மே 1 முதல் ATM-இல் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்கிறது - ஏன்? எதற்கு? எவ்வளவு?
ஏடிஎம்-இல் பணம் எடுப்பதற்கும், வங்கிக் கணக்கில் உள்ள பேலன்ஸை (இருப்பு) செக் செய்வதற்குமான கட்டணமும், மாற்று வங்கியின் ஏடிஎம் சேவையை பயன்படுத்துவதற்குமான கட்டணமும் உயர்கிறது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
வரும் மே 1, 2025 முதல் ஏடிஎம் இயந்திரத்தில் ஏடிஎம் கார்டு பயனர்கள் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்கிறது. இதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உளள்து.
அதாவது, ஏடிஎம்-இல் பணம் எடுப்பதற்கும், வங்கிக் கணக்கில் உள்ள பேலன்ஸை (இருப்பு) செக் செய்வதற்குமான கட்டணமும், மாற்று வங்கியின் ஏடிஎம் சேவையை பயன்படுத்துவதற்குமான கட்டணமும் உயர்கிறது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
இன்று இந்தியாவின் கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் மக்கள் தங்களது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு செல்லும் இடம் என்றால் அது ஏடிஎம் மையங்கள் தான். வெறும் பணம் எடுப்பதற்கு மட்டுமல்லாது பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த, வங்கிக் கணக்கில் உள்ள பேலன்ஸை செக் செய்வதற்கும் பயனர்கள் ஏடிஎம்-களை நாடுவது வழக்கம்.

ஏடிஎம் வளர்ச்சி
முன்பெல்லாம் வங்கியில் பணம் எடுக்க சம்பந்தப்பட்ட வங்கியின் கிளைக்கு சென்று வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும். அதை எளிதாக்கும் வகையில் அமைந்தது ஏடிஎம் மையங்களின் வரவுகள். இதன் மூலம் வங்கி தரப்பு அதிகாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான தொடர்பு வெகுவாக குறைந்து, ஏடிஎம் இயந்திரத்துக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான தொடர்பு அதிகரித்தது. வெறும் பணம் எடுக்க மட்டுமல்லாது இதில் சாமானிய மக்கள் தங்களது வங்கிக் கணக்கில் உள்ள பேலன்ஸை செக் செய்யவும் முடியும்.
இன்று யுபிஐ, டிஜிட்டல் மொபைல் பேங்கிங் போன்ற முறைகள் பயன்பாட்டில் இருந்தாலும் ‘எவ்வளவு பணம் இருக்குன்னு பாத்து சொல்ல முடியுமா?’ என்ற குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. அதாவது, கோடி கணக்கிலான மதிப்பில் லட்சக் கணக்கிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான டிமாண்ட் என்பது இன்னும் உள்ளது. அதை கருத்தில் கொண்டே வங்கிகள் ஏடிஎம் பயன்பாடு சார்ந்த சேவை கட்டணங்களை அமலில் வைத்துள்ளன.
ஏடிஎம் கார்டு பெற, பணம் எடுப்பதற்கான வரையறை, வங்கிகளின் வரையறையை தாண்டும் போது கட்டணம் பிடித்தல், மாற்று வங்கிகளின் ஏடிஎம் மையங்களை பயன்படுத்தும் போது அதற்கு ‘இன்டர் சார்ஜ்’ கட்டணத்தை சம்பந்தப்பட்ட பயனர்களிடமிருந்து வசூலிக்கும் முறை போன்றவை பயன்பாட்டில் உள்ளது.
இல் பணம் எடுப்பதற்கான கட்டணம் வரும் மே 1, 2025 முதல் உயர்கிறது. குறிப்பாக ஏடிஎம் சேவைகளை அதிகம் சார்ந்திருக்கும் பயனர்களுக்கு தான் இதில் பாதிப்பு அதிகம்.
இதன் தாக்கம் என்ன?
தற்போது பயனர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கணக்குகளில் மாதம் 5 பரிவர்த்தனை வரையில் கட்டணமின்றி ஏடிஎம் சேவையை பயன்படுத்த முடியும். இதே போல பயனர்கள் தங்களுக்கு கணக்கு இல்லாத மாற்று வங்கிகளின் ஏடிஎம் சேவையையும் இலவசமாக பயன்படுத்த முடியும். இந்த எண்ணிக்கை மெட்ரோ நகரங்களில் மாதத்துக்கு 3 பரிவர்த்தனை, மெட்ரோ அல்லாத நகரங்களில் மாதத்துக்கு 5 பரிவர்த்தனை என உள்ளது. இதை பயனர்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் பயன்படுத்த முடியும்.
இந்த எண்ணிக்கையை பயனர்கள் கடக்கும் போதுதான் பயனர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணம் அதிகபட்சம் ரூ.23 வரையில் உயர்வதாக தகவல். இப்போது இந்தக் கட்டண முறை ரூ.21 என உள்ளது.

காரணம் என்ன?
ஏடிஎம் மைய பராமரிப்புக்கு ஆகும் செலவு, அதற்கான பாதுகாப்பு செலவு போன்றவற்றின் அடிப்படையில் இந்தக் கட்டணத்தை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி சேவை கட்டணத்தை உயர்த்துவதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான பரிந்துரையை நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) மேற்கொண்டுள்ளது. கடைசியாக கடந்த 2021-ல் இந்தக் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு கட்டணம் உயர்கிறது?
மே 1, 2025 முதல் இந்த ஏடிஎம் பயன்பாடு கட்டணம் உயர்கிறது. ஏடிஎம் மூலம் பணம் எடுப்பது மாதிரியான நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு ரூ.2 உயர்கிறது. தற்போது இந்தக் கட்டணம் ரூ.21 என உள்ளது. ஏடிஎம் மூலம் பேலன்ஸ் செக் செய்வது மாதிரியான நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ.1 உயர்ந்துள்ளது. இந்த கட்டணம் ரூ.6-ல் இருந்து ரூ.7 என உயர்கிறது.
யாருக்கு பாதிப்பு?
ஏடிஎம் உள்கட்டமைப்பு சேவையை பெரிய அளவில் கொண்டிருக்காத சிறு குறு வங்கிகளின் பயனர்கள், ரெகுலராக ஏடிஎம் சேவைகளை பயன்படுத்தும் பயனர்கள் ஆகியோரை இந்த புதிய கட்டண உயர்வு பெரிய அளவில் பாதிக்க செய்யும். இதனால் மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இந்த கட்டண உயர்வு அவர்களை டிஜிட்டல் பேமென்ட் சார்ந்து மடைமாற்றவும் செய்யும், என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Edited by Induja Raghunathan