டிராக்டர் சேல்ஸ்மேன் டு பல கோடி ரூபாய் மதிப்பு வங்கிசாரா நிதி நிறுவனம் உருவாக்கிய ஜிதேந்திரா!
டிராக்டர் சேல்ஸ்மேனிலிருந்து தொழில்முனைவரான ஜிதேந்திரா தன்வாரின் "நாம்தேவ் ஃபின்வெஸ்ட்" எனும் வங்கிசாரா நிதி நிறுவனம், சிறு, குறு தொழில்முனைவோர் மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கு கடனுதவி அளித்து ஆதரவும், அதிகாரமும் அளிக்கிறது.
டிராக்டர் சேல்ஸ்மேனிலிருந்து தொழில்முனைவரான ஜிதேந்திரா தன்வாரின் பிசினஸ் வெற்றிக்கதை இது. அவர் தொடங்கிய 'நாம்தேவ் ஃபின்வெஸ்ட்' எனும் வங்கிசாரா நிதி நிறுவனம், MSMEகள், இ-ரிக்ஷாக்கள் மற்றும் சோலார் பேனல்கள் அமைக்க கடனுதவி அளித்து, சிறு, குறு தொழில்முனைவோர் மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கு ஆதரவும், அதிகாரமும் அளிக்கிறது.
ஜெய்பூரைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனமானது சிறு வணிகங்களுக்கும், பைக் மற்றும் ஸ்கூட்டர் வாங்க விரும்புபவர்களுக்கும், வாழ்வாதாரத்திற்காக இ-ரிக்ஷாவை ஓட்ட விரும்புபவர்களுக்கும், சோலார் பேனல்களை நிறுவுவதற்கும் கடனுதவி வழங்குவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. உத்தரப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில், "நாம்தேவ் ஃபின்வெஸ்ட்" சுமார் 5,000 வாடிக்கையாளர்களுக்கு இ-ரிக்ஷா வாங்குவதற்கு நிதியளித்துள்ளது
இன்று, Namdev Finvest நிறுவனம் ரூ.1,300 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வாகத்தின் கீழ் கொண்டுள்ளது, இதில் பெரும்பாலானவை ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தராகண்ட் ஆகிய எட்டு மாநிலங்களைச் சேர்ந்த சிறு வணிகங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
டிராக்டர் சேல்ஸ்மேன் டு பல கோடி ரூபாய் மதிப்பிலான NBFC நிறுவனர்...
ஜெய்பூரைச் சேர்ந்த ஜிதேந்திரா டிராக்டர் விற்பனையாளராக பணியாற்றி தொடங்கிய போது, அவருக்கு வயது 17. எந்தவொரு அனுபவமுமின்றி வேலை செய்யத் துவங்கிய அவர், டிராக்டரை விற்க கிராமம் கிராமமாக சென்றுள்ளார். சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பண்ணையாளர்களிடகும் சென்று டிராக்டரை விற்பனை செய்ய, அதன் சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்களை எடுத்துரைப்பார். அதுவே அவரது பணி.
டிராக்டரின் தகவல்களுடன், அதற்கான தொகைக்கான கடனுதவிகள் பற்றியும் விளக்கியுள்ளார். அங்கிருந்து தான் கடன் கொடுக்கல், வாங்கல் பற்றி புரிதலும், அறிவும் அவருக்குக் கிடைத்தது.
பின்னர், அவரது உறவினரின் உதவியுடன் ஹெச்டிஎப்சி வங்கியில் நேரடி சேல்ஸ் ஏஜென்டாக பணியில் சேர்ந்தார். ஆனால், 2008ம் ஆண்டு வரை மட்டுமே அவர் அங்கு பணிபுரிந்தார். ஏனெனில், 2008ம் ஆண்டு நாட்டில் நிலவிய மோசமான பணநெருக்கடியில், ஜிதேந்திரா அவரது வேலையை இழந்தார். அப்போது தான், எதிர்காலத்தில் கடன் வழங்கும் துறையில் தான் பணிபுரிய வேண்டும் என்று தீர்மானித்தார்.
3 மாதங்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் மஹிந்திரா மற்றும் மஹிந்திராவின் டிராக்டர் ஆர்ம் மேக்னாவில் ஃப்ரீலான்ஸராக பணியை தொடங்கினார், பின்னர், IndusInd வங்கி மற்றும் சில உள்ளூர் அமைப்பு NBFC-களுடன் பணியாற்றத் தொடங்கினார். 2012ம் ஆண்டில், அவர் சொந்தமாக வங்கி சாரா நிதி நிறுவனத்திற்கான உரிமத்தைப் பெற்று அவரது சொந்த நிறுவனத்தைத் தொடங்க முயற்சி செய்தார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரால் உரிமத்தைப் பெற முடியவில்லை, ஏனெனில் அந்த நேரத்தில் ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை கட்டமைப்பிலும் உரிமம் வழங்கும் செயல்முறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்திருந்ததால் புதிதாக உரிமம் பெறுபவர்களுக்கு கடினமாக இருந்தது.
2013ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், அவர் இறுதியாக உரிமம் பெற்றார். அதன் பிறகு, தொடங்கிய அவரது நிறுவனமான "நாம்தேவ் ஃபின்வெஸ்ட்" ஏறுமுகமாக சென்று கொண்டேயிருந்தது.
"வீட்டை அடமானம் வைத்து தான் நிதி நிறுவனத்தை வாங்கினேன். நாங்கள் நிறுவனத்தை வாங்கிய போது, நிறுவனத்தின் மூலதனம் 29.30 லட்சம் மட்டுமே," என்றார் ஜிதேந்திரா.
ஒரு வருடத்திற்குள், நிறுவனம் இரு சக்கர வாகனக் கடன்களுக்கு உத்தரவாதம் அளித்ததன் மூலம் ரூ 1.17 கோடி கடன் புத்தகத்தை நிறுவியது. மேலும், 2015ம் ஆண்டில் ரூ.2.75 கோடியாக வளர்ந்தது. மேலும், பெல்ஜிய வளர்ச்சி நிதியான Incofin, Lighthouse Canton Nueva Fund, UK அரசாங்கத்தின் பிரிட்டிஷ் சர்வதேச முதலீடு மற்றும் மைக்ரோ-ஃபைனான்ஸ் முதலீட்டாளர் Maj Invest போன்ற முதலீட்டாளர்களிடமிருந்து 41.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 350 கோடி) நிதியைப் பெற்றுள்ளது.
நாம்தேவ் ஃபின்வெஸ்ட் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பாதுகாப்பான கடன் வழங்குவதிலே முதன்மை கவனம் செலுத்துகிறது. முறையான வங்கி சேவைகளுக்கான அணுகல் இல்லாத நபர்களுக்கு, குறிப்பாக சிறு வணிகங்களைத் தொடங்க அல்லது வளர விரும்புவோருக்கு நிதி உதவி வழங்குவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் சில்லறை விற்பனை, விவசாயம் அல்லது சிறிய அளவிலான உற்பத்தி போன்ற துறைகளில் செயல்படுகிறார்கள். மேலும், கடைக்காரர்கள், ஒப்பந்தக்காரர்கள், தச்சர்கள் மற்றும் அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் டீ ஸ்டால் உரிமையாளர்கள் போன்ற சிறிய அளவிலான சேவை வழங்குநர்களையும் உள்ளடக்கியிருக்கிறார்கள்.
"சொந்த தொழிலைத் தொடங்க அல்லது ஏற்கனவே உள்ள அமைப்பை மேம்படுத்த விரும்பும் நபர்களுக்கு கடன்களை வழங்குகிறோம். ஆனால் வங்கிகளால் அவர்களுக்கு நிதி வழங்க முடியவில்லை. நாங்கள் அவர்களைச் சந்திக்கிறோம், அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்கிறோம். அதன்பிறகு, அவர்களுக்கு கடன்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்படும்," என்கிறார் அவர்.
இ-ரிக்ஷா, சோலார் பேனல்கள் அமைக்க கடனுதவி அளிக்கும் NBFC !
நாம்தேவ் ஃபின்வெஸ்ட் 8 மாநிலங்களில் 112 கிளைகளுடன் பிரம்மாண்டமாய் இயங்கி வருகிறது. பெருமளவில் பண அடிப்படையிலான பொருளாதாரத்திற்கு சேவை செய்தாலும், டிஜிட்டல் செயல்முறைகளுடன் நேரடி தொடர்புகளை இணைக்கும் கலப்பின அணுகுமுறையை ஒருங்கிணைத்துள்ளது. நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் பலர், குறிப்பாக கிராமப்புறங்களில், வங்கிச் சேவைகள் அல்லது டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதில் முழுமையாகப் பழகவில்லை.
எனவே, நிறுவனம் "பைஜிட்டல்" (பைஜிட்டல் என்பது நேரடி மற்றும் டிஜிட்டல் இரண்டையும் ஒருங்கிணைப்பதாகும். எடுத்துகட்டாக, நேரடியாக கடைக்கு சென்றாலும், க்யூஆர் கொண்டு பணம் செலுத்துவது) அணுகுமுறையை கையாள்கிறது, என்று விளக்கினார் ஜிதேந்திரா.
இந்தியாவில் வங்கி சாரா நிதி நிறுவனம் (NBFC) துறை விரிவடைந்து வருவதால், நாம்தேவ் ஃபின்வெஸ்ட் பாரம்பரிய வங்கிகள் மற்றும் பிற NBFCகள் ஆகிய இரண்டிலிருந்தும் கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. மின்சார வாகனங்களுக்கான கடன்கள் (இ-ரிக்ஷாக்கள்) மற்றும் குடியிருப்பு மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காக சோலார் பேனல்கள் அமைப்பதற்கும் கடனுதவி அளித்துவருகிறது.
உத்தரப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில், நாம்தேவ் ஃபின்வெஸ்ட் சுமார் 5,000 வாடிக்கையாளர்களுக்கு இ-ரிக்ஷா வாங்குவதற்கு நிதியளித்துள்ளது. சோலார் ஃபைனான்சிங், நிறுவனத்தின் வணிகப்பயணத்தில் விரைவான வளர்ச்சியை அளித்துள்ளது. மேலும், இது வரும் ஆண்டுகளில் கணிசமாக விரிவடையும் என்று ஜிதேந்திரா எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ந்து வரும் வங்கி சாரா நிதி நிறுவன துறையில் இயங்குவது சவால்களும் நிறைந்தது. MSME கடன் வாங்குபவர்கள், முறையான ஆவணங்கள் மற்றும் கடன் வரலாறு இல்லாமை போன்ற தடைகளை அடிக்கடி எதிர்கொள்கின்றனர். இது NBFC -களை இந்த கடன் வாங்குபவர்களின் தகுதியை மதிப்பிடுவதற்கு மாற்று வழிகளைக் கண்டறியும்படி கட்டாயப்படுத்துகிறது.
இந்தக் கடன்களை உறுதி செய்ய, கடன் வழங்குபவர்கள் வட்டி விகிதங்களை அதிகமாக நிர்ணயிக்கின்றனர். ரிசர்வ் வங்கி கந்து வட்டி என்று கருதுவதை தெளிவுபடுத்தும் வரை, நாம்தேவ் உட்பட NBFCகள் தங்கள் வட்டி விகிதங்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும். எவ்வாறாயினும், நாம்தேவ் பாதுகாக்கப்பட்ட கடன்களை வழங்குகிறது. அதன் கடன்கள், இ-ரிக்ஷாக்கள், பைக்குகள் மற்றும் சோலார் பேனல்கள் போன்ற பிணையத்தால் பாதுகாக்கப்படுகின்றன.
தமிழில்: ஜெயஸ்ரீ
சிறுதொழில் துறையில் கடன் இடைவெளியை தீர்க்க முயலும் 21 வயது தொழில்முனைவோர்!