நாளொன்றுக்கு ரூ.48 கோடி சம்பளம் - உலகிலேயே அதிக சம்பளம் பெறும் ஊழியர்! உண்மை என்ன?
குவாண்டம்ஸ்கேப்பின் முன்னாள் சிஇஓ ஜக்தீப் சிங்கின் அதிகபட்ச சம்பளம், நாளொன்றுக்கு ரூ.48 கோடி சம்பளம் என்று வைரலான செய்தியின் பின்னணியில் உள்ள உண்மை என்ன?
QuantumScape-இன் முன்னாள் சிஇஓ ஜக்தீப் சிங்கின் அதிகபட்ச சம்பளம், நாளொன்றுக்கு ரூ.48 கோடி வருவாய்' என்று வைரலான கூகிள் ட்ரெண்டின் பின்னணியில் உள்ள உண்மை என்ன?
குவாண்டம்ஸ்கேப்பின் இணை நிறுவனரும் முன்னாள் சிஇஓ-வுமான ஜக்தீப் சிங், ஓவர் நைட்டில், உலகளவில் பேசுப்பொருளாக மாறினார். அதற்குக் காரணம் நாளொன்றுக்கான அவரது சம்பளம் ரூ.48 கோடி என்ற செய்தியே. இதன் மூலம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர், ரூ.17,500 கோடி ஆண்டு வருமானத்துடன், உலகிலேயே அதிக ஊதியம் பெறும் ஊழியராக உருவெடுத்து, இணையத்தில் வைரலாகினார்.
ஆனால், QuantumScape இன் இணை நிறுவனரும் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜக்தீப், தினசரி ரூ.48 கோடி சம்பாதிக்கிறார் என்பது உண்மையா? என்ற கேள்வியும் ஒரு புறம் எழ, அதற்கான விளக்கத்தை அந்நிறுவனமே அளித்துள்ளது.

ஜக்தீப் சிங் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக குவாண்டம்ஸ்கேப் ஒரு வருடத்திற்கு முன்பு அறிவித்தபோது, நிறுவனம் அமெரிக்க அரசிடம் 8-கே சட்டப்பூர்வ ஆவணத்தை தாக்கல் செய்தது. அப்போதே, நிறுவனத்தின் அசாதாரண செயல்திறன் விருது திட்டத்தின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட பங்குகளும் நிறுத்தப்பட்டன என்று விளக்கம் அளித்துள்ளது.
2024ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முதல், தலைமை நிர்வாக அதிகாரியாக ஜக்தீப் சேவை செய்ததற்காக, நிறுவனத்திடமிருந்து 2023ம் ஆண்டுக்கான போனஸைத் தவிர வேறு எந்த இழப்பீடும் பெறமாட்டார். நிறுவனத்தின் அசாதாரண செயல்திறன் விருது திட்டத்தின் கீழ் அவருக்கு பங்கு விருப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன. சிஇஓ பொறுப்பிலிருந்து விலகுவதால், விதிமுறைகளுக்கு இணங்க, அவருக்கு வழங்கப்பட்ட பங்குகளும் முடிவடையும்.
சிங்கின் மற்ற சிறந்த ஈக்விட்டி விருதுகள் அனைத்தும், அவர் நிறுவனத்திற்கு சேவை வழங்குநராக தொடர்ந்து பணியாற்றுவதற்கு உட்பட்டு, அவற்றின் விதிமுறைகளின்படி, தொடர்ந்து வழங்கப்படும். நிறுவனத்தின் வெளிப்புற இயக்குநர் இழப்பீட்டுக் கொள்கையின் கீழ், பணியாளர் அல்லாத இயக்குநர்களுக்கான நிலையான இழப்பீடுகளில் பங்கேற்பதை ஜக்தீப் தள்ளுபடி செய்துள்ளார்," என்று அமெரிக்க அரசிடம் அந்நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஊழியராக ஒரு இந்தியர் இருப்பதைப் பார்த்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொண்ட நிலையில், அவரிடம் இருந்து இன்ஸ்பையராகுவதற்கு இன்னும் ஏராளமுள்ளன. 56 வயதான ஜக்தீப் சிங்கின் பயணம் தொழில்முனைவோர் மற்றும் தொலைநோக்கு தலைமைத்துவத்தின் சக்திக்கு ஒரு சான்றாகும்.
யார் இந்த ஜக்தீப் சிங்?
மின்சார வாகனங்களுக்கான (EV கள்) திட-நிலை ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் உலோக பேட்டரிகளில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான குவாண்டம்ஸ்கேப்பின் இணைநிறுவனர் ஜக்தீப் சிங். கலிபோர்னியாவின் சான் ஓஸைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகன உற்பத்தியாளர்களுக்கு பாரம்பரிய லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு மாற்றாக பாதுகாப்பான, அதிக செலவு குறைந்த மாற்றீட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
2010ம் ஆண்டு குவாண்டம்ஸ்கேப் தொடங்கப்பட்ட நிலையில் முதல் ஐந்து ஆண்டுகளிலே, நிறுவனம் கிட்டத்தட்ட 50 பில்லியன் டாலர் மதிப்பீட்டை அடைந்துள்ளது. அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, QuantumScape ஆனது Volkswagen AG மற்றும் Bill Gates போன்ற பெரும் முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்த்துள்ளது.
திட-நிலை பேட்டரி தொழில்நுட்பத்தில் QuantumScape-இன் திருப்புமுனையானது, EV துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சாலிட்-ஸ்டேட் பேட்டரிகள், வழக்கமான லித்தியம்-அயன் பேட்டரிகளைக் காட்டிலும் பாதுகாப்பானவை, அதிக திறன் கொண்டவை மற்றும் குறைந்த விலை கொண்டவை, அவை மின்சார வாகனங்களின் எதிர்காலத்திற்கு முக்கியமானவை. உலகளாவிய நிறுவனங்களுடனான கூட்டாண்மை உடன் ஜக்தீப் சிங், EV பேட்டரி துறையில் முன்னணியில் குவாண்டம்ஸ்கேப்பை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளார்.

டில்லியில் பிறந்த ஜக்தீப் சிங்கின் வெற்றிப் பயணத்திற்கும், வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டது அவருடைய கல்வி. மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டமும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.
மேலும், குவாண்டம்ஸ்கேப்பை நிறுவுவதற்கு முன்பு, HP (ஹெவ்லெட்-பேக்கர்ட்) மற்றும் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களில் பணிபுரிந்து, தொழில்நுட்பத் துறையில் ஒரு தசாப்த கால அனுபவத்தைக் கொண்டிருந்தார். அத்துடன் அவரது தொழில்முனைவு பயணமும் 30 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிவிட்டது. அவரது தொழில் முனைவோர் பயணத்தில் 1992ல் AirSoft, 1998ல் Lightera Networks மற்றும் 2001ல் Infinera உட்பட பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் நிறுவியுள்ளார்.
90-களின் முற்பகுதியில் குறிப்பாக 1993ம் ஆண்டில், வயர்லெஸ் நெட்வொர்க்குகளின் செயல்திறனை மேம்படுத்து மென்பொருளை உருவாக்கும் ஏர்சாஃப்ட் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினார். பின், அவர் 65 மில்லியன் டாலருக்கு அவரது ஸ்டார்ட்அப்பை விற்று 1998ம் ஆண்டில் லைடெரா நெட்வொர்க்கைத் தொடங்கினார். குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஸ்டார்ட்அப் 500 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.
தொலைத்தொடர்பு துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். 2007ம் ஆண்டின் சிறந்த லைட் ரீடிங் நபர் மற்றும் 2008ம் ஆண்டின் எர்ன்ஸ்ட் மற்றும் இளம் தொழில்முனைவோர் என்று விருதுகளை பெற்றுள்ளார்.

ரூ.1,260 கோடி! அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய சி.இ.ஓ நிகேஷ் அரோரா!