இளம் வயதில் காலை இழந்தும் நம்பிக்கையால் நடனம், நடிப்பில் ஜொலிக்கும் சுதா சந்திரன்!
இந்திய பரதநாட்டியக் கலைஞர், இந்திய மொழி திரைப்படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் நடித்த பிரபல நடிகை, நடன நிகழ்ச்சிகளில் நடுவர் என பன்முகத் திறமையாளராக வலம் வருபவர் சுதா சந்திரன். வாழ்வில் அடுத்தடுத்து வெற்றிகளை ருசி கண்டவர் என மேம்போக்காக அவரது வாழ்க்கையைப் பார்த்தால் அது தவறு.
தான் சந்தித்த சோதனைகளை சாதனையாக்க அரும்பாடுபட்டவர் சுதா சந்திரன். நடனத்திற்கு கால்கள் தான் முக்கியம் என்ற மாயையை உடைத்து, மனம் நன்றாக இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் நடனமாட முடியும் என வாழும் உதாரணமாக இருப்பவர் சுதா சந்திரன்.
“நம் மனம்தான் நம் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம். நம்மால் நிச்சயம் முடியுங்கிற மனோபாவத்தை வளர்த்துக்கிட்டா நம்மால், எதையும் சாதிக்க முடியும் என்பது என் வாழ்க்கை எனக்கு சொல்லிக் கொடுத்த பர்சனல் பாடம்,” என்கிறார் சுதா சந்திரன்.
சுதா சந்திரன் 1965ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி மும்பையில் பிறந்தார். மும்பையில் பிறந்தாலும் இவரது பெற்றோரின் பூர்வீகம் தமிழகம். இதனால் தமிழ் சரளமாக இவர் நாக்கில் விளையாடுகிறது.
சுதா சந்திரனுக்கு மூன்று வயது இருக்கும்போது அவருக்குள் இருந்த நடனத் திறமையை அவரது பெற்றோர் கண்டறிந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து உரிய நடன வகுப்புகளுக்கு அவர் அனுப்பப்பட்டார். பின்னர் அரங்கேற்றம் முடித்த அவர், நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடத் தொடங்கினார்.
சந்தோசமாகச் சென்று கொண்டிருந்த அவரது வாழ்வில் எதிர்பாராத விபத்து ஒன்று ஏற்பட்டது. 1981-ம் ஆண்டு புனிதயாத்திரை சென்றபோது எதிர்பாராதவிதமாக திருச்சி அருகே விபத்தில் சிக்கினார் சுதா சந்திரன். அப்போது, அவரது வலதுகாலின் ஒருபகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
ஆனாலும், அவர் தன் நம்பிக்கையை இழக்கவில்லை, நடனத்தையும் விடவில்லை. ஜெய்ப்பூரில் செயற்கைக் காலைப் பொருத்திக் கொண்டு, தனது நடன நிகழ்ச்சிகளை அவர் தொடர்ந்தார். முன்பைவிட, இன்னும் அதிக உத்வேகத்தோடு நடனம் ஆட ஆரம்பித்தார் சுதா சந்திரன்.
“விபத்தில் காலை இழந்தபோது, உடல் மற்றும் மன வலியால் துடிச்சுப்போனேன். ஆனா, பெற்றோர் மற்றும் நான் நேசித்த நடனம் கொடுத்த உத்வேகத்துல பிரச்னையை எதிர்த்து மன தைரியத்துடன் போராட ஆரம்பிச்சேன். ‘செய் அல்லது செய்துமடி'தான் பொதுவான பாலிஸி. எனக்குமட்டும் விதிவிலக்காகுமா. நெவர். அதனால நடந்ததை நினைச்சு வருந்துவதைவிட, எதிர்காலம் சிறப்பாக அமைய தேவையான முயற்சிகளைச் செய்ய நினைச்சேன்,” - சுதா சந்திரன்.
கால் இல்லாமல் எப்படி நடனம் ஆட முடியும் என்ற கேள்விகளுக்கு பதிலாய் இருந்தது அவரது அதிரடி நடனம். இந்தியா மட்டுமின்றி நாடுகள் தாண்டியும் ஐரோப்பா, கனடா மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் சுதா சந்திரன்.
“இப்போது இருக்கிறமாதிரியெல்லாம் என் இளமைக் காலத்துல திறமையை வெளிப்படுத்த நிறைய சேனல்கள் மற்றும் மீடியா வெளிச்சம் இருக்கும் மேடைகள் கிடையாது. அதனால ரொம்பவே கஷ்டப்பட்டுதான் எங்க திறமைகளை வெளிப்படுத்தினோம். அதெல்லாம் பெரிய போராட்டம்தான். வெற்றிகள் கிடைக்கிறது கஷ்டம். அதை தக்கவெச்சுக்கிறது அதைவிடக் கஷ்டம்.”
நடனத்தின் மீது தீராக் காதல் கொண்டு, அதனை தீவிரமாகக் கற்று வந்த போதும், படிப்பையும் அவர் கைவிடவில்லை. பள்ளிப் படிப்பை முடித்து, மித்பாய் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பு, அதன் பிறகு எம்.ஏ. பொருளாதாரவியல் என பள்ளி, கல்லூரி படிப்பை மும்பையிலேயே முடித்துக் கொண்டார்.
1984-ம் ஆண்டு வெளி வந்த மயூரி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாகும் வாய்ப்பு சுதா சந்திரனுக்கு கிடைத்தது. இந்தத் திரைப்படம் 1986-ம் ஆண்டு நாச்செ மயூரி என்ற பெயரில் இந்தியில் ரீ மேக் செய்யப்பட்டது. மயூரி திரைப்படத்திற்காக 1986-ம் ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு ஜூரி விருதையும் சுதா சந்திரன் பெற்றார்.
அந்த விருது கொடுத்த உத்வேகத்தில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, போஜ்பூரி என பல மொழிப் படங்களில் அவர் நடித்தார்.
“என் சோதனைக் காலத்தை எளிதாகக் கடக்க உதவியது என் டான்ஸ் மற்றும் ஆக்டிங். இந்த இரண்டையும் எக்காலத்துலயும் விட்டுக்கொடுக்க நான் தயாரில்லை. அதனால தொடர்ந்து இளமைக் காலத்திலிருந்த அதே உத்வேகத்தோடு நடிச்சுக்கிட்டிருக்கேன்."
திருமணத்திற்குப் பிறகு வெள்ளித்திரையில் இருந்து சுதா சந்திரனின் கவனம் சின்னத்திரை பக்கம் திரும்பியது. அதனைத் தொடர்ந்து பல மொழிகளில் சீரியல்களில் அவர் நடித்தார். நடிப்பு, டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவர் என 30 வருடங்களுக்கும் மேலாக அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்து வருகிறது.
நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், மாதத்தில் குறைந்தபட்சம் இரண்டு பெரிய கச்சேரிகளிலாவது ஆடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் சுதா சந்திரன். அதற்கான காரணமாக அவர் கூறுவது இதைத் தான்.
“டான்ஸ்தான் என் வாழ்க்கை. அதுதான் சுவாசம். அதனால்தான் எனக்கான அடையாளத்தைப் பெற்றிருக்கேன். கஷ்டச் சூழல்கள்லேருந்து மீண்டு வர உதவினதும், இப்போவரை நான் ஆக்டிவா இருக்கவும் உதவுறது டான்ஸ்தான். இது இல்லாத ஒரு வாழ்க்கையை நினைச்சுப் பார்க்க முடியாது. என் இடைவிடாத டான்ஸ் பயணம்தான், 'உன்னால டான்ஸ் ஆட முடியுமா'னு கேட்ட பலருக்கும் பதில்,” என கூறுகிறார்.
போட்டோ உதவி: சுதா சந்திரன் ஃபேன்கிளப் ஃபேஸ்புக் பக்கம்