'சாக்கு சொல்லிக் கொண்டிருந்தால் இந்தியா ஏழை நாடாகவே இருக்கும்' - 70 மணி நேர வேலை குறித்து நாராயண மூர்த்தி!
"நாம் உழைக்க மறுத்து தொடர்ந்து சாக்குப்போக்குகளைச் சொல்லிக் கொண்டிருந்தால், இந்தியா இதைவிட மோசமான நிலையில், ஏழைகளாகவே இருக்கும்' என வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை குறித்த தனது கருத்தை மீண்டும் பேசியுள்ளார் இன்போசிஸ் நாராயணமூர்த்தி.
இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இவரது மனைவி சுதா மூர்த்தி சமூக சேவைகள் செய்து வருகிறார். தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் நாராயணமூர்த்தி. அப்போது அவர் பேசும் கருத்துக்களில் சில சர்ச்சைகளில் சிக்குவதுண்டு.
அப்படித்தான் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு, ‘இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்’ என அவர் பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது. ஏற்கனவே, வேலைப்பளுவால் பலர் தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாகி வரும் நிலையில், நாராயணமூர்த்தியின் இந்தப் பேச்சு, அவரது முதலாளித்துவ குணத்தைக் காட்டுவதாக, தொழிலாளர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வது உடல் மற்றும் மன ரீதியான நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் கூறுவதாக சுட்டிக் காட்டி, அப்படி வேலை பார்த்தால் வீட்டில் குடும்பத்தினருடன் செலவு செய்யும் நேரமும் குறைந்துவிடும் என்றெல்லாம் கூறி, இந்த விவகாரத்திற்கு தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.
கடின உழைப்பு அவசியம்
இந்நிலையில், கொல்கத்தாவில் நடந்த இந்திய வர்த்தக சபையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நாராயண மூர்த்தி, மீண்டும் இந்த வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை என்ற தனது கருத்தை வலியுறுத்தி, அதற்கான புதிய விளக்கத்தையும் கொடுத்துள்ளார். ‘இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு கலாச்சாரம் அவசியம் தேவை; அதற்கு வாரத்துக்கு ஆறு நாள் முக்கியம் என்ற தனது நிலைப்பாட்டில் தான் உறுதியாக உள்ளேன். தொடர்ந்து நாம் உழைக்கத் தயங்கி சாக்குபோக்குகளைச் சொல்லிக் கொண்டே இருந்தால், இதைவிட மோசமான நிலையில், ஏழ்மை நிலையிலேயே தொடர்ந்து இருப்போம்” என அவர் அப்போது தெரிவித்துள்ளார்.
‘இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு கலாச்சாரம் அவசியம் தேவை; அதற்கு வாரத்துக்கு ஆறு நாள் முக்கியம் என்ற தனது நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக,’ தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அந்நிகழ்வில் அவர் பேசுகையில், “இந்தியாவில் மொத்தம் 800 மில்லியன் இந்தியர்கள் இலவச ரேஷன் அரிசி வாங்குகிறார்கள். அப்படி என்றால் இவ்வளவு பேர் இந்தியாவில் வறுமையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இதனால், இளைஞர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். நமது நாடு இரக்கமுள்ள முதலாளித்துவமாக செயல்படுகிறது, என்றார்.
70 மணி நேர வேலை
நாம் பணி சார்ந்த உற்பத்தித் திறனை மேம்படுத்தாத வரையில், ஊழலைக் குறைக்காத வரையில், அதிகார வர்க்கத்தில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்காத வரையில் வளர்ந்த நாடுகளுடன் நம்மால் போட்டியிட முடியாது. அதனால் எனது வேண்டுகோள் என்னவென்றால் இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இதை நான் சொல்ல காரணம் இந்தியா எனது நாடு. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாட்டில் இதுதான் நடந்தது. குறிப்பிட்ட ஆண்டு காலம் அனைத்து ஜெர்மனி மக்களும் கூடுதல் நேரம் வேலை செய்வதை உறுதி செய்தது.
"இந்தியாவில் இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். நாம் மிக சரியான காலத்தில் உள்ளோம். இது போன்ற சாதகமான சூழ்நிலை அமைவது கடினம். இந்த இளைஞர்கள் பலத்தை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கவும் கடினமாக உழைக்கும் வகையில் நாம் மாற வேண்டும்."
தினமும் 12 மணி நேர வேலை
அது நடந்தால் தான் பொருளாதார ரீதியாக உலக அளவில் நம் நாடு வளர்ச்சி காண முடியும். அந்த செயல்திறன் அங்கீகாரம் அளிக்கும், அது மரியாதையையும், அதிகாரத்தையும் வழங்கும்.
”அதனால் இந்த நாட்டின் இளைஞர்களுக்கு நான் சொல்வதெல்லாம் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் என அடுத்த 20 - 50 ஆண்டுகள் வரை உழைக்க வேண்டும். அப்போது தான் ஜிடிபி-யில் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் இந்தியாவால் இருக்க முடியும். இந்தியாவின் தொலைதூர கிராமத்தில் உள்ள ஏழை குழந்தையின் எதிர்காலம் நமது இளைஞர்களின் தோள்களில் உள்ளது. அந்த பொறுப்பை அவர்கள் உணர வேண்டும்,” என்றார்.
மேலும், தனது பணி அனுபவத்தில் நாள் ஒன்றுக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்ததையும் அந்நிகழ்வில் அவர் நினைவு கூர்ந்தார். ‘1986-ல் வாரத்துக்கு 5 நாள் மட்டுமே வேலை என்ற மாற்றம் தனக்கு ஏமாற்றம் தந்ததாகவும், வாரத்துக்கு 6 நாள் வேலை அவசியம் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும். அந்த கருத்தை தன் கல்லறை வரை கொண்டு செல்வேன், ஒருபோதும் மாற்றிக் கொள்ளபோவதில்லை,’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனது சொந்த அனுபவம்
“70 களின் முற்பகுதியில் பாரிஸில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அங்கு, ‘இந்தியா எவ்வளவு அசுத்தமானது, ஊழல் நிறைந்தது’ என்று மேற்குலகம் பேசிக்கொண்டிருந்தது. என் நாட்டில் வறுமை இருந்தது, சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தது ஆனால் நான் கடுமையாக உழைத்தேன். இன்போசிஸ் நிறுவனத்தை மேலே கொண்டு வர வேண்டும் என்பதற்காக மிக கடுமையான பணிகளை செய்தேன். நாம் இப்போதும் அதே சூழலில்தான் இருக்கிறோம்.
வறுமையை ஒழிக்க வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமே ஒரே வழி என நான் அப்போது உணர்ந்தேன். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதால், தொழில் அதிபர்களும் தேசத்தை கட்டமைக்கிறார்கள், என உணர்ந்து கொண்டேன். முதலீட்டாளர்களுக்கு செல்வத்தை உருவாக்குவதோடு வரியும் செலுத்துகிறார்கள்
சிறப்பாக செயல்பட்டால்தான் இங்கு அங்கீகாரம் கிடைக்கும். அங்கீகாரம்தான் மரியாதை கொடுக்கும். மரியாதை அதிகாரத்தை தரும். நமது முன்னோர்களின் கனவை நிறைவேற்ற இளைஞர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அதனால்தான் நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். இங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் நான் சொல்வது என்னவென்றால், உங்களின் மதிப்புகளை உணர்ந்து கொள்ள வாழ்க்கையை அர்ப்பணித்து செயல்வேடவேண்டும் என்பதே.
கணக்கு பார்க்காமல் உழைக்க வேண்டும்
மேற்கு உலக நாடுகளை விட புதிய உயரத்திற்கு நம்மை கொண்டு செல்ல வேண்டும்.
வாரத்திற்கு நாம் 40 டூ 48 மணி நேரம் வேலை பார்க்கிறோம். இனி வேலை நேரத்தை உயர்த்த வேண்டும். நம்முடைய இந்திய கலாச்சாரம் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதை மறக்கக் கூடாது. இந்த கலாச்சாரம் மீண்டும் சர்வதேச அளவில் உச்சம் அடைய வேண்டும்.
சர்வதேச அளவில் பெரிய நாடாக மாற வேண்டும். வறுமையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். அதற்கு நாம் தினமும் உழைக்க வேண்டும். வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 10- 12 மணி நேரமாக உயர்த்த வேண்டும். கணக்கு பார்க்காமல் உழைக்க வேண்டும். நாம் உழைக்க மறுத்து தொடர்ந்து சாக்குப்போக்குகளைச் சொல்லிக் கொண்டிருந்தால், நாம் இதைவிட மோசமான நிலையில், ஏழைகளாகவே தொடர்ந்து இருப்போம்” என மீண்டும் தனது 70 மணி நேர வேலை கருத்தை நியாயப்படுத்தும் விதமாக அதற்கு புதிய விளக்கம் அளித்து நாராயண மூர்த்தி பேசியுள்ளார்.
‘இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்யணும்’ - இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்து சர்ச்சை ஆனது ஏன்?