ஏஐ உதவியுடன் வீட்டுக்குள் விவசாயம்; ஹைட்ரோபோனிக்ஸில் புதுநுட்பத்தை புகுத்திய சென்னை ஸ்டார்ட்அப்..!
வீட்டைச் செடி, கொடியென பச்சை பசேலென பசுமையாக வைத்திருக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? மாதத்திற்கு 10 கிலோ கீரைகளையே விளைவிக்கும் வகையில் ஸ்மார்ட் ஹைட்ரோபோனிக் அமைப்புகளை உருவாக்கி உட்புற விவசாயத்தில் புதுமையை கண்டறிந்துள்ளது சென்னை நிறுவனம்.
வீட்டைச் செடி, கொடியென பச்சை பசேலென பசுமையாக வைத்திருக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? பெரிய இடமாக இருந்தாலும் சரி, சிறிய இடமாக இருந்தாலும் சரி, வீட்டில் செடிகள் வளர்ப்பது நிச்சயமாக ஒருவரின் மனநிலையை மேம்படுத்துவதோடு, இந்த நகர்ப்புற நிலப்பரப்புக்கு மத்தியிலும் இயற்கையின் அழகியலைச் சேர்க்கிறது. அப்பார்ட்மென்ட்களில் வசிக்கும் சிட்டிவாசிகளுக்கு அவர்களது வீடுகளுக்குள்ளே செடிகளை வளர்ப்பதை ஹைட்ரோபோனிக்ஸ் அமைப்புகள் போன்ற நவீன தோட்டக்கலை உபகரணங்கள் சாத்தியப்படுத்தியுள்ளன.
அதையும் எளிமையாக்கும் வகையில் தாவர வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை நிர்வகிக்கவும், தானியக்கமாக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ஸ்மார்ட் ஹைட்ரோபோனிக் அமைப்புகளை உருவாக்கியுள்ளது 'CROPPICO'. 2024ம் ஆண்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்ட நகர்ப்புற விவசாய ஸ்டார்ட்அப் நிறுவனமான 'க்ராப்பிகோ'-வை தொடங்கினார் ஷாமில் பிச்சா.

எலக்ட்ரானிக்ஸிலிருந்து வேளாண் தொழில்நுட்பம்...
அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் மற்றும் இந்தியாவின் மின்னணுத் துறையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பணியாற்றிய பிறகு, வயநாடு மற்றும் கூர்க்கில் உள்ள அவரது மறைந்த மாமனாரின் காபி தோட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஷாமிலை வந்தடைந்தது. அப்போது கிடைத்த அனுபவம், குறிப்பாக காலநிலை மாற்றம் மற்றும் வளக் கட்டுப்பாடுகளை எதிர்கொண்ட பாரம்பரிய விவசாயத்தின் உள்ளார்ந்த பாதிப்புகளை அவருக்கு வெளிப்படுத்தியது.
இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய்தான் அவரை ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயத்திற்கான பாதையில் செல்லத்துாண்டியது. டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட அவரது தாயாரை ஏதேனும் ஒரு விஷயத்தில் ஈடுபாட்டுடன் வைத்திருக்க செய்வதற்கான வழிகளை தேடி அலைந்து, ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டகலையை கண்டடைந்தார்.
ஹைட்ரோபோனிக்ஸ் வேளாண் என்பது மண்ணில்லா விவசாயமாகும். தாவர வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் அனைத்தையும் நீர் மூலமாக தாவரங்களின் வேர்களுக்கு செலுத்தி விளைச்சலை மேற்கொள்ளும் நவீன முறையாகும்.
"என் அம்மாவை ஈடுபாட்டுடன் வைத்திருப்பதற்காக பல யோசனைகளுக்கு பிறகு, ஒரு வழியாக ஹைட்ரோபோனிக்ஸ் தொடங்கினேன். ஆனால், தற்போதுள்ள தீர்வுகள் மிகவும் கைமுறையானவை மற்றும் சிக்கலானவை என்பதை விரைவில் உணர்ந்தேன்," என்று க்ராப்பிகோவின் நிறுவனர் பிச்சா யுவர்ஸ்டோரியிடம் பகிர்ந்தார்.
இதன் விளைவாக, 2024ம் ஆண்டு நகர்ப்புற விவசாயத்தை எளிமைப்படுத்தவும் மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் நோக்கில், க்ராப்பிகோ ஸ்டார்ட்அப்'பை ரூ.2 கோடி முதலீட்டில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் பங்களிப்பும், ஆதரவுடனும் தொடங்கினார்.

தொழில்நுட்பத்துடன் தாவரங்களை வளர்க்கும் 'ஹோமி'
க்ராப்பிகோவின் முதன்மை தயாரிப்பான 'ஹோமி' (Homie), நான்கு அடுக்கு செங்குத்து அமைப்பைக் கொண்ட ஒரு தானியங்கி ஹைட்ரோபோனிக்ஸ் அமைப்பாகும். இதில் 72 தாவரங்களையும், 80 நாற்றங்கால்களையும் வளர்க்க முடியும். வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக இடங்களுக்கு ஏற்றதான அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
40லிட்டர் தண்ணீரை தேக்கி வைத்து கொள்ளும் முறையில் அமைக்கப்பட்டுள்ள இத்தயாரிப்பு சென்சார் நுட்பத்துடன் நீரின் நிலைகளையும், மறுநிரப்பல் எப்போது என்பதையும் கண்காணிக்கிறது. ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரைச் சுற்றும் ஒரு திட்டமிடப்பட்ட சுழற்சி மூலம் ஹோமி நீர்ப்பாசனத்தை தானியங்குபடுத்துகிறது.
ஹைட்ரோபோனிக்ஸ் வேளாண் சார்ந்த தயாரிப்புகள் சந்தையில் ஏற்கனவே இருந்தாலும், பெரும்பாலானவை பெரிய அளவிலான பண்ணைகளுக்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹோமியின் உருவாக்கம் என்பது பல குழுக்களின் கூட்டு முயற்சியின் பலனாகும். க்ராப்பிகோவின் 10 பேர் கொண்ட குழு, வெளிப்புற மேம்பாட்டுக் குழுவுடன் இணைந்து கட்டுப்படுத்தியை வடிவமைத்தது. ஒரு மென்பொருள் பார்ட்னர் இந்த செயலியை உருவாக்கினார். அதே நேரத்தில், ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் வாடிக்கையாளர் தொடர்புகளை கையாளுகிறது.

சந்தையில் ஹோமியை அறிமுகம் செய்வதற்கு முன்பு, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையின் வெவ்வேறு காலநிலையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அதன் இறுதியில், ஆண்டின் பெரும்பகுதியில் ஏர் கண்டிஷனிங் இல்லாமல் பயிர்களை வெற்றிகரமாக வளர்க்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர். மேலும், உச்ச கோடை மாதங்களில், பயிர் தேர்வை சரிசெய்வதன் மூலம் நிலையான விளைச்சலை கிடைக்க செய்ய முடிகிறது.
ஹோமியில் உள்ள ஸ்மார்ட் சென்சார்கள் pH அளவுகள், ஊட்டச்சத்து செறிவு, வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் ஓட்ட விகிதங்களைக் கண்காணித்து, நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட வளரும் சூழலை உறுதி செய்கிறது. இந்த ஸ்டார்ட் அப் ஒரு FarmAssist செயலியையும் உருவாக்கியுள்ளது. செயலியின் உதவியுடன் வாடிக்கையாளர்கள் அமைப்பில் தண்ணீர், ஊட்டச்சத்துக்கள், விளக்குகள் மற்றும் உரமிடுதல் (நீர்ப்பாசனம் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை நேரடியாக தாவர வேர்களுக்கு வழங்குவதற்கான ஒரு செயல்முறை) ஆகியவற்றை ஒழுங்குபடுத்தலாம்.
இந்த செயலி நிகழ்நேர எச்சரிக்கைகள், தாவர பராமரிப்பு பரிந்துரைகள், அறிவிப்புகள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட விளைபொருட்களின் அடிப்படையிலான உணவு பதார்த்தங்களின் செய்முறைகளை பரிந்துரைக்கிறது.
"விவசாயத்தில் முன் அனுபவம் எதுவும் இல்லையென்றாலும், நகர்ப்புற விவசாயத்தை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதே எங்களது குறிக்கோள். ஆண்டு முழுவதும் புதிய விளைபொருட்களைத் தேடும் குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களே எங்களது இலக்கு," என்கிறார் பிச்சா.
கீரைகள், மூலிகைகளான துளசி, புதினா, கொத்தமல்லி, தைம், காய்கறிகளான போக் சோய், செலரி, அமராந்த் மற்றும் செர்ரி தக்காளி போன்ற பழம்தரும் தாவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தாவரங்களை வளர்க்க ஹோமி உகந்ததாக இருக்கும் அதே சமயம், ஆண்டு முழுவதும் விளைச்சலை அளிக்கிறது. இதன் மூலம், மாதந்தோறும் 10 கிலோ கீரைகளை உற்பத்தி செய்ய முடியும் என்கிறார் பிச்சா.

ஹோமியின் விலையானது நகர்ப்புற வீடுகளுக்கு ரூ.1.25 லட்சமாகவும், கார்ப்பரேட்டுகளுக்கு ரூ.1.45 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், நிறுவனம் அதன் உற்பத்திச் செலவை ரூ.1 லட்சமாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளதாக அதன் நிறுவனர் கூறினார். தற்போது வரை, இந்நிறுவனம் சுமார் 45 ஹோமிகளை நிறுவியுள்ளது. இதன் மூலம் ரூ.30 முதல் 40 லட்சம் வரை வருவாய் ஈட்டியுள்ளது.
கூடுதலாக 25 அமைப்புகளுக்கான முன்பதிவையும் பெற்றுள்ளது. 2025ம் நிதியாண்டின் இறுதிக்குள், வளர்ச்சியை அதிகரிக்க க்ராப்பிகோ 100 ஹோமிகளை நிறுவுவதை இலக்காக வைத்துள்ளது. 500 யூனிட்களை நிறுவியதும், இந்தியாவிலும் உலக அளவிலும் விரிவாக்கத்திற்காக முதலீட்டாளர்களைத் தேட இந்த ஸ்டார்ட் அப் திட்டமிட்டுள்ளது.
"குறைந்தபட்ச பயனர் தலையீட்டில், ஹோமியில் உகந்த தாவர வளர்ச்சியை உறுதி செய்வதற்காக அனுபவம் வாய்ந்த ஹைட்ரோபோனிக் விவசாயிகள் மற்றும் நகர்ப்புற விவசாய நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுவதே எங்கள் வெற்றிக்கான திறவுகோல். உட்புற சூழல்களுக்குள் முழுமையாக தானியங்கியாக செயல்படும் ஹைட்ரோபோனிக்ஸ் சாதனங்களை வழங்கும் ஒரு போட்டியாளரை நாங்கள் இன்னும் சந்திக்கவில்லை," என்று பிச்சா கூறுகிறார்.
Croppico- ன் நோக்கம் ஒரு பொருளை விற்பனை செய்வது மட்டுமல்ல. நகர்புற நுகர்வோர்களுக்கு ப்ரெஷான, வீட்டிலே அவர்களுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதாகும், என்றார்.
தமிழில்: ஜெயஸ்ரீ

இந்திய விவசாயிகளின் சந்தை வீச்சை ஏஐ துணையோடு அதிகமாக்க உதவும் அக்ரி-டெக் ஸ்டார்ட்-அப் Mulyam!