‘மேட் இன் இந்தியா’ மோட்டார் சக்கர நாற்காலி: ஆதரவு தெரிவித்த ஆனந்த் மஹிந்திரா!
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் சக்கர நாற்காலி!
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இளம் திறமைகளுக்கு எப்போதும் ஆதரவளிக்கும் நபர். சமீபத்தில் அவர் வெளியிட்ட பதிவு புதிய கண்டுபிடிப்பாளரை உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. உள் நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி வாகனத்தை கண்டுபிடித்தவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
ஐஐடி மெட்ராஸின் டிடிகே சென்டர் ஃபார் புனர்வாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாடு (R2D2) குழு நியோமோஷன் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட சாதனம் ஆகும்.
’நியோபோல்ட்’ என்று பெயரிடப்பட்ட புதிய வாகனத்தின் படங்கள் மற்றும் வீடியோக்களை ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார்.
“இந்த சாதனத்தின் பின்னணியில் உள்ள இளம் தொழில்முனைவோர் ஐஐடி மெட்ராஸில் படித்த பட்டதாரி ஆவார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சாதனத்தின் டெமோ இது. இது எளிமையானது, நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்த எளிதானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு தகுந்து இயங்கக்கூடியது. அவர்களின் அர்ப்பணிப்பு என்னைக் கவர்ந்தது. அவர்களுக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளேன்," என்று ஆனந்த் மஹிந்திரா தனது ட்வீட்டில் குறிப்பிட்டு இருக்கிறார்.
லித்தியம் பேட்டரி மூலம் இயக்கப்படும் இந்த வாகனம் 25 km/h வேகம் கொண்டது. இதன் அயன் பேட்டரி, நான்கு மணி நேரத்திற்குள் சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனத்தில் ’நியோமோஷன்’ நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான லாக் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் கிடைக்கும் சக்கர நாற்காலிகளைப் போலல்லாமல், வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக கஸ்டமைஸ் செய்யப்பட்ட 18 மாடல்களைக் கொண்டுள்ளது இந்த வாகனம். வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் சுகாதார நிலைமைகளுக்கு ஏற்ப இது உதவுகிறது.
இந்த வாகனத்தின் விலை சுமார் ரூ.1.18 லட்சம். என்றாலும் ரூ.95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட வாகனத்தை விட மூன்று மடங்கு குறைவு தயாரிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விற்பனையுடன் சர்வீஸ் வசதிகளும் இந்த வாகனத்துக்கு உண்டு. நியோஃபிட் மற்றும் டூ-இட்-யுவர்செல்ஃப் அப்ரோச் எனப்படும் முன்முயற்சியின் மூலம் இந்த சர்வீஸ் மற்றும் பழுதுபார்ப்புகள் செய்யப்படும் என்றும், தயாரிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.