Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

சமையல்காரருக்கு ரூ.1 கோடி; செல்ல நாய்களுக்கு 12 லட்சம் - ரத்தன் டாடா எழுதியுள்ள உயிலில் இருந்தது என்ன?

தன்னுடன் கடைசி வரை இருந்த வீட்டு வேலைக்காரர்கள், உதவியாளர்கள், தான் வளர்ந்த செல்லப்பிராணி என அனைவருக்கும் தனது சொத்தில் எவ்வளவு கொடுக்கவேண்டும் என்று தனது உயிலில் விரிவாக எழுதி வைத்துள்ளார் ரத்தன் டாடா.

சமையல்காரருக்கு ரூ.1 கோடி; செல்ல நாய்களுக்கு 12 லட்சம் - ரத்தன் டாடா எழுதியுள்ள உயிலில் இருந்தது என்ன?

Thursday April 03, 2025 , 5 min Read

பிரபல இந்தியத் தொழிலதிபரும், டாடா அறக்கட்டளைகளின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்தாண்டு அக்டோபர் 9ம் தேதி மும்பையில் காலமானார்.

3800 கோடி டாடா சொத்து

ரத்தன் டாட்டாவிற்கு இந்தியா மட்டுமின்றி, அயல்நாடுகளிலும் அசையும் மற்றும் அசையா சொத்துகள் நிறைய உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.3,800 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சொத்துக்கள் அவரிடம் ரூ.12 கோடி மதிப்புள்ள, 11 கார்கள், 65 கைக்கடிகாரம், 21 கடிகாரம், 52 பேனா மற்றும் சில விலை உயர்ந்த பெயிண்டிங்குகளும் உள்ளன.

ரத்தன் டாடா தன் இளவயதில் ஏற்பட்ட காதல் தோல்விக்குப் பின்னர், தன் வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ளவில்லை. இதனால் அவரது மறைவுக்குப் பின், அவரது ரூ.3,900 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் யாருக்குப் போய்ச் சேரும், யார் அதனை நிர்வகிப்பார்கள் என்ற கேள்விகள் அப்போதே எழுந்தன.

Ratan Tata

அந்தக் கேள்விகளுக்குப் பதிலை ரத்தன் டாடா தன் உயிலில் தெளிவாக எழுதி வைத்து விட்டதாக அப்போதே அவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறினார்கள். ஆனால், அப்போது அவரது உயிலில் என்னென்ன விபரங்கள் இருந்தன என்பது பற்றிய விரிவான தகவல்கள் வெளிவரவில்லை.

இந்நிலையில், தற்போது ரத்தன் டாடா எழுதிய உயில், மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தன் வாழ்நாளில் தன்னுடன் கடைசி வரை இருந்த வீட்டு வேலைக்காரர்கள், உதவியாளர்கள் மற்றும் தான் வளர்ந்த செல்லப்பிராணிகள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் என அனைவருக்கும் தனது சொத்தில் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என தனது உயிலில் ரத்தன் டாடா விரிவாக எழுதி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

24 பேர் கொண்ட பட்டியல்

மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தையே கட்டிய ஆண்டவர் என்பதால், தனது உயிலிலும் அந்த தெளிவை ரத்தன் டாடா காட்டியுள்ளார்.

ரத்தன் டாடா எழுதி வைத்துள்ள இந்த உயிலில், அவரது சகோதரரான ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகளான, ஷிரீன் ஜெஜீபாய் மற்றும் டீனா ஜீஜீபாய், நம்பிக்கைக்குரியவரான மோகினி எம் தத்தா, அவரது உதவியாளர், சமையல்காரர், கார் ஓட்டுநர் என சுமார் 24 பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சிய சொத்துகள், ரத்தன் டாடா பெயரில் தொடங்கப்பட்டுள்ள டிரஸ்டிற்கு சென்றுவிடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிலில் இருக்கும் விபரங்களை யார் நிறைவேற்ற வேண்டும் என்பதைக்கூட ரத்தன் டாடா தெளிவாக எழுதி வைத்திருக்கிறார். மேலும், தானே யாருக்கு எவ்வளவு தர வேண்டும் என்பதைத் தெளிவாக எழுதியுள்ள நிலையில், தனது உயிலில் தான் பிரித்துக் கொடுத்திருக்கும் பங்கிற்கு எதிராக யாராவது நீதிமன்ற உதவியை நாடினால், தான் முன்பு அளித்த அந்த கிடைக்க வேண்டிய பங்கும் அவர்களுக்கு கிடைக்காது, எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

பொதுவாக உயில் என்பது ரத்த உறவுகளுக்காக எழுதப்படும். சமயங்களில் அதில் மற்றவர்கள் பெயர்களும் இடம்பெறும். ஆனால், ரத்தன் டாடா எழுதியுள்ள இந்த உயிலில், அவருடன் சேர்ந்து பயணித்தவர்கள், பல காலகட்டங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என பலரது பெயரும் இடம்பெற்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. பகுதி நேர ஊழியர்கள் மற்றும் செல்லப் பிராணிகளையும் அவர் மறக்கவில்லை. அவர்களுக்கும் குறிப்பிட்ட தொகையை அவர் தன் உயிலில் ஒதுக்கியுள்ளார்.

ratan tata

சமையல்காரருக்கு ரூ.1 கோடி

ரத்தன் டாடாவின் உயிலில் உள்ள சொத்துப் பங்கீட்டில் விபரம் பின்வருமாறு:

  • ரத்தன் டாடாவிடம் சமையல்காரராக இருந்த ராஜன் ஷாவிற்கு 1 கோடி ரூபார் கொடுக்கவேண்டும். மேலும், அவர் வாங்கிய கடன் ரூபாய் 51 லட்சத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

  • ரத்தன் டாடாவின் சமையல் நிர்வாகத்தை கவனித்துக்கொண்ட சுப்பையா கோனாருக்கு ரூ.66 லட்சம் கொடுக்கவேண்டும். மேலும், அவர் வாங்கிய ரூ.36 லட்சம் கடனையும் தள்ளுபடி செய்யவேண்டும்.

  • ரத்தன் டாடாவிடம் கடைசி வரை உதவியாளராக இருந்த சாந்தனு நாயுடு, தனது கல்விக்காக வாங்கிய கடன் ரூ.1 கோடியை தள்ளுபடி செய்யப்படுகிறது.

  • ரத்தன் டாடா உதவியாளர் கில்டருக்கு ரூ.10 லட்சம்.

  • பகுதி நேர ஊழியர்கள் மற்றும் கார் கழுவுபவர்களுக்கும் தலா ரூபாய் 1 லட்சம்.

  • 7 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல், தன்னுடன் வேலை செய்த வீட்டு வேலைக்காரர்களுக்கு தலா ரூ.15 லட்சம்.

  • டிரைவர் ராஜு லியோன் வாங்கிய ரூ.18 லட்சத்தை தள்ளுபடி.

  • பக்கத்து வீட்டுக்காரர் வாங்கிய கடனும் தள்ளுபடி.

  • தான் தள்ளுபடி செய்த இந்தக் கடன்களை, இந்த உயிலை நிறைவேற்றுபவர்கள் மீண்டும் வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்பதையும் தெள்ளத் தெளிவாக தனது உயிலில் பதிவு செய்திருக்கிறார் ரத்தன் டாடா.

  • இந்தச் சொத்துக்கள் தவிர, டாடா சன்ஸ் நிறுவனத்தின் ரூ.1,684 கோடி மதிப்புள்ள 3,368 பங்குகள் ரத்தன் டாடா வசம் இருந்தது. அதில், 70% பங்குகளை ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் அறக்கட்டளைக்கும், மீதமுள்ள பங்குகளை ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் டிரஸ்டிற்கும் தர வேண்டும் எனவும் உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • டாடா சன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்கள் தவிர, மேலே குறிப்பிடப்பட்ட இந்தப் பங்குகளை, வேறு தனிப்பட்ட நபர்கள் எவருக்கும் மாற்றவோ அல்லது விற்கவோ முடியாது.
ratan tata

சகோதர, சகோதரிகளுக்கும் சொத்தில் பங்கு

நேரடியாக பண பரிவர்த்தனைகளை தன்னுடன் வேலை பார்த்தவர்களுக்கு பிரித்துக் கொடுத்துள்ள ரத்தன் டாடா, தனது அசையா சொத்துக்களை உடன்பிறந்தோருக்கு எழுதி வைத்துள்ளார்.

அதன்படி, மும்பை ஜூஹுவில் உள்ள ரூ.16 கோடி மதிப்புள்ள பங்களா மற்றும் அவரது நகைகளை அவரது சகோதரர் ஜிம்மி டாட்டாவிற்கு தர வேண்டும் என தனது உயிலில் அவர் கூறியுள்ளார்.

மீதமுள்ள ரூ.800 கோடி மதிப்புள்ள சொத்தில் மூன்றில் ஒரு பங்கை மோகினி மோகன் தத்தாவிற்கு வழங்க வேண்டும் என்றும், மற்ற இரு பங்குகள் அவரது இரண்டு ஒன்றுவிட்ட சகோதரிகளான, ஷிரீன் ஜெஜீபாய் மற்றும் டீனா ஜீஜீபாய்க்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் உயிலில் தெரிவித்துள்ளார்.

தான் பிரித்துக் கொடுத்த சொத்துக்கள் தவிர, தனது விலையுயர்ந்த கார் மற்றும் ஓவியம் போன்ற மற்ற சொத்துக்களை எடுத்துக் கொள்ள மேற்கூறிய இந்த மூவரில் யாராவது ஒருவர் விரும்பினால், சம்பந்தப்பட்ட அந்தப் பொருளின் மதிப்பை ஆய்வு செய்து அதனை பொது ஏலத்தில் விட்டு, அந்தத் தொகையை மற்ற இருவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும், எனவும் ரத்தன் டாடா கூறியுள்ளார்.

தனது நெருங்கிய நண்பரான மெஹ்லி மிஸ்திரியையும் உயிலில் மறக்கவில்லை ரத்தன் டாடா. தனது அலிபாக் சொத்தையும், லைசென்ஸ் வாங்கி தான் வைத்துள்ள மூன்று துப்பாக்கிகளையும் அவருக்கு கொடுத்துள்ளார் டாடா.

ratan tata

செல்லபிராணிகளுக்காக ரூ.12 லட்சம்

ரத்தன் டாடா தனது செல்லபிராணிகளையும் மறக்காமல், அவைகளுக்காகவும் தனது சொத்தில் சில லட்சங்களை ஒதுக்கியுள்ளார்.

இது தொடர்பாக தனது உயிலில் அவர்,

‘தனது வளர்ப்பு நாயான ஜெர்மன் ஷெபார்டு நாய்க்காக உயிலில் ரூ.12 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.30 ஆயிரம் பராமரிப்பு செலவுக்காகக் கொடுக்கவேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனது மற்றொரு வளர்ப்பு நாயான திடோவை, தனது சமையல்காரர் ராஜன் கவனித்துக் கொள்ள வேண்டும், என்றும் அவர் கூறியுள்ளார்.
ratan tata

பலமுறை உயிலைத் திருத்திய டாடா

 நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது ரத்தன் டாடா எழுதிய முதல் உயில் அல்ல. ஏற்கனவே, கடந்த 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ம் தேதி தனது முதல் உயிலை அவர் எழுதினார். பின்னர், அவற்றில் சில திருத்தங்களைச் செய்து மீண்டும் 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய உயிலை எழுதினார்.

தொடர்ந்து தொழிலில் வளர்ச்சி இருந்த படியால், அவரது சொத்து மதிப்பும் மாறிக் கொண்டே இருந்தது. எனவே, 2022ம் ஆண்டு மீண்டும் ஒரு புதிய உயில் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, தனது முந்தைய உயில்களை ரத்து செய்து விட்டு, புதிய உயில் எழுதினார் ரத்தன் டாடா. பின்னர் அந்த உயிலிலும் அவர் நான்கு முறை திருத்தங்கள் செய்தார்.

தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது 2022ம் ஆண்டு எழுதப்பட்ட அந்த உயில்தான். தனது ஆடிட்டர் திலிப் மற்றும் டாக்டர் போரஸ் கபாடியா ஆகியோர் முன்னிலையில் தான், இந்த உயிலில் ரத்தன் டாடா கையெழுத்திட்டார்.

இந்த உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தனது சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்கும் வேலையை தனது சகோதரிகளுக்கும், டாடா அறக்கட்டளையின் அறங்காவலர் டேரியல் கம்பாட்டாவிடமும் ஒப்படைத்திருந்தார் ரத்தன் டாடா. இதற்காக அவர்களுக்குத் தனியே தலா ரூ.5 லட்சம் சன்மானமும் வழங்கப்படுகிறது.

ரத்தன் டாடா விருப்பப்படி, இந்த உயிலை நிறைவேற்றுவதற்காகத்தான், தற்போது அதனை உறுதிப்படுத்த மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Ratan Tata

நோயல் டாடாவிற்கு ஒன்றுமில்லை

ரத்தன் டாடா தன் சுயநினைவோடு எழுதியுள்ள இந்த உயிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாராவது நீதிமன்றத்திற்கு சென்றால், அந்த நபருக்கு நான் வழங்கிய சலுகைகள் திரும்ப பெறப்படும். இந்த சொத்தில் எந்த உரிமைகளும் அவர்களுக்கு இருக்க முடியாது’ என்பதையும் தனது உயிலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் ரத்தன் டாடா.

ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரரும், தற்போது டாடா அறக்கட்டளைகளின் புதிய தலைவராக பதவி வகித்து வருபவருமான நோயல் டாடா மற்றும் அவரது குழந்தைகளின் பெயர்கள் இந்த உயிலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.