Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஏழு மருத்துவர்களின் உன்னத சேவை ‘வலியில்லா வாழ்வு’

ஏழு மருத்துவர்களின் உன்னத சேவை ‘வலியில்லா வாழ்வு’

Wednesday September 20, 2017 , 3 min Read

வளர்ந்த குழந்தைகள் தான் முதியவர்கள். முதுமை அடைந்த பின் அவர்களின் ஆசைகள் கனவுகள் எல்லாம் நிம்மதியான மரணம் வேண்டும் என்றுதான் எண்ணிக் கொண்டு இருக்கும். முதுமைக்கும் மரணத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் மிக சிலரே..

மதுரை கடச்சனேந்தலில் ஏழு பேரைக் கொண்ட மருத்துவக்குழு ‘ஐஸ்வர்யம் அறக்கட்டளை’ என்ற அமைப்பைத் தொடங்கி மருத்துவ சேவையை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் நிர்வாகிதான் பாலகுருசாமி. அமுத நிலவன், சபரி மணிகண்டன், வித்யா மஞ்சுநாத், அறுவை சிகிச்சை நிபுணர் அருண் குமார், பிசியோ தெரப்பிஸ்ட் ரம்யா, நரம்பியல் நிபுணர் வெங்கடேஷ் ஆகியோர் இதன் முக்கிய தூண்கள்.

7 மருத்துவர்கள் அடங்கிய ஐஸ்வர்யம் குழு
7 மருத்துவர்கள் அடங்கிய ஐஸ்வர்யம் குழு
‘‘குணப்படுத்த முடியாத நோய் தாக்கத்தில் இருப்பவர்கள், இறக்கும் தருவாயில் இருக்கும் யாரும் வலியுடன் மரணிக்கக் கூடாது என்பது எங்கள் நோக்கம்,’’ 

என்கிறார் டாக்டர் பாலகுரு. ‘‘உலகில் பல நாடுகளில் ‘பெயின் ரெஸ்கியூ சென்டர்’ என்று தனியாக மருத்துவ முறையே உள்ளது. இந்தியாவில் இது மிகவும் குறைவு. தமிழகத்தில் சென்னையில் உள்ளது. ஆனால் அது பணம் பெற்று இயங்கும் தனியார் மருத்துவ மையமாகும்.

ஏழு டாக்டர்கள் ஒன்றிணைந்து இந்த இலவசச் சேவையை துவங்கினோம். நான், அமுதநிலவன், சபரி மணிகண்டன், மூவரும் ஒன்றாக மருத்துவக் கல்லூரியில் பயின்றோம். படிக்கும் போதே பல ஊர்களுக்கு சென்று இலவச மருத்துவம் செய்வோம். மருத்துவம் படித்து கொண்டு இருக்கும் போது அமுதநிலவனின் தாயார் புற்று நோய் வந்து இறந்தார். அதுவும் தாங்க முடியாத வேதனையிலும் வலியிலும் பல மாதங்கள் துடித்து மரணித்தார். இப்போது நினைத்தாலும் எங்களால் அந்த வலியை உணர முடிகிறது.

அன்றிலிருந்து வலியுடன் இறக்கும் தருவாயில் இருப்பவர்களை தேடிச்சென்று அவர்களின் வீடுகளில் சிகிச்சை தந்து வருகிறோம். 

ஒரு முறை நண்பர் சபரி மணிகண்டன்.. பார்வையும் சுயநினைவும் இழந்த வயதான மூதாட்டி ஒருவரைச் சொந்த மகனே சாலையில் கொண்டுவந்து விட்டுச் சென்றதைப் பார்த்து, அவரை மீட்டு அவருக்கு சிகிச்சை தந்தார். அடுத்து உடல் முழுவதும் புண் வந்து சீழ் பிடித்த முதியவர் ஒருவரை சந்தித்தோம். இது மாதிரியான பல நிகழ்வுகள் எங்களை பாதித்தது.

image
image


ஒருகட்டிடத்தை வாடகைக்கு எடுத்து பத்து படுக்கைகளை வைத்து மூன்று பொது மருத்துவர்கள், சக்கரை இருதய மருத்துவர், எலும்பு மற்றும் நரம்பியல் மருத்துவர், மனநல மருத்துவர், பிசியோதெரப்பிஸ்ட் என சேர்ந்து எங்களுக்குள் வரக்கூடிய ஊதியத்தில் ஒரு பகுதியை ஒதுக்கினோம்.

வயதாகி நோய்வாய்ப்பட்டு குணப்படுத்த முடியாமல் இருக்கும் மனிதர்கள், வாழ்க்கையோட கடைசி அத்தியாத்தில் இருப்பவர்கள், சாலையோர முதியவர்கள் என நாங்களே தேடிச்செல்கின்றோம். சிலரை வலியில் இருந்து குணப்படுத்தி அவர்களின் வீட்டுக்கு அனுப்புகின்றோம்.

”ஆதரவற்று இறப்பவர்களை நாங்களே மயானத்தில் மகன்களாக இருந்து இறுதி மரியாதையை செய்கிறோம்,” என்கிறார் டாக்டர் வித்யா மஞ்சு.

தொடர்ந்து பேசிய அமுதநிலவன், ‘‘இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் வலியால் துடிதுடித்துச் சாகிறார்கள். அதுவும் தாள முடியாத மரண வலியால். புற்றுநோய், சிறுநீரக முடக்கம், எச்.ஐ.வி. பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி நாட்களை அருகிலிருந்து பார்த்தவர்களுக்கு இந்தக் கொடுமை கொஞ்சம் புரிந்திருக்கும்.

image
image


தாளமுடியாத வலி.. மரண வலி!

பெரும்பான்மையானவர்கள் ஏழைகள். ஒரு கட்டிலுக்கோ, ஒற்றை ‘பாரசிட்டமால்’ மாத்திரைக்கோ வழியில்லாதவர்கள். மலஜலத்தைச் சுத்தம் செய்யக் கூட ஆளில்லாமல், ஒரு விலங்கைப் போலக் கிடப்பவர்கள். அதில் சிலர் ஊனமுற்றோராகவும், பார்வையற்றோராகவும் இருப்பது இன்னும் கொடுமை.

தற்ப்போது இருக்கும் இடத்தில் மொத்தம் நான்கு அறைகள். அதில் மூன்று அறைகளில் படுக்கைகள். ஓர் அறை செவிலியர் நிலையம் மற்றும் சமையலறையாக மாற்றப்பட்டிருந்தது. மருத்துவருக்கெனத் தனி அறை இல்லாததால், நோயாளிகள் படுத்திருக்கும் ஒரு அறையையே பாதியாகப் பிரித்து மேஜை போட்டிருந்தார்கள்.

படுக்கையிலேயே மலங்கழித்துவிட்ட ஒரு முதியவரைச் சுத்தம் செய்து, ‘டயாப்பர்’ மாற்றிக்கொண்டிருந்தார் செவிலியர் ஒருவர். வலி நிவாரணம் அளித்தும் தாங்க முடியாத வேதனையில் முணுமுணுத்துக்கொண்டிருந்தார் ஒருவர்.

102 வயதுப் பாட்டி ஒருவர், குறுகிப்போய் ஏழு வயதுப் பெண் குழந்தையைப் போல வாசலில் உட்கார்ந்திருந்தார். சேலையோ, நைட்டியோ அணிய மறுத்து, சிறு போர்வையை மட்டும் மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். ”அவர் ஒரு குழந்தை சார். கண்ணுகூடச் சிரிக்கும். ‘அங்கே போ.. இங்கே போ.. டிரஸ் போடு’ என்றால் அவருக்குக் கோபம் வரும் சார். அதனால் நாங்கள் தொந்தரவு செய்வதில்லை” என்றார் ஊழியர் வினோத்.

‘‘மருத்துவத்துக்குப் படித்தது சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல என்பதையுணர்ந்த மருத்துவர்கள் கூட்டாக இணைந்து நடத்துகிறோம் தினமும் ஒரு மருத்துவர் வீதம் சுழற்சி முறையில் வந்து நோயாளிகளைப் பார்க்கிறோம்,” என்றனர்.

இரவும் பகலும் செவிலியர்களும் மற்றவர்களும் இருக்கிறார்கள் என்கிறார் டாக்டர் அருண்குமார். தம்மை மருத்துவர்களாக்கிய இந்தச் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்த இளம் மருத்துவர்களின் கூட்டமைப்பு தான் சார் இது. 

ஆரம்பத்தில் கிராமங்கள்தோறும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தினோம். முகாமுக்குக்கூட வர முடியாத நிலையில் வீட்டில் முடங்கிக் கிடந்தவர்களையும் தேடிப்போய் சிகிச்சை கொடுத்தோம்.

முன்பு பள்ளியாக இயங்கிவந்த ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மருத்துவமனையாக்கி நடத்தி வருகிறார்கள். தற்போது நோய் முற்றிய நிலையில் 20 பேர் உள்ளனர். “வலிக்குறைப்பு சிகிச்சை செய்து, இறுதி காலம் வரையில் அவர்களைப் பராமரிப்போம். எதற்கும் பணம் வசூலிப்பதில்லை. எங்கள் சேவையை உணர்ந்து, தேவையான பொருட்களை சிலர் வாங்கித்தந்து விடுகிறார்கள். கிடைக்காத பொருட்களை நாங்களே வாங்கிக்கொள்கிறோம். பெரும்பாலான நோயாளிகள் படுத்த படுக்கையாக இருப்பதால், ‘டயாப்பர்’ காட்டன்கள் தான் அதிகளவில் தேவைப்படுகின்றன, என்கிறார்கள்.

மதுரை திருநகரைச் சேர்ந்த ஜனார்த்தனன், தொலைத்தொடர்புத் துறையில் உதவிப் பொதுமேலாளராக இருந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ஜைலஜா. தங்களது சேமிப்புப் பணத்திலிருந்து மதுரை விளாச்சேரியில் 27.5 சென்ட் இடம் வாங்கி வைத்திருந்தார்கள். வயதாகிவிட்ட சூழலில், நல்ல நோக்கமுள்ள வேறு யாரிடமாவது இதனை ஒப்படைத்துவிடலாம் என்று நினைத்த இவர்கள், இந்த மையத்தைப் பற்றி கேள்விபட்டு நிலத்தை ஒப்படைத்ததுடன், தங்கள் செலவிலேயே பத்திரமும் பதிவுசெய்து கொடுத்திருக்கிறார்கள்.

image
image


இப்போது அதில் கட்டிடம் கட்டும் முனைப்பில் இறங்கியிருக்கிறார்கள், நம் தன்னலமற்ற டாக்டர்கள்.

இவர்களின் இணைய முகவரி: Aishwaryam Trust

கட்டுரையாளர் -வெற்றிடம்