ஒரு முறை நடவு செய்தால் அதிக ஆண்டுகள் விளைச்சல் தரும் கோவைக்காய்!
கோவைக்காய் ஒருமுறை பயிரிட்டால் பல ஆண்டுகள் வரை விளைச்சல் தருவதால் அதிக லாபம் கிடைக்கும்.
உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்தால் நாம் மகிழ்ச்சி அடைவோம். உழைப்பிற்கு அதிகமாகவே கூடுதல் பலன் கிடைத்தால் மகிழ்ச்சி பன்மடங்கு கூடும். அப்படிப்பட்ட மகிழ்ச்சியைத் தருகிறது கோவைக்காய் சாகுபடி. கோவைக்காய் ஒருமுறை பயிரிட்டால் பல ஆண்டுகள் வரை விளைச்சல் தருகிறது. அதிக விளைச்சல் அதிக லாபத்தைத் தருகிறது.
கோவைக்காய் சாகுபடி
கோவைக்காய் கொடி வகை தாவரங்களில் ஒன்று. கோவைக்காயின் நிறம், வடிவம் ஆகியவற்றைக் கொண்டு பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. சித்திரை மாதத்தைத் தவிர மற்ற எல்லா மாதங்களிலும் கோவைக்காய் கொடியின் தண்டுகளை நடவு செய்யலாம்.
குளிர் குறைவாக இருக்கும் பிரதேசங்களில் கோவைக்காய் சாகுபடியை ஆண்டு முழுவதும் செய்ய முடியும். அதேசமயம், குளிர் பிரதேசங்களில் 7-8 மாதங்கள் மட்டுமே விளைச்சல் இருக்கும்.
கோவைக்காய் சாகுபடிக்கு செம்மண் சிறந்தது. இது நல்ல விளைச்சல் தரும். மண்ணின் pH அளவு 7-க்கும் குறைவாக இருக்கவேண்டும். கோவைக்காய் சாகுபடிக்கு வெப்பம் முக்கியம். 30-35 டிகிரி வெப்பநிலையில் உற்பத்தி சிறப்பாக இருக்கும். மாட்டு சாண உரம், மண்புழு உரம் போன்றவற்றை நிலத்தில் சேர்க்கவேண்டும்.
தரமான வகையைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும். சரியான படுக்கை போன்ற அமைப்பை ஏற்படுத்தி நடவு செய்தால் களை அதிகம் இருக்காது.
மழைக்காலத்தில் முதல் முறையாக நடவு செய்தால், வேர்கள் நன்றாக வளரும்.
கோடைக்காலத்தில் கோவைக்காய் செடிகளுக்கு 4-5 நாட்கள் இடைவெளியில் நீர் பாசனம் செய்வது நல்லது. அதேசமயம், குளிர் காலத்தில் 8-10 நாட்களுக்கு ஒருமுறை நீர்பாசனம் செய்தால் போதுமானது.
முறையான வடிகால் வசதி ஏற்படுத்துவது பலனளிக்கும். செடியிலிருந்து கொடி படர்ந்து வளரத் தொடங்கும்போது மூங்கில் கொண்டு பந்தல் அமைக்கவேண்டும். 30-ம் நாளில் செடியை ஒட்டி குச்சி ஊன்றி கொடிகளை பந்தலில் ஏற்றிவிடவேண்டும். 60-ம் நாள் கொடிகள் படர ஆரம்பித்து, 70-ம் நாள் முதல் காய்க்க ஆரம்பிக்கும்.
ஒருமுறை நடவு செய்யும் கோவைக்காய் செடிகளை மூன்று ஆண்டுகள் வரை வைத்திருக்கமுடியும்.
கோவைக்காய் நன்மைகள்
கோவைக்காயில் ஆண்டி-மைக்ரோபியல், ஆண்டி-பாக்டீரியல், கால்சியம், இரும்புசத்து, நார்சத்து, வைட்டமின் – ஏ மற்றும் சி போன்றவை கோவைக்காயில் அதிகளவில் உள்ளன.
ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கோவைக்காய் உதவுகிறது. இதயம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை கோவைக்காய் மேம்படுத்துகிறது. உடல் பருமன் இருப்பவர்கள் கோவைக்காய் சாப்பிடுவது பலனளிக்கும்.
விளைச்சல் மற்றும் லாபம்
ஒரு ஹெக்டேர் நிலத்தில் கோவைக்காய் சாகுபடி செய்தால் 300-450 குவிண்டால் வரை விளைச்சல் கிடைக்கும். கோவைக்காய் சில்லறை வர்த்தகத்தில் கிலோவிற்கு 80-100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மொத்தமாக வாங்கும்போது கிலோவிற்கு 40-50 ரூபாய் வரை விற்பனையாகிறது.
400 குவிண்டால் விளைச்சல் கிடைத்தாலும் கிலோவிற்கு 40 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்யும்போது 16 லட்ச ரூபாய் வரை கிடைக்கும்.