2.13 லட்சம் ஃபாலோயர்களுடன் மாதம் 10,000 டாலர்கள் ஈட்டும் ஏஐ மாடல் அழகி எமிலி!
சமூக வலைதளத்தில் ஒரு இன்ஃப்ளூயன்ஸராக எமிலி ஏஐ மாடல் அழகி 2.13 லட்சம் ஃபாலோயர்களுடன் மாதம் 10,000 டாலர்கள் ஈட்டி கவனம் ஈர்த்த கதை இது.
சமூக ஊடகத்திலும் ஆன்லைன் கன்டென்ட் உருவாக்கத்திலும் பேரதிர்வுகளை உருவாக்கி வரும் ‘எமிலி’ என்னும் செயற்கை நுண்ணறிவு மாடல் அழகியைச் சந்திக்கலாம் வாருங்கள்.
எமிலி பெல்லெக்ரினி (Emily Pellegrini) என்ற 23 வயதான மெய்நிகர் உலகில் செல்வாக்கு செலுத்தும் நாயகி, ‘சராசரி ஆணின் கனவுக் கன்னி’ என்னும் உருவகமாக சுருக்கமாக வடிவமைக்கப்பட்டவர். எமிலியை சாதாரண சமூக ஊடக ஆளுமையாக மட்டுமே கருதி விடவேண்டாம்.
செயற்கை நுண்ணறிவின் உருவாக்கமான எமிலி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிப்பவர். இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் இவரைப் பின் தொடர்பவர்கள் மட்டும் 2 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் அதிகம்.
எமிலியின் தனித்துவக் கவர்ச்சி மற்றும் யதார்த்தமான ஆளுமை ஆன்லைன் ‘கன்டென்ட்’ விற்பனை மூலம் $10,000 வருவாய் ஈட்ட வழி வகுத்துள்ளது என்றால் எமிலியின் தன்மையை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஃபேன்வியூ (Fanvue) என்னும் சந்தா அடிப்படையிலான கன்டென்ட் பகிர்வுத் தளத்தில்தான் இது சாத்தியமாகியுள்ளது.
எமிலியின் கதை
செயற்கை நுண்ணறிவு அழகி எமிலியின் கதை சுவாரஸ்யமானது. முடிந்த வரை நிஜ நபர் போல் உயிரோட்டம் உள்ளவராகவும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணமும் உருவாக்கப்பட்டுள்ளார். எமிலியைப் படைத்தவர் பெயர் தெரியவில்லை.
ஆனால், ஒரு சிற்பி போல் நிஜ வாழ்க்கை முக பாவனைகள், உடல் அசைவுகள், ஒட்டுமொத்தமாக காட்சி வெளிப்பாடுகள் ரியல் லைஃப் போலவே அமைய, நீண்ட நேரங்களை அர்ப்பணித்துள்ளார் என்பது திண்ணம்.
பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டதால்தான் இன்று எமிலி பரந்துபட்ட பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது என்பதோடு, அவர்களின் விருப்பத்திற்குரிய செயற்கைப் பாவையாகவும் எமிலி திகழ்கிறாள்.
எமிலியைப் படைத்தவரின் கடின உழைப்பு பலன் தந்தது. அதிகமாக இவரைப் பின் தொடர்பவர்களை ஈர்த்தது. இதோடு பல்வேறு உயர்குடி நபர்களையும் எமிலி பக்கம் ஈர்க்கச் செய்துள்ளது. பிரபல கால்பந்து வீரர்கள், MMA மல்யுத்தர்கள் மற்றும் பில்லியனர்கள் உள்ளிட்ட பிரபலங்களிடமிருந்து அவர் ‘டேட்டிங்’ அழைப்புகளைப் பெற்றுள்ளார்.
இந்த உயர்குடிப் பெரும்புள்ளிகள் மெய்நிகர் எமிலியை ரியல் எமிலி என்று நினைத்து ஏகப்பட்ட ஜொள் மெசேஜ்களை அனுப்பிய வண்ணம் இருந்து வருகின்றனர். அதோடு திருமணம் செய்து கொள்ளவும், டேட்டிங் அழைப்பும் எமிலிக்கு இந்தப் பெரும்புள்ளிகளிடமிருந்து குவிந்தன.
இது சமூக ஊடக செல்வாக்கின் துறையில் AI ஏற்படுத்தக்கூடிய குறிப்பிடத்தக்க தாக்கத்தை எடுத்துக் காட்டுகிறது.
இந்த ட்ரெண்ட் சொல்வது என்ன?
எமிலி பெல்லெக்ரினி என்னும் இந்த செயற்கை நுண்ணறிவுப் படைப்பு, சமூக ஊடகங்களின் வளர்ந்து வரும் ஊடகவெளியில் ஒரு பரந்த போக்கை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இங்கு AI அதிக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.
துபாயில் நடந்த 1 பில்லியன் ஃபாலோயர்கள் உச்சி மாநாட்டில் இந்த வளர்ச்சி சிறப்பிக்கப்பட்டது. இது சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் கலந்துகொண்ட ஒரு மாபெரும் நிகழ்வாகும்.
இந்த உச்சி மாநாடு சமூக ஊடகங்களில் AI-இன் குறிப்பிடத்தக்க தாக்கத்தை விவாதித்தது. உள்ளடக்க உருவாக்கம் மற்றும் ஈடுபாட்டை வளர்க்கும் உத்திகளில் புரட்சியை ஏற்படுத்தும் அதன் திறனைக் குறிப்பதாக அமைந்தது இந்த விவாதம்.
எமிலியின் வெற்றிக் கதை, இன்ஃப்ளுயென்சர் பொருளாதாரத்தில் AI-இன் வளர்ந்து வரும் சக்திக்கு ஒரு சான்றாகும். இது கன்டென்ட் உருவாக்கம் மற்றும் இன்ஃப்ளூயன்ஸர் மார்க்கெட்டிங் ஆகியவற்றின் பாரம்பரிய விதிமுறைகளில் இருந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மெய்நிகர் கதாபாத்திரம் ஒரு பெரிய ஃபாலோயிங்குகளையும் கணிசமான வருவாயையும் குவித்து, வழக்கமான இன்ஃப்ளுயென்சர் மாடலுக்கு சவால் விடுக்கிறது.
இருப்பினும், இந்த AI-இன் எழுச்சியானது டீப்ஃபேக்குகள் அல்லது பிற நெறிமுறையற்ற பயன்பாடுகள் போன்ற தொழில்நுட்ப துஷ்பிரயோகங்களின் சாத்தியங்கள் பற்றிய கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சவால்கள் ஒருபுறம் இருந்தாலும், சமூக ஊடகத் துறையில் கன்டென்ட் கிரியேஷன் மற்றும் சமூக ஊடக ஆளுமைகளுடன் உரையாடுதல் போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் டிஜிட்டல் வெளியில் பன் மடங்கு விரிவடையவே செய்யும் என்பதையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
மூலம்: Nucleus_AI
Edited by Induja Raghunathan