அழகுதானா உச்சபட்ச அடைமொழி? ராதிகா ஆப்தே வீடியோ எழுப்பும் வினாக்கள்!
பெண் என்றால் சமூகத்தில் பெரும்பாலானோருக்கு சட்டென நினைவுக்கு வருவது 'அழகு'. பெண் என்பவள் அழகாக மட்டும்தான் இருக்க வேண்டுமா? பெண் ஏன் இந்தச் சமூகத்தால் அழகுப் பதுமையாக மட்டுமே பார்க்கப்படுகிறாள்?
இந்தக் கேள்விகளுக்கு இதுநாள்வரை தெளிவான விடையில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண்ணுக்கு அழகியல் சார்ந்த அர்த்தங்கள் புதிதாக கற்பிக்கப்படுகின்றன. வெட்கம் அழகு, நாணம் அழகு, அடக்கம் அழகு, அமைதி அழகு, தவிர புறத்தோற்றம் சார்ந்த அழகியல் அர்த்தங்களும் நம் சமூகத்தில் புரையோடிக்கிடக்கின்றன.
அண்மையில் நடிகை ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான வீடியோ பதிவை பார்க்க நேரிட்டது. கல்ச்சர் மெஷினின் யூடியூப் சேனல் பிளஷ்-ல் அந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.
இப்படித்தான் அந்த 4 நிமிட வீடியோ பதிவு விரிகிறது. அட்டைப் பெட்டிகள், பழைய புத்தகங்கள், அடுக்கி வைக்கப்படாத பொருட்கள் இடையே தேநீர் கோப்பையுடன் அமர்ந்திருக்கிறார் ராதிகா ஆப்தே. எதோ ஒரு பெட்டியை ஆராய அதில் அவரது சிறுவயது புகைப்படம் கிடைக்கிறது. புகைப்படத்தை பார்க்கும் ராதிகா, ஒருவேளை தன்னால் வாழ்க்கைப் பயணத்தில் பின்னோக்கிச் செல்ல முடிந்தால், தனது பால்ய பருவத்துக்குச் செல்ல நேர்ந்தால், தனது இளம் மனதுக்கு என்ன தேறுதல் சொல்லியிருக்கக்கூடும் என யோசிக்கிறார். அதற்கு அவரே சில பதில்களையும் சொல்கிறார்.
"மாறுவேடப் போட்டியில் இரண்டாவதாக வருவதால் ஏதும் இழப்பில்லை எனக் கூறியிருக்கலாம். இல்லை எதிர்காலம் உனக்காக பெரிய பொக்கிஷத்தை வைத்திருக்கலாம் எனக் கூறியிருக்கலாம். இப்படி பல்வேறு யோசனைகளையும் முன்வைத்துவிட்டு கடைசியாக ராதிகா சொல்வது இதுவே, 'நீ அழகாக இருக்கிறாய்'. ஆம், இதைத்தான் தனது சிறுவயது மனதுக்கு தான் சொல்லியிருக்கக் கூடும் அறிவுரையாக, ஆலோசனையாக இருந்திருக்கும் என்கிறார்.
சமூகத்தின் பார்வையிலே...
சமூகத்தின் முதல் பார்வையிலே ஒரு பெண் எப்படித் தெரிகிறாள். நெட்டையானவள், குட்டையானவள், அழகிய கண்கள் உடையவள், பொருந்தா கண்கள் கொண்டவள், சீரற்ற பல்வரிசை உடையவள், சத்தமாக சிரிப்பவள், உதடுகளை சுளிப்பவள் என அவளது புறத்தோற்றம், நடவடிக்கைகள் சார்ந்தே பார்க்கப்படுகிறாள்.
ராதிகா தோன்றும் வீடியோவின் நோக்கம் ஒரு பெண்ணின் அழகு இதுதான், ஒரு பெண் மகோன்னதமானவள் என நிர்ணயிப்பது இந்த காரணிதான் என்று வரைமுறைகளை வகுப்பதற்கு இந்தச் சமூகத்துக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை நிலைநாட்டுவதே.
சமூகம் தயாரித்துள்ள சட்டத்துக்குள் தன்னை பொருத்திக்கொண்டு தன்னை அழகானவள் என இந்த உலகுக்கு அடையாளப்படுத்துவதைவிட சமூகம் பார்த்து வியக்கும் வகையில் சில காரியங்களை செய்ய வேண்டும் என்ற அறிவுரையையும் அந்த வீடியோ வழங்குகிறது.
பதின்பருவத்தின்போது அறியாமை காரணமாக, சமூகம் பெண்ணின் அழகு குறித்து வகுத்த இலக்கணத்துக்குள் பொருத்திக்கொள்ள தான் செய்த முயற்சிகளை நினைத்தே இந்த வீடியோ மூலம் பெண்கள் மத்தியில் அழகு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடிக்க ஒப்புக்கொண்டதாக ராதிகா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
எண்ணமும் ஆக்கமும் சமமாக இருக்கிறதா?
பெண்ணின் அழகு குறித்த சமூகத்தின் பார்வையையும், பெண்களே கொண்டுள்ள பார்வை குறித்தும் பேசும் இந்த வீடியோவின் நோக்கம் மிக நேர்த்தியானது. ஆனால், அது படமாக்கப்பட்ட விதம் ஆகப் பொருத்தமானதா என்றால் அதில் சில கேள்விகள் எழுகின்றன.
பெண்ணானவள் சமூகத்தைப் போல தன்னை அழகுப் பதுமையாக பார்க்கக் கூடாது என வலியுறுத்தும் வீடியோவில் ஒரு பெண் தனது தோற்றம் எவ்வாறாக இருந்தாலும் தன்னை அழகானவளாக கருத வேண்டும் எனக் கூறுவதுபோல் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சமூகம் தன்னை பார்த்து வியக்கும் அளவுக்கு ஏதாவது செய்து காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தும்போது பங்கீ ஜம்பிங்கும், ராம்ப் வாக்கிங்கும் காட்டப்படுகின்றன. இவை அத்தனை பெரிய சவால்களா என்ன? ஒரு பெண்ணின் வீரம், விவேகம் குறித்தும் பேசியிருக்கலாம்.
ஒரு சீரிய கருத்தை முன்வைக்க எடுக்கப்பட்ட ஒரு புரட்சிகர வீடியோ பழமைவாதத்தை நொறுக்கும் பல சக்திவாய்ந்த பரிமாணங்களை உள்ளடக்கியிருந்தால் இன்னமும் வைரலாக பரவி இருக்கும்.
இருப்பினும், பெண்ணுக்கு புறத்தோற்றம் மட்டும் அழகு, ஒரு பெண்ணின் சரியான நடத்தை இதுதான், அதுவும் இந்தியப் பெண்ணின் இயல்பு இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் நிர்ணயிக்கும் உரிமை இந்த சமூகத்துக்கு இல்லை என்று சவுக்கை சுழற்றியுள்ளதற்காக கொடுத்த இந்த வீடியோவை பாராட்டாமல் இருக்க முடியாது.
என்ன... 'புற அழகு என்ற பார்வையே அபத்தம்; உங்கள் உண்மையான அழகைக் கண்டுணருங்கள்' என்ற சேதியைச் சொல்வதற்கும், அதை மக்கள் கவனிக்க வைப்பதற்கும் திரைப்பட ரசிகர்கள் பலராலும் பேரழிகியாகக் கொண்டாடப்படும் ராதிகா ஆப்தேவை நாட வேண்டிய நிலை இருப்பதுதான் கவலைக்குரிய நகைமுரண்!
வீடியோவைக் காண்பீர்...
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
அப்ரைசல் Vs ஆப்புரைசல் - குதூகலமாகக் குத்திக் காட்டும் குறும்(பு) படம்!
'பொண்டாட்டி தேவை'- வைரலாகி வரும் மாணவிகள் தயாரித்துள்ள யூட்யூப் வீடியோ!