'நான் நன்றாக இருக்கிறேன், நலமுடன் திரும்புவேன்'- புற்றுநோயை வென்ற லதா ஸ்ரீனிவாசன்!
உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்ற முதல் கேள்விக்கு லதா ஸ்ரீநிவாசனின் பளிச் பதில், "நான் மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்ட வெற்றிப் பெண்" என்பதே.
ஊடகவியலாளரான, லதா ஸ்ரீநிவாசனைப் பற்றி புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான இந்த அக்டோபரில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமானது.
தமிழ் யுவர்ஸ்டோரி இணையத்துடன் லதா ஸ்ரீநிவாசன் பல்வேறு முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்
உங்களின் அடையாளம் என்ன?
"நான் மார்பக புற்றுநோயில் இருந்து மீண்ட ஒரு போராளி. ஊடகத் துறையில் பணியாற்றுகிறேன். செல்லப் பிராணிகள் குறிப்பாக நாய்கள் என்றால் அலாதி பிரியம். விதவிதமான உணவை புசிப்பது உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை தேடித்தேடிப் பார்ப்பது, பரந்து விரிந்த பயணங்களை மேற்கொள்வது இவையே எனது விருப்பப் பட்டியல்" என சோகம் என்பது எள்ளளவும் இல்லாமல் துள்ளலாகப் பேசுகிறார் லதா.
லதாவின் துடிப்பும், சிரிப்பும் அவர் இந்த நோயை எந்த அளவு வெற்றிக் கண்டிருக்கிறார் என்பதையும் நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அவரால் எந்த அளவுக்கு ஒரு சிறந்த ஊக்கத்தை அளிக்கும் வகையில் முன்மாதிரியாக இருக்கும் என்பதை பறைசாற்றுகிறது.
இது வழக்கமான கேள்வியாகத் தெரியலாம். ஆனாலும் சொல்லுங்கள். உங்களுக்கு புற்றுநோய் தாக்கிய செய்தியை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்?
அந்த முதல் தகவல் என்னை இடித்து நொறுக்கியது. எல்லாம் முடிந்துவிட்டது என்ற எண்ணமே மேலோங்கியது. மார்பகப் புற்றுநோய் குறித்து நான் அறிந்திருந்தாலும் அதை நான் வென்று பிழைப்பேன் என துளியளவும் நம்பவில்லை. ஏனென்றால் எனக்கு கேன்சர் என்று ஒரு நோய் வரும் என நான் கனவிலும் நினைத்தது இல்லை. இளமை துள்ளலோடு இருக்கும் ஒரு பெண்ணுக்கு எப்படி புற்றுநோய் வரும் என நூறாயிரம் முறை அதே கேள்வியை எனக்குள்ளேயே திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தேன்.
அந்த அதிர்வில் இருந்து எப்படி மீண்டு வந்தீர்கள்?
"ஆல் இஸ் வெல்" என்று சினிமா பாணியில் ஒரே நாளில் மீண்டுவிடவில்லை. எனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது உண்மையே. அதை எதிர்த்து நான் போராடித்தான் ஆகவேண்டும். வலி நிறைந்த சிகிச்சைகளை செய்து கொள்ள வேண்டும். இவை அத்தனையும் நிதர்சனம் என்பதைப் புரிந்து உணரவே சில வாரங்கள் ஆகின.
ஆனால், அந்தப் புரிதல் வருவதற்கு எனக்கு பக்கபலமாக இருந்தவர்கள் என் நண்பர்களும் என் தாயும். 'உன்னால் முடியும்' என்று என்னிடம் ஓயாமல் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தனர். நான் நோயாளி என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வந்துவிடாத அளவுக்கு என்னை என் நண்பர்கள் கவனித்துக் கொண்டனர். நான் எப்போதும்போல் சினிமா பார்ப்பதை உறுதி செய்தனர். பார்ட்டி கொண்டாட்டங்களில் என்னை பங்கேற்கச் செய்தார். சின்ன சின்ன பகடிகளுக்குக்கூட நான் வாய்விட்டு சிரிக்கச் செய்தனர். அவர்களால்தான் என் வாழ்க்கை இயல்பாக அமைந்தது.
புற்றுநோய் சிகிச்சையின்போது தலைமுடி உதிர்வது இயல்பே. ஆனால், புற்றுநோயாளிகளுக்கு மிகுந்த வேதனையைத் தரும் நிகழ்வும் அதுவே. என் தலைமுடியும் உதிர்ந்தது. என் தோழியின் உதவியுடன் என் தலைமுடியை நான் மழித்துக் கொண்டேன். மொட்டை லுக் எனக்குப் பிடித்துப்போனது.
எப்போதாவது என்னை சோர்வு வியாபித்துக் கொள்ளும். அப்போது என் நட்புகளின் வீடுகளில் தஞ்சம் புகுந்து கொள்வேன். அப்புறம் என்ன, அங்கு எனக்குப் பிடித்த படங்களை எல்லாம் பார்ப்பேன். என் மனத்துக்கினிய சினிமாக்களும் என் நட்பு வட்டாரத்தின் அரவணைப்பும் என் நாட்களை இனிதாக்கின.
புற்றுநோய் பாதிப்பு என்பது மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?
நோய் வந்துவிட்டது என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்துவது உண்மையே. அந்த மன அழுத்தத்தை உடைத்துவிடலாம் என முற்படும் போது சிகிச்சை முறை ஆரம்பமாகும். சிகிச்சையினால் விளையும் வலி மன அழுத்தத்தை இன்னும் அதிகரிப்பதாகவே இருக்கும். இருந்தாலும் அதையும் தகர்த்தெறிய ஒரு தாரக மந்திரம் இருக்கிறது.
அதுவே "நேர்மறை சிந்தனை". ஆம், 'நான் நன்றாக இருக்கிறேன். நலமுடன் திரும்புவேன்' எனத் திரும்ப திரும்பச் சொல்லிக் கொள்ளுங்கள். இடைவிடாமல் சொல்லிக் கொண்டே இருங்கள். ஒரு ஜெபம் போல் மீண்டும் மீண்டும் இந்த வார்த்தையை உச்சரியுங்கள். அவை நிச்சயம் உங்களுக்குள் ஒரு உந்துசக்தியை உருவாக்கும்.
அதைவிட முக்கியமானது தனிமையை தவிர்ப்பது. அதிக நேரம் தனித்திராதீர்கள். உங்கள் சொந்தம், பந்தம், நட்பு என யாராவது உங்களுடன் கலகலப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சிறு நடைபயிற்சிக்கு செல்லலாம். இல்லை 2 அல்லது 3 மணி நேரத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் ஒரு சினிமாவுக்கு சென்று விடலாம். அதுவும் இல்லாவிட்டால் தியானம் செய்யலாம். இப்படி எப்போதும் உங்களை நீங்களே பம்பரம் போல் சுழற்றிவிடுங்கள்.
நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால் மட்டும் போதாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களும் நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களை மனநல ஆலோசகர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அதில் வெட்கப்படுவதற்கு ஒன்று இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.
இப்படி நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதே இந்த நோயை வெற்றி காண சிறந்த வழி.
எனது குடும்பத்தினரும் சரி, எனது நண்பர்களும் சரி எனக்கு நம்பிக்கைத் தூண்கள். உங்கள் சுற்றமும் நட்பும் உங்களைப் பார்த்து பரிதாபப்படுபவர்களாக இருக்கக் கூடாது, உங்களுடன் சேர்ந்து நம்பிக்கை நாயகர்களாக இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம்.
ஒரு போராளியாக நீங்கள் எப்படி பெருமிதம் கொள்கிறீர்கள்?
இதில் பெருமித உணர்வைவிட நன்றி உணர்வுக்கே இடம் அதிகம். மார்பகப் புற்றுநோயை வென்றவர் என்ற வகையில் நான் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கையை அப்பட்டமாக உணர வைத்திருக்கிறது எனது போராட்டமும் வெற்றியும். எனக்கு கிடைத்த அனைத்துக்கும் நான் நன்றி சொல்கிறேன். நாளை என்ற நாள் பற்றிய கவலையில்லாமல் இன்றைய பொழுதை இனிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான்.
இப்படி ஒரு நோய் வந்திராவிட்டால் என் வாழ்வில் நான் தற்போது செய்த சில நல்ல காரியங்களை நான் செய்தே இருக்க மாட்டேன். சில செயல்களைச் செய்வதற்கான நம்பிக்கையையும், துணிச்சலையும் இந்த நோயே எனக்கு தந்திருக்கிறது. எனவே எல்லாவற்றிற்கும் நான் நன்றி சொல்கிறேன்.
வாழ்க்கையை தத்துவார்த்த ரீதியாக அணுகத் துவங்கியிருக்கிறீர்களா?
அப்படி அல்ல. யதார்த்தமாக அணுகுகிறேன். எனது வாழ்வியல் முறை முன்பைவிட சிறப்பானதாகவே இப்போது இருக்கிறது. எனக்கு இப்போது பயம் இல்லை. என் வாழ்வில் நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என விரும்பினேனோ அவற்றையெல்லாம் செம்மையாக செய்து கொண்டிருக்கிறேன். இவ்வுலக வாழ்க்கைக்கான பொருள் சார்ந்த விஷயங்கள் என்னை அதிகம் ஈர்ப்பதில்லை. இதுவே உண்மையான யதார்த்தம்.
உங்களது பணியிடச் சூழல் உங்களுக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்தது?
எனக்கு புற்றுநோய் தாக்கிவிட்டது எனத் தெரிந்தவுடன் என் அலுவலக நிர்வாகத் தலைவர்கள் என் மீது அதீத கருணையுடன் நடந்து கொண்டனர். நான் சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் 6 மாத காலம் எனக்கு விடுப்பு வழங்கினர். எனது தோழிகளிடன் இந்த நோய் குறித்து பேசினேன். நான் அவ்வாறு விழிப்புணர்வுக்காக பேசும்போதெல்லாம் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக சொன்னார்கள். நம்பிக்கை என்பது வெளியில் தேடிப் பிடித்து வாங்கும் பொருளல்ல. அது ஆழத்தில் எல்லோருக்குள்ளும் புதைந்து கிடக்கிறது. உங்களது நம்பிக்கையின் பலம் உங்களை நெருக்கடிகள் சூழும் போதே மேலோங்குகிறது. எனவே, நம்பிக்கையுடன் இருங்கள்.
நோய்கள் மலிந்து விட்ட இந்த உலகில் இன்சூரன்ஸ் எவ்வளவு முக்கியம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
இன்றைய காலகட்டத்தில் யாராக இருந்தாலும் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமானது. மருத்துவ சேவைகளுக்கான செலவினங்கள் அதிகரித்து வருவதால் காப்பீடு இருந்தால் அது ஆபத்பாந்தவனாக அமையும்.
நீங்கள் நினைக்கலாம் என் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள், எனக்கு எந்த நோயும் வராது என்று. ஆனால், இப்போதெல்லாம் நோய் எச்சரிக்கையில்லாமல் வந்துவிடுகிறது. எனவே, உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே மருத்துவக் காப்பீடு செய்யுங்கள்.
நீங்கள் எப்படியெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறீர்கள்?
வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் நான் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். எழுத்து மூலம் பிரச்சாரம் செய்கிறேன். சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் எழுத்தும், பேச்சும், கருத்தும் யாராவது ஒருவரை முழுமையாக சென்றடைதால்கூட போதும். அது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முதிர்ச்சியாக முடித்து கொள்கிறார் லதா.
அஞ்சி நின்றால் முடக்கும் சோகங்கள் துணிந்து எதிர்கொண்டால் எட்ட ஓடும் என நம்பிக்கையை விதைத்திருக்கும் லதா ஸ்ரீநிவாசன் வெற்றிப் பயணத்தை தொடர யுவர் ஸ்டோரியின் வாழ்த்துகளை பதிவு செய்வது அவசியம்.