5 கொசுவை பிடித்துக் கொடுத்தால் ரூ.1.50 சன்மானம்: டெங்குவை ஒழிக்க பிலிப்பைன்ஸ் வினோதத் திட்டம்!
டெங்கு கொசுக்களை அழிக்கும் முயற்சியாக, உயிருடன் அல்லது இறந்த கொசுவை கொண்டு வந்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும், என வித்தியாசமான ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது பிலிப்பைன்ஸ் நகரம் ஒன்று.
“நாராயணா இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலடா...” இது சூரியன் படத்தில் வரும் டயலாக் மட்டுமல்ல... நாம் அன்றாட வாழ்க்கையில் தினமும் சொல்லும் அல்லது கேட்கும் தவிர்க்க முடியாத டயலாக்குகளில் ஒன்று.
முன்பெல்லாம் மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே வந்து நமக்கு டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருந்த கொசுக்கள், இப்போதெல்லாம் 24/7 வேலை பார்த்து நம் உயிரை வாங்குகின்றன. வீட்டின் கதவு, ஜன்னல்களுக்கு என்னதான் நாம் வலைகள் அடித்து, கொசுவர்த்தி, ஸ்பிரே, என ஆயிரத்தெட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், ‘நான் போக மாட்டேனே.. இப்போ என்னா பண்ணுவனு...?’ என நம்மை வெறுப்பேற்றுகின்றன கொசுக்கள்.
சரி, அதன் ஒரு ட்ராப் வயிற்றுக்கு கொஞ்சம் ரத்தத்தைக் குடித்து விட்டு போகட்டும், நாமும் ஒரு உயிருக்கு சாப்பாடு கொடுத்தோம், என திருப்தி பட்டுக் கொள்ளலாம் எனப் பார்த்தால், நம் ரத்தத்தை உறிஞ்சி விட்டு, நமக்கு நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை.. நம் உடம்பை நோய்வாய்ப்பட வைத்து விடுகின்றன.

சரி, இப்படி நம்மை பாடாய் படுத்தும் கொசுவுக்கு, ‘இல்லையா சார் ஒரு எண்ட் கார்டு’ என நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்குத்தான் பிலிப்பைன்ஸ் அரசு வித்தியாசமான ஐடியா ஒன்றை அறிவித்துள்ளது.
அந்த ஐடியா என்னவென்றால், கைல காசு வாயில தோசை என்பது மாதிரி, ‘இந்தக் கைல கொசு.. அந்தக் கைல காசு’ என்பதுதான். இன்னும் உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், கொசுவை உயிருடனோ அல்லது கொன்றோ பிடித்துத் தருபவர்களுக்கு தக்க சன்மானம், என அறிவித்துள்ளது பிலிப்பைன்ஸ்.
இதோ அது பற்றி மேலும் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்...
கொசுவுக்கு சன்மானம்!
மனிதனுக்கு நோயை உண்டாக்குவதில் கொசுக்களின் பங்கு ரொம்பவே அதிகம். முன்பு மாதிரியெல்லாம் அவை வெளியில் சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பி நம்மைக் கடிக்க வருவதில்லை. நமக்கே தெரியாமல் வீட்டில் பல பகுதிகளில் அவை வாடகை தராமலேயே குடியிருக்கத் தொடங்கி விட்டன.
அவற்றின் வயிறு நிரம்ப நம் ரத்தத்தைக் குடித்து விட்டு, பின் அவை செரிமானம் ஆகும் வரையில் ஓய்வு எடுத்து விட்டு, பின் மீண்டும் வந்து ரத்தத்தைக் குடித்து என, ‘வந்தான்.. ரத்தத்தைக் குடிச்சான்.. போனான்.. ரிப்பீட்டு’ என வாழப் பழகி விட்டன.
காதோடு வந்து ரிங்காரமிடுவது, எதிர்பாராத நேரத்தில் கடிப்பது போன்ற டார்ச்சர்களோடு நிறுத்திக் கொள்ளாமல், போதாக்குறைக்கு நம் ரத்தத்தைக் கொடுத்ததற்கு ரிட்டர்ன் கிப்ட்டாக டெங்கு போன்ற நோய்களையும் நமக்கு பரப்பி விட்டு விடுகின்றன. அதனால்தான் இந்தக் கொசுவை ஒழிக்க ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு முறையில் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வரிசையில், பிலிப்பைன்சில் டெங்குவைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ அல்லது கொன்றோ பிடித்துத் தருபவர்களுக்கு சன்மானம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மண்டாலுயோங் நகரின் அடிஷன் ஹில்ஸ் என்ற பகுதியில்தான், இந்த புதுமையான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 100,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில் உள்ள அடிஷன் ஹில்ஸ் கிராமத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அருகிலுள்ள நகரமான கியூசான் இதனை ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளது. மேலும், இந்த டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் தடுக்கத்தான் இந்த வினோத முயற்சியை கையிலெடுத்துள்ளது அடிஷன் ஹில்ஸ் உள்ளூா் நிர்வாகம்.
அவர்களின் அறிவிப்பின்படி,
பொதுமக்கள் உயிருடனோ அல்லது கொன்றோ கொண்டுவந்து தரும் தலா ஐந்து கொசுக்கள் அல்லது கொசு முட்டைகளுக்கு ஒரு பிலிப்பைன்ஸ் பிசோ (அதாவது, இந்திய மதிப்பில் ரூ.1.50) சன்மானம் அளிக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபுணர்கள் எச்சரிக்கை
கொசுக்களை உயிருடனோ அல்லது கொன்றோ கொண்டு வந்து தருபவர்களுக்கு சன்மானம் என்ற இந்த அறிவிப்புக்கு அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். கொசுக்களைத் தேடிப்பிடித்து கொண்டு வந்து சன்மானத்தை பெற்றுச் செல்கிறார்களாம்.
ஆனாலும் இந்த முயற்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பைப் போலவே, இதற்கு சில பின்னடைவுகளும் உண்டு என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். அதாவது, சன்மானம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், குடிசைத் தொழில் மாதிரி, தண்ணீரைத் தேங்கவைத்து கொசுக்களை உற்பத்தி செய்து, சிலர் கொசுக்களை வளர்ப்பதையே தொழிலாக மாற்றி விடும் அபாயமும் உண்டு, என்கிறார்கள் அவர்கள்.
டெங்குவின் தாக்கம்
பிலிப்பைன்ஸில் இம்மாத முதல்தேதி நிலவரப்படி, இந்த ஆண்டு மட்டும் 28,234 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக பிலிப்பைன்ஸின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான கியூசானில் மட்டும் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே 10 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். அங்கு மட்டும் பதிவான 1,769 வழக்குகளில் இறந்த 10 பேரில் பெரும்பாலும் குழந்தைகளே அதிகம்.
அதேபோல், குவேஸான் நகரில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களின் தாக்கம் கடந்த வாரம் மிகவும் தீவிரமடைந்தது. அதன் தொடா்ச்சியாக, 9 புதிய பகுதிகளுக்கும் இந்த நெருக்கடி பரவும், என அதிகாரிகள் எச்சரித்தனா். இதன் காரணமாகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக அடிஷன் ஹில்ஸ் கிராமத் தலைவர் கார்லிட்டோ செர்னல் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும், டெங்குவைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அடிஷன் ஹில்ஸ் நிர்வாகம் மேற்கொண்டது. அதன்படி, அப்பகுதிகளில் சுத்தம் செய்தல், கால்வாய் அடைப்புகளை நீக்குதல், டெங்கு பரப்பும் கொசுக்கள் முட்டையிடும் இடங்களில் தண்ணீர் தேங்குவதைத் தடுப்பது மற்றும் சுகாதார விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்துதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் அவற்றிற்கு சரியான வரவேற்பு கிடைக்கவிலை. தொடர்ந்து, டெங்கு பாதிப்பு 42 ஆக உயர்ந்து, இரண்டு இளம் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எனவே, தான் இந்த அதிரடி சன்மானத் திட்டத்தை அறிவித்துள்ளார் அந்த கிராமத் தலைவர் கார்லிட்டோ செர்னல். டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்தால், இந்த திட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும், அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.