70 ஆண்டுகளில் 30 ஆயிரம் பாடல்கள்: காலத்தால் மறக்க முடியா ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ லதா மங்கேஷ்கர்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது இசை ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எளிய குடும்பத்தில் பிறந்து, தனது திறமையால் உலகப் புகழ் பெற்றவரான லதா மங்கேஷ்வர் பல உயரிய விருதுகளைப் பெற்றவர்.
இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. எவ்வளவு பெரிய கூட்டத்தையும் இசையால் சுலபமாகக் கட்டிப் போட முடியும். அப்படித்தான் தன் கானக் குயிலால் ரசிகர்களைக் கவர்ந்து, அவர்களது உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்தவர் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர்.
உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட லதா மங்கேஷ்கர், மத்திய பிரதேசத்தில் இந்தூர் அருகில் உள்ள சிக் மொகல்லா என்ற இடத்தில் 1929-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி பிறந்தவர். மராத்தி மற்றும் கொங்கனி இசைக்கலைஞரான தீனநாத் மங்கேஷ்கரின் மூத்த மகளாகப் பிறந்த அவருக்கு, பெற்றோர் வைத்த பெயர் ஹேமா ஆகும்.
லதாவின் தந்தை தீனாநாத் நாடக நடிகரும், பாடகரும் ஆவார். சொந்தமாக நாடகக் குழுவும் வைத்திருந்தார். அவரது நாடகங்களில் ஒன்றான பாவ்பந்தனில் லத்திகா என்ற பெண் கதாபாத்திரத்திற்குப் பிறகு, ஹேமா என்ற பெயரை மாற்றி பெற்றோர்கள், லதா எனப் பெயரிட்டனர். லதாவின் முன்னோர்கள் மங்கேஷி என்ற கிராமத்திலிருந்து வந்தவர்கள் என்பதால், மங்கேஷ்கர் என்பது குடும்பப் பெயரானது.
தந்தை நாடகக் குழு வைத்திருந்ததால், சிறு வயதிலேயே நடிக்கும் வாய்ப்பு லதாவுக்கு கிடைத்தது. தனது ஐந்து வயதில் தந்தையின் இயக்கத்தில் மராத்தி இசை நாடகமொன்றில், நாரதர் கதாபாத்திரத்தில் நடித்தார் லதா. பள்ளிக்குச் சென்று முறையான கல்வி பெறாத லதா மங்கேஷ்கர், சிறு வயதிலேயே பிரபல பாடகர் கே.எல்.சைகலிடம் இசையால் ஈர்க்கப்பட்டார். எனவே, அமாநத் கான், பண்டிட் துளசிதாஸ் ஷர்மா மற்றும் அமான் அலி கான் சாஹிப் ஆகியோரிடம் பாரம்பரிய இசையை முறைப்படி கற்றார்.
1934ல் பேசும் சினிமாப் படங்கள் அதிக அளவில் வரத் தொடங்கியதால், நாடகங்களுக்கு வசூல் குறைந்தது. அதனால் லதாவின் குடும்பம் சிரமத்திற்கு ஆளானது. 1942ம் ஆண்டு லதாவுக்கு 12 வயதான போது, அவரது தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். லதாவின் தம்பியும் எலும்புருக்கி நோயினால் பாதிக்கப்பட்டார். இதனால் சிறு வயதிலேயே தனது குடும்பப் பொறுப்பை லதா ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில் நவ்யுக் சித்ரபட் திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளரும், மங்கேஷ்கர் குடும்பத்தின் நெருங்கிய நண்பருமான மாஸ்டர் விநாயக் லதா குடும்பத்தாரைக் கவனித்துக் கொண்டார்.
சினிமா வாய்ப்பு
ஏற்கனவே நடிப்பு மற்றும் பாடல் பாடும் அனுபவம் இருந்ததால், மாஸ்டர் விநாயக் உதவியுடன் சினிமா வாய்ப்பு லதாவிற்கு கிடைத்தது. 'நவ்யுக் சித்ரபட் மூவி கம்பெனி' சார்பில் 1942ல் எடுக்கப்பட்ட "பஹிலி மங்கலா கர்" என்ற மராத்தி மொழித் திரைப்படத்தில் பாடவும், நடிக்கவும் லதாவிற்கு வாய்ப்பளித்தார் விநாயக். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் துணை நடிகையாக சுமார் ஒன்பது படங்களில் நடித்தார்.
1942ம் ஆண்டு வசந்த் ஜோக்லேகரின் மராத்தி திரைப்படமான “சட்டிஹாசல்” என்ற மராத்தி படம் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனார். இப்படத்தில் சதாசிவ்ராவ் நெவ்ரேக்கரால் இசையில் "நாச்சு யா கதே, கேலு சாரி மணி ஹவுஸ் பாரி" பாடலை லதா பாடினார் , ஆனால், அந்தப் பாடல் இறுதிக் கட்டத்திலிருந்து கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1943ல் "கஜாபாவ்" என்ற மராத்தி மொழித் திரைப்படத்தில் ’மாதா ஏக் சபூத் கி துனியா பதல் தே து...’ என்ற பாடல் தான் இவர் பாடிய முதல் இந்தி பாடலாக அமைந்தது.
1948ல் குலாம் ஹைதர் இசையில் வெளிவந்த "மஜ்பூர்" திரைப்படம், லதாவின் திரையிசை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. 1949ல் அசோக் குமார், மதுபாலா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படமான "மஹல்" திரைப்படத்தில் இவர் பாடிய "ஆயேகா ஆயேகா" என்ற பாடல் லதாவை ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாக்கியது. இதனைத் தொடர்ந்து,
’பர்ஸாத்’, ’தீதார்’, ’பைஜு பாவ்ரா’, ’அமர்’, உரன் கட்டோலா, ’ஸ்ரீ 420’, ’தேவ்தாஸ்’, ’சோரி சோரி’, "’தர் இந்தியா’ என 50களிலும், ’முகல் ஏ ஆஸம்’, தில் அப்னா அவுர் ப்ரீத் பராய், ’பீஸ் ஸால் பாத்’, ’கைடு’, "’வல் தீப்’, ’ கோன் தி?’ ’மேரா சாயா’ என 60களிலும் தொடர்ந்தது இவரது வெற்றிப் பயணம்.
1963ல் ஜனவரி 26 அன்று தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய தேசபக்தி பாடலான "ஏ மேரே வதன் கே லோகோன்" என்ற பாடலைக் கேட்டு அன்றைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு கண்கலங்கினார். 1962ல் நடந்த இந்தியா - சீனா போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்காக இந்தப் பாடலை லதா மங்கேஷ்கர் அர்பணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடித் தமிழ்ப்படங்கள்
லதாவின் குரலுக்கு ரசிகர்கள் மயங்கியதால், மராத்தி தாண்டி பிற மொழிகளிலும் அவருக்கு பாடும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஏராளமான இந்திப்பாடல்களை பாடி உலகம் முழுவதும் பிரபலமடைந்த லதா, 1987ம் ஆண்டு ஆனந்த் படம் மூலம் தமிழிலும் பாடத் தொடங்கினார்.
அதற்கு முன்னதாக 1952ம் ஆண்டு மெகபூப் கானின் ஆன் படம் தமிழில் டப் செய்யப்பட்ட போது, அதில், ‘இழந்தேன் அன்பே உன்னை..’ என்ற பாடலைப் பாடியிருந்தார் லதா. ஆனால் லதாவின் தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லாததால், எம்.எஸ்.ராஜேஸ்வரி மூலம் மீண்டும் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் இப்போதும் லதா பாடிய அப்பாடல் யூடியூப்ல் இசை ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து டப் செய்யப்பட்ட சில படங்களில் லதா பாடிய போதும், ஆனந்த் படம் தான் அவரது நேரடி தமிழ்ப் படமாக அமைந்தது. அப்படத்தில் இளையராஜா இசையில் அவர் பாடிய, ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. தொடர்ந்து தமிழிலும் பாடும் வாய்ப்புகள் வந்தது. 1988-ல், இளையராஜா இசையில் கமல் நடிப்பில் வெளியான, ‘சத்யா’ படத்தில் ‘வளையோசை கலகலவென’ என்ற பாடலை, பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடன் இணைந்து பாடினார். இந்தப் பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காத காதல் பாடலாக உள்ளது.
இந்தப் பாடலின் பின்னணியில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று உள்ளது. அதாவது இந்தப் பாடலை தனது ஆல்பத்திற்காக தயார் செய்து வைத்திருந்தார் இளையராஜா. ஆனால், அதனை அவர் பயன்படுத்தவில்லை. எனவே, அதனை தனது படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என இளையராஜாவிடம் கமல் கேட்டார். அதற்கு இளையராஜாவும் சம்மதித்தார். லதா மங்கேஷ்கரைப் பாட வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்ப் பாடகர்களே கொஞ்சம் திணறிப் போகும் அளவிற்கு, இந்தப் பாடலில் வார்த்தை விளையாட்டில் புகுந்து விளையாடியிருந்தார் கவிஞர் வாலி. ல, ள, ழ என தமிழின் மூன்று லகரங்களையும் கொண்டிருந்தது பாடல் வரிகள். லதாவால் உச்சரிப்பு சுத்தமாக இந்தப் பாடலை பாட முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதை சவாலாக எடுத்துக் கொண்டு, சிறப்பாக அந்தப் பாடலைப் பாடிக் கொடுத்தார் லதா. இன்றளவும் காதலர்கள் கொண்டாடும் முக்கியப் பாடலாக அந்தப் பாடல் விளங்கி வருகிறது.
பின்பு அதே ஆண்டில் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘என் ஜீவன் பாடுது’ என்ற படத்தில் ‘எங்கிருந்தோ அழைக்கும்’ என்ற பாடலை, பாடகர் மனோவுடன் இணைந்தும், சோலோவாகவும் பாடினார் லதா. இந்தப் படத்திற்கும் இசைஞானி இளையராஜா தான் இசை. அதன்பிறகு அவர் தமிழில் வேறெந்த பாடல்களையும் பாடவில்லை.
நவ்ஷத், ஷங்கர் ஜெய்கிஷன், சி.ராமச்சந்திரா, அனில் பிஸ்வாஸ், ஹேமந்த் குமார், ரவி, சலீல் சௌத்ரி, எஸ் டி பர்மன், ஆர் டி பர்மன், மதன் மோகன், கல்யாணஜி ஆனந்த்ஜி, ராகேஷ் ரோஷன், ஆனந்த் மிலிந்த், அனுமாலிக், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்கள் அனைவரிடமும் பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர் லதா மங்கேஷ்கர்.
1940ல் தொடங்கி 2014வரை ஆஷா போஸ்லே, சுரையா, ஷம்ஷாத் பேகம், உஷா மங்கேஷ்கர், கிஷோர் குமார், முகமது ரஃபி, முகேஷ், தலத் மஹ்மூத், மன்னா டே போன்ற பல பாடகருடன் இணைந்து டூயட் பாடியுள்ளார். 4 தலைமுறைகளை கடந்த பாடகி என்ற பெருமை லதா மங்கேஷ்கருக்கு உண்டு. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய வந்தே மாதரம் பாடலை கேட்டு மெய் சிலிர்த்து போகாதவர்களே இருக்க முடியாது.
பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல், ராம் ராம் பாவ்னே, மராத்தா டிட்டுகா மெல்வாவா, மொஹித்யாஞ்சி மஞ்சுளா, ஸாதி மான்ஸா போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் ஸாதி மான்ஸா படத்திற்காக மகாராஷ்டிர மாநில அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதினை 1965ம் ஆண்டு வென்றவர். இவர் இசையமைத்த ஐரனிச்யா தேவா என்ற பாடல் சிறந்த பாடலுக்கான விருதினையும் பெற்றுள்ளது.
1960 முதல் 1969 வரை இவர் படங்களில் இசையமைப்பாளராக இருந்தார். இது தவிர வாடல், ஜாஞ்சார், காஞ்சன் கங்கா, லெகின் ஆகிய நான்கு படங்களை அவர் தயாரித்துள்ளார்.இதில் வாடல் தவிர மற்ற மூன்றும் இந்தி படங்கள் ஆகும்.
ஆல்பங்கள்
"அல்லா தேரா நாம்", "பிரபு தேரா நாம்" என்ற இரண்டு ஆல்பங்களை பஜனை பாடல்கள் அடங்கிய ஆல்பங்களாக 1961ல் வெளியிட்டார். 1974ல் "மீராபாய் பஜன்ஸ்", "சான்வரே ரங் ராச்சி" என்ற ஆல்பங்களும், 2007ல் "சாத்கி" என்ற ஆல்பமும் லதா வெளியிட்டுள்ளார். 2012ம் ஆண்டு நவம்பர் 28ல் மயூரேஷ் பாய் இசையமைத்த ஸ்வாமி சமர்த் மஹா மந்திரம் என்ற பஜனைகளின் ஆல்பத்துடன் LM மியூசிக் என்ற தனது சொந்த இசை லேபிளை லதா தொடங்கினார் .
ஆல்பத்தில் தனது தங்கையான உஷாவுடன் இணைந்து பாடினார். 2014 ஆம் ஆண்டில், அவர் ஒரு பெங்காலி ஆல்பமான ஷுரோத்வானியை பதிவு செய்தார். 2019ல் தனது 90ஆவது வயதில் "சுகந்த் முஜே இஸ் மீட்டி கி" என்ற பாடலை பாடி அதனை நமது ராணுவ வீரர்களுக்காக அர்பணித்தார்.
தமிழில் விரல் விட்டு எண்ணும் அளவிலான பாடல்களை மட்டுமே லதா பாடியுள்ள போதும், அந்தப் பாடல்கள் அனைத்துமே ஹிட்டானதால் மக்கள் மத்தியில் மறக்க முடியாத முன்னணி பாடகிகளில் ஒருவரானார். பின்னணிப் பாடகர் முகமது ரபியுடன் இணைந்து லதா மங்கேஷ்கர் பாடிய கடைசிப் பாடல் 1981 ஆம் ஆண்டு வெளியான "ஆஸ் பாஸ்" என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.
இந்தியாவின் நைட்டிங்கேல்
77 ஆண்டுகள் கடந்தும் இன்றும் ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் லதா மங்கேஷ்கர் என்றால் அது மிகையன்று. இந்தியாவின் நைட்டிங்கேல், மெலடி குயின், ‘வாய்ஸ் ஆப் தி நேஷன்' என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் லதா. இந்தி, தமிழ், மராத்தி என பல்வேறு மொழிகல் கடந்த 70 ஆண்டுகளில், ஏறக்குறைய 20 இந்திய மொழிகளில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை லதா பாடியுள்ளார். தனிப்பாடல்களாக 25000 பாடல்கள் வரை பாடியிருக்கின்றார்.
பாரத ரத்னா, இந்தியாவின் உயரிய சிவிலியன் விருது, பத்ம பூஷன், பத்ம விபூஷன், வாழ்நாள் சாதனைகளுக்கான ஜீ சினி விருது, தாதாசாகேப் பால்கே விருது உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்றவர் லதா மங்கேஷ்கர். திரைப்படப் பின்னணி பாடகிகளில் பாரத ரத்னா விருது பெற்ற ஒரே பாடகி என்ற பெருமையைப் பெற்றவர் லதா மங்கேஷ்கர்.
2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த விருதினை அவர் பெற்றார். அதிகமான பாடல்களைப் பாடியதற்காக, 1974ம் ஆண்டு வரலாற்றில் மிகவும் பதிவு செய்யப்பட்ட கலைஞராக கின்னஸ் புத்தகப் பட்டியலில் இடம் பிடித்தார் லதா மங்கேஷ்கர்.
சமூகசேவை
புனேயில் 800 படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனையை தனது தந்தை தீனானந்த் மங்கேஷ்கர் பெயரில் ஒரு தொண்டு நிறுவனமாக செயல்படுத்தி வந்தார் லதா. 2001ல் இதை மேலும் பெரிதாக விரிவுப்படுத்தினார்.
கொரோனா தொற்று
இந்நிலையில், 92 வயதான லதா மங்கேஷ்கருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. லேசான அறிகுறிகளுடன் தெற்கு மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த மாதம் 8ம் தேதி லதா அனுமதிக்கப்பட்டார். வயது காரணமாக அவரது உடல்நிலை மோசமானதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, வெண்டிலேட்டர் வசதி பொருத்தப்பட்டது. இதனால், உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்கள் கவலையடைந்தனர். விரைவில் அவர் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை மேற்கொள்ளத் தொடங்கினர்.
தொடர்ந்து 20 நாட்கள் சிகிச்சைக்குப்பின் லதாவின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் தெரிந்தது. இதனால் கடந்த வாரம் அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை நிறுத்தப்பட்டது. லதா கொரோனாவில் இருந்தும் குணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபேயும் லதா மங்கேஷ்கர் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். லதா மங்கேஷ்கரின் உறவினர் ரச்சனாவும் இதனை உறுதிபடுத்தி இருந்தார். இதனால் விரைவில் அவர் வீடு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், நேற்று மீண்டும் அவரின் உடல்நிலை கவலைக்கிடமானது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் காலமானார். அவரது மறைவை லதாவின் சகோதரி உஷா மங்கேஷ்கர் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
லதாவின் மறைவால் அவரது ரசிகர்களும், இசைப் பிரியர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது மறைவுக்கு சமூகவலைதளங்கள் வாயிலாக ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எளிய குடும்பத்தில் பிறந்தாலும், உழைப்பினால், திறமையினாலும் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றவர் லதா மங்கேஷ்கர். உடலால் மறைந்தாலும் தன் குரலாலும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்களாலும் காலத்தால் மறையாத கானக்குயிலாக லதா மங்கேஷ்கர் இருப்பார்.