன் ஆதித்யாவும் வீடு சேர்ந்தான்.
கடந்த ஆண்டு நவம்பரில் தந்தை-மகன் இரட்டையர்களான அபிஷேக் குப்தா மற்றும் துருவ் குப்தா ஆகியோரால் நிறுவப்பட்டது Khoji.in இணையதளம். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பு, துருவ்வின் வயதான மாமா காணாமல் போனார். பல மாதங்களாக அவரைத் தேடி அலைந்ததில் கிடைத்த அனுபவத்தில், உறவுகளை இழந்து தவிப்போருக்கு உதவும் வகையில் கோஜி.இன்-னை நிறுவியுள்ளார்.
தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களில், 2,899 பதிவுகள் போர்ட்டலுக்கு சமர்ப்பிக்கப்பட்டன, இதில் 800-1,000 காணாமல் போன குழந்தைகள் அடங்கும். இத்தளத்தின் உதவியுடன் காவல்துறை அதிகாரிகள் காணாமல் போன வழக்குகளை விரைந்து முடித்து வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இத்தளம் ஒரு கிளிக்கில் காணாமல் போனவர்களை அடையாளம் காணுகிறது. இந்திய அரசாங்கத்தால் காப்புரிமை பெற்ற இத்தளம், பழைய படங்கள் உட்பட காணாமல் போனவர்களின் விவரங்களை பதிவேற்ற பயனர்களை அனுமதிக்கிறது.
"மாமா காணாமல் போனது மிகுந்த உணர்ச்சி மற்றும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. சில மாதங்களுக்குப் பிறகு, எங்கள் மாமா 50 கி.மீ தொலைவில் உள்ள ஒரு அரசு சாரா நிறுவனத்தில் வசித்து வருவதைக் கண்டுபிடித்தோம். அரசு சாரா நிறுவனம் எங்களைத் தொடர்பு கொள்ள முயன்ற போதிலும், சரியான தகவல் இல்லாததால் அது சாத்தியமற்றதாகிவிட்டது," என்று துருவ் நினைவு கூர்ந்தார்.
"ஒரு வயதில் தொலைந்து போய் இப்போது ஏழு வயதாக இருக்கும் ஒரு குழந்தையை கற்பனை செய்து பாருங்கள். எடை அதிகரிப்பு அல்லது முக அம்சங்கள் போன்ற தோற்றத்தில் மாற்றங்கள் இருந்தபோதிலும், AI தொழில்நுட்பத்தினால் அந்தக் குழந்தையை அடையாளம் காண முடியும். பயனர்கள் ஒரு ஐடியை உருவாக்கி அவர்களின் புகைப்படத்தைப் பதிவேற்றலாம். இந்த அமைப்பு அதை அதன் தரவுத்தளத்துடன் ஒப்பிடுகிறது,"
மேலும், ஏதேனும் பொருத்தம் இருந்தால், நீங்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட இடத்தைத் தொடர்பு கொள்ளலாம், அது ஒரு அனாதை இல்லமாகவோ அல்லது அரசு சாரா நிறுவனமாகவோ இருக்கலாம்.
"பல வருடங்களாக காணாமல் போன சில குழந்தைகளைக் கண்டுபிடிக்க Khoji.in உதவியுள்ளது. ஒரு வயது குழந்தை ஒன்று ரயில் நிலையத்தில் கைவிடப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. எங்கள் துறை சமீபத்தில் இந்த தளத்தைப் பயன்படுத்தி 3-4 காணாமல் போனோர் வழக்குகளைத் தீர்த்துள்ளது. இதுவரை சுமார் 150 வழக்குகளுக்கு உதவியுள்ளது," என்று டெல்லி காவல்துறையயை சேர்ந்த ASI அஜய் ஜா கூறினார்.
காணாமல் போனவர்களை கண்டறிய காவல்துறையுடன் கைகோர்த்த ஏஐ ஸ்டார்ட் அப்கள்!
வளர்ந்துவரும் ஏஜ தொழில்நுட்பம் அனைத்து துறைகளுக்குள்ளும் புகுந்து மாற்றங்களை வித்திட்டு வரும் நிலையில், நாட்டில் உள்ள பல மாநில காவல்துறைகளும் காணாமல் போன வழக்குகளை முடிப்பதற்கு ஏஐ-ஐ பயன்படுத்தி வருகின்றன.
தைனிக் பாஸ்கர் ராஜஸ்தான் காவல்துறையுடன் இணைந்து AI-ஐ பயன்படுத்தி காணாமல் போன குழந்தைகள் தொடர்பான வழக்குகளைத் தீர்த்து வருகிறது. அம்மாநில காவல்துறை கிராஃபிக் டிசைனர் சாஹித் SK-வுடன் இணைந்து ஜெனரேட்டிவ் AI-ஐப் பயன்படுத்தி குழந்தைகளின் பழைய புகைப்படங்களை மீண்டும் உருவாக்கியது. சாஹித் உத்தரபிரதேசத்தை தளமாகக் கொண்ட AI- அடிப்படையிலான படைப்பு நிறுவனமான மெகலோடனின் இணை நிறுவனராவார்.
"புகைப்படங்கள் மிகவும் துருப்பிடித்தவை மற்றும் அடையாளம் காண முடியாதவையாக இருக்கும். பிக்காசோ, ஃபோட்டோஷாப் போன்ற தொழில்நுடபங்களை பயன்படுத்தி பழைய படங்களை, அடையாளம் காணும் வகையில் உயிர்ப்பித்து வருகிறோம்," என்று யுவர் ஸ்டோரியிடம் பகிர்ந்தார் சாஹித்.
"ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேல் காணாமல் போன குழந்தையின் நம்பகமான படங்களை மீண்டும் உருவாக்க முடியும். பின்னர், இந்தப் படங்களை காவல்துறையினருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், அவர்களது தேடல் முயற்சிக்கு உதவிகரமானதாகும். இந்த முயற்சியை பெரிய அளவில் செயல்படுத்துவது குறித்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களுடன் பேசி வருகிறோம்," என்கிறார் மெகலோடனின் இணை நிறுவனர் ரஷி அகர்வால். கோஜி.இன் போலவே, இந்த நிறுவனமும் காணாமல் போனவர்களின் புகைப்படங்களை குடும்பங்கள் பதிவேற்றக்கூடிய ஒரு பிரத்யேக வலைத்தளமாகும்.
பிரிந்த உறவுகளை குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைப்பதைத் தவிர, ஏஐ ஸ்டார்ட்அப்கள் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் உதவுகின்றன. குருகிராமை தளமாகக் கொண்ட ஸ்டாக் டெக்னாலஜிஸ், முகம் மற்றும் குரல்களை கண்டுபிடித்து குற்றவியல் வழக்குகளை தீர்ப்பதற்கு பங்காற்றி வருகிறது. ஒவ்வொரு நாளும் 400க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு வருகிறது. கடந்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளில், 30,000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறுகிறது.
"சமீபத்திய வழக்கில், இறந்த ஒரு நபர் உடலில் 30% மட்டுமே அடையாளம் காணக்கூடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். வேறொருவர் இணையதளத்தில் காணாமல் போனவர் புகாரை தாக்கல் செய்திருந்தார். AI உதவியுடன் அந்த நபரை எளிதில் அடையாளம் காண முடிந்தது, இது கொலையாளியை நெருங்க வழிநடத்தியது," என்று ஜா கூறுகிறார்.
காவல்துறையின் நண்பனான ஏஐ!
வழக்குகளை துரிதமாக முடிப்பதற்கு ஏஐ தொழில்நுட்பம் உதவுவதுடன், காவல்துறை அதிகாரிகளின் பணிசுமையையும் குறைத்துள்ளது. 2019ம் ஆண்டுக்கான இந்திய காவல்துறையின் நிலை அறிக்கையின்படி, இந்தியாவில் 44% காவலர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கும் அதிகமாகவும், 24% பேர் 16 மணி நேரத்திற்கும் மேலாகவும் வேலை செய்கிறார்கள்.
"ஒருவர் வயதானபிறகு எப்படி இருப்பார் என்பதைக் காட்சிப்படுத்துவதை AI மிகவும் எளிதாக்கியுள்ளது. தடயவியலில், தோற்றங்களை கணிக்கும் இந்த செயல்முறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் AI அதை சிறப்பாக நெறிப்படுத்துகிறது. தொழில்நுட்பம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
பெங்களூரு போன்ற ஒரு நகரத்தில், காவல்துறையினர் அதிக வேலைப்பளு மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையுடன் உள்ளனர். சம்பளம் குறைவாக உள்ளதால், பல தகுதிவாய்ந்த மக்கள் அதிக ஊதியம் பெறும் தொழில்களைத் தேர்வு செய்கிறார்கள். இதனால் காவல்துறை பலவீனமடைகிறது. இதுபோன்ற சூழ்நிலையில்,தொழில்நுட்ப உதவி பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்" என்று கூறினார் பெங்களூருவில் உள்ள செயிண்ட் ப்ரோசெப் அறக்கட்டளையை நடத்தும் சமூக சேவகர் துஷ்யந்த் துபே.
காவல்துறையில் பெரும்பாலான வழக்குகள் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் நிலுவையில் உறைந்து போகின்றன.
2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி, அன்று சென்னையில் கவிதா என்ற இளம் பெண் காணாமல் போன போது அவருக்கு வயது 2. காவல்துறையினர் சிறுமியைத் தேடியலைந்தும், வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இப்போது, முதல்முறையாக, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர்களது தேடலில் AI ஐ பயன்படுத்துகின்றது. கவிதா காணாமல் போனது குறித்த தகவல்களைச் சேகரிக்க உதவும் வகையில், துண்டுப் பிரசுரங்களில் கவிதாவின் படங்களை போலீசார் மீண்டும் உருவாக்கியுள்ளனர்.
"இந்த புதுப்பிக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம், தற்போது டீனேஜராக இருக்கும் சிறுமி தன்னை அடையாளம் கண்டுகொள்வார் அல்லது ஒரு அனாதை இல்லத்தில் உள்ள ஒருவர் அவரை அடையாளம் காண்பார். இது ஒரு சிறிய வாய்ப்பு, ஆனால் இந்த தொழில்நுட்பம் அவரை மீண்டும் குடும்பத்தாருடன் இணைக்க இது ஒரு மற்றொரு வழியை நமக்கு வழங்குகிறது," என்றார் போலீஸ் அதிகாரி ஒருவர்.