Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'10 ஆண்டுகளில் மனிதர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும்' - பில் கேட்ஸ் எச்சரிக்கை!

AI-இன் அசுர வள்ர்ச்சியால் இன்னும் பத்தாண்டுகளில் மனிதர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை இருக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளார் பில் கேட்ஸ்.

'10 ஆண்டுகளில் மனிதர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும்' - பில் கேட்ஸ் எச்சரிக்கை!

Wednesday April 02, 2025 , 2 min Read

ட்ரெண்டிங்கில் உள்ள 'கிப்லி' வகை கார்ட்டூன் சித்திர படங்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மெகா வளர்ச்சியின் விளைவே என்றும், இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், இன்னும் பத்து ஆண்டுகளில் பல்வேறு துறைகளிலும் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகக்கூடும் என உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Bill gates

பில் கேட்ஸ் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதன் அசுர வளர்ச்சியால் பல்வேறு துறைகளிலும் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. ஜொமேட்டாவில்கூட அதிரடியாக முன்னறிவிப்பு இல்லாமல், 600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு ஏஐ தான் முக்கியக் காரணம் என அதன் முன்னாள் ஊழியர்கள் பலர் சமூகவலைதளங்களில் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இது ஏற்கனவே மற்ற துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரும், ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகில் பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவருமான பில் கேட்ஸ்,

"இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மக்கள் அதிகளவில் வேலை இழக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இன்னும் பத்தாண்டுகளில் வாரத்தின் இரு நாட்கள் மட்டுமே ஊழியர்களுக்கு வேலை இருக்கும் சூழல் உருவாகலாம்," என எச்சரித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தி டுநைட் ஷோ வித் ஜிம்மி ஃபாலோனில் பேசிய அவர்,

“செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு துறைகளிலும் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகக்கூடும். இதனாலேயே வேலைநாட்களும் குறையும். இதற்கு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே காரணம்.

பல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கோலோச்ச தொடங்கிவிட்டது. இப்போது இணையத்தில் பிரபலமாகி வரும், ‘கிப்லி’ வகை கார்ட்டூன் சித்திர படங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் விளைவே.

தொழில்நுட்பத்தை நம்பியே சுழலும் இந்த நவீன யுகத்தில்,

அடுத்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு குறைந்துவிடும் என்பதையே இது பிரதிபலிக்கிறது. மனிதர்கள் இனி "பெரும்பாலான விஷயங்களுக்கு" தேவைப்படாமல் போகலாம், எனத் தெரிவித்துள்ளார்.
bill gates books

இது முதல்முறையல்ல

பில்கேட்ஸ், AI-இன் வளர்ச்சிக் குறித்து இப்படிக் கூறுவது இது முதல்முறையல்ல. 2023ம் ஆண்டு OpenAIன் ChatGPT பிரபலமடைந்த போதும், ‘வாரத்தில் மூன்று நாட்கள் வேலை’ என்ற கருத்தை அவர் முன்வைத்தார். மேலும், அப்போது அவர், ‘வாழ்க்கையின் நோக்கம் வேலைகளைச் செய்வது மட்டுமல்ல," என்றும் தெரிவித்தார்.

பின்னர் அவர், ட்ரெவர் நோவாவின் What Now? பாட்காஸ்டில் ‘முழு வேலை வாரங்களிலிருந்து விடுபட்டவுடன் மக்கள் தங்கள் நேரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை மறு மதிப்பீடு செய்வதன் முக்கியத்துவத்தை’ வலியுறுத்தினார்.

கலவையான கருத்துகள்

பில் கேட்ஸின் இந்த இரண்டு நாள் வேலை நேர மாற்றம் கருத்து ஒருபுறம் இருக்க, நம் இந்திய தொழிலதிபர்களின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது.

சமீபத்தில், இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, உலகளவில் இந்தியா மற்ற நாடுகளுடன் போட்டிப் போட விரும்பினால், இந்தியர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து சர்ச்சையில் சிக்கினார்.

இதேபோல், லார்சன் & டூப்ரோ தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் மேலும் ஒரு படி மேலே சென்று, ‘ஞாயிற்றுக்கிழமைகளில் ஊழியர்களை வேலை செய்ய வைக்காததற்கு வருத்தப்படுவதாக’ முன்பு ஒரு பழைய வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், அதில் அவர் வாரத்திற்கு 90 மணி நேர வேலை’ என்ற கருத்தையும் வலியுறுத்தினார். இதுவும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஜேபி மோர்கன் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் பில் கேட்ஸின் கருத்துக்கு ஒத்துப் போவதுபோல் சமீபத்தில் பேசியுள்ளார். அதாவது, ‘AI வாரத்திற்கு மூன்றரை நாள் வேலை நேரத்திற்கு வழிவகுக்கும்,’ என அவர் கூறியுள்ளார். 

ஜப்பானும் இந்த மாற்றத்தை பரிசோதித்து வருகிறது. டோக்கியோவின் பெருநகர அரசாங்கம் சமீபத்தில் நான்கு நாள் வேலை வார முயற்சியை அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த வேலை நேர மாற்றத்தின் முதன்மை இலக்கு அந்நாட்டில் பிறப்பு விகிதங்களை அதிகரிப்பதை ஆதரிப்பதே என்பது குறிப்பிடத்தக்கது.