உயிர்களை காக்கும் ட்ரோன் வடிவமைத்த 14 வயது மாணவனுடன் அரசு ரூ.5 கோடிக்கு ஒப்பந்தம்!
குஜராத் க்ளோபல் சம்மிட்டில் எல்லாரையும் திரும்பி பார்க்கவைத்தவர் 14 வயதான ஹர்ஷவர்தன் ஜாலா. அவருடன் குஜராத் அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 5 கோடிக்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஹர்ஷவர்தன் உருவாக்கியுள்ள ட்ரோன் வகைகளை வர்த்தக முறைக்காக பயன்படுத்தும் வழிகளை கண்டறியப்படும். 10-ம் வகுப்பு படிக்கும் இவர் ட்ரோனின் ப்ரோடோடைப் மாதிரியை ஏற்கனவே வடிவமைத்துள்ளார்.
ஹர்ஷவர்தன் உருவாக்கிய ட்ரோன் கொண்டு பல உயிர்களை காக்கமுடியும். போர் பகுதிகளில் உள்ள கண்ணி வெடிகளை கண்டுபிடித்து செயலிழக்க செய்துவிடும். இந்த ஐடியா தனக்கு வந்ததை பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவில் பேசிய ஹர்ஷவர்தன்,
”நான் டிவி பார்த்துக்கொண்டிருந்த போது எனக்கு இந்த எண்ணம் தோன்றியது. நம் போர் வீரர்கள் பலர் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை கைகளால் செயலிழக்க செய்யதபோது உயிரிழந்த செய்தியை பார்த்து அதற்கு தீர்வு காண முடிவெடுத்தேன்,” என்றார்.
NDTV பேட்டியில் கூறிய ஹரிஷவர்தன்,
“நான் முதலில் நிலக்கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் ரோபோ ஒன்றை உருவாக்கினேன். ஆனால் ரோபோவின் எடை அதிகமாக இருந்ததால் அதுவே அந்த வெடியை வெடிக்க செய்து பாதிப்பை அதிகரிக்கும் என்று அறிந்தேன். அதனால் தூரத்தில் இருந்து கண்ணி வெடியை கண்டுபிடித்து, செயலிழக்கச் செய்யும் ட்ரோன் ஒன்றை வடிவமைத்தேன்,” என்றார்.
இவர் உருவாக்கிய மூன்று மாதிரி ட்ரோன்களின் செலவு ரூ.5 லட்சம் வரை ஆகியுள்ளது. இரண்டு மாதிரிகளுக்கு 2 லட்சம் ரூபாய் செலவை ஹர்ஷவர்தனின் பெற்றோர் அளித்துள்ளனர். மூன்றாவது மாதிரியின் செலவை குஜராத் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
”இந்த ட்ரோனில் இன்ப்ராரெட், ஆர்ஜிபி சென்சார் மற்றும் தெர்மல் மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. 21 மெகா பிக்சல் கேமராவுடன் மெக்கானிகல் ஷட்டருடன் இது துல்லியமான படங்களை எடுக்க வல்லது. இந்த ட்ரோன் 50 கிராம் எடை வரை உள்ள வெடிகுண்டை எடுத்துச்சென்று நிலக்கண்ணி வெடிகளை தகர்த்து விடும்.”
நிலத்தில் இருந்து இரண்டு அடி மேலே பறக்கும் இந்த ட்ரோன் எட்டு சதுர மீட்டர் அளவு சுற்றும். ஒரு வெடியை கண்டறிந்தவுடன், அதுபற்றிய செய்தியை பேஸ் ஸ்டேஷுனுக்கு தகவல் கொடுக்கும். ஹர்ஷவர்தன், ‘Aerobotics’ என்ற பெயரில் தன் நிறுவனத்தை தொடங்கி பதிவு செய்துள்ளார். இவரின் அப்பா ஒரு அக்கவுண்டண்ட் மற்றும் தாயார் இல்லத்தரசி. கூகிள் தலைமையகத்தை அமெரிக்கா சென்று பார்வையிட்ட ஹர்ஷவர்தன் தன் தயாரிப்பிற்கு காப்புரிமை வாங்க முடிவு செய்தார்.
குஜராத்தில் பிறந்து வளர்ந்துள்ள இந்த சிறுவனின் ஆர்வம் அறிவியலில் அடங்கியுள்ளது. தன் அறிவை நாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் செலுத்தியுள்ளது பலருக்கும் ஊக்கத்தை நிச்சயம் தரும்.
கட்டுரை: Think Change India