Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘ஆடைகளுக்கு பாலின வேறுபாடு கிடையாது’ - தாடி, மீசையுடன் புடவையில் வலம் வரும் இளைஞர்!

ஆடை விஷயத்தில் நிலவும் பாலின வேறுபாட்டைக் களைய வேண்டும் என்ற நோக்கத்தில், தாடி, மீசையுடன் புடவை கட்டிக் கொண்டு வீதிகளில் வலம் வரும் இளைஞரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

‘ஆடைகளுக்கு பாலின வேறுபாடு கிடையாது’ - தாடி, மீசையுடன் புடவையில் வலம் வரும் இளைஞர்!

Wednesday May 04, 2022 , 2 min Read

உணவு, உடை, இருப்பிடம் என மனிதர்களின் மூன்று அத்தியாவசியத் தேவைகளில் இரண்டாம் இடத்தில் இருப்பது உடைதான். என்னதான் நாகரீகம் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே சென்றாலும், உடை விசயத்தில் இன்னமும் பாலின வேறுபாடு தவிர்க்க முடியாததாகத்தான் உள்ளது.

ஆண்களின் உடைகளாகக் கருதப்படும் பேன்ட், சர்ட், டீசர்ட், இவ்வளவு ஏன் லுங்கிகளைக்கூட பெண்கள் இப்போது அணியத் தொடங்கி விட்டனர். அப்படியான உடைகளை அணியும் பெண்களை புதுமைப்பெண்களாக, நவநாகரீக மங்கைகளாகப் பார்க்கும் இதே சமூகம், ஆண்கள் பெண்களின் உடைகளை அணிவதை இழிவான ஒன்றாகவும், காமெடியாகவுமே கருதுகிறது. இதனாலேயே ஆசை இருந்தாலும்கூட பெண்களின் உடைகளை அணியத் தயக்கம் காட்டுகின்றனர் ஆண்கள்.

Pushpak

இப்படிப்பட்ட தயக்கங்களை உடைப்பதற்காகவே சிலர் தங்கள் உடல்களையே களமாக்கி, புதுமையான அதே சமயம் அமைதியான போராட்டங்களை மேற்கொள்கின்றனர்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான், கொல்கத்தாவைச் சேர்ந்த புஷ்பக் சென். 26 வயது இளைஞரான இவர், இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் பேஷன் மார்க்கெட்டிங் மற்றும் தொலைத்தொடர்புத் துறை படிப்பை முடித்தவர். இவர் சாலையில் நடந்து செல்லும் போது, அனைவரும் ஆச்சர்யத்தில் அவரை நிமிர்ந்து பார்க்கின்றனர். காரணம் விதவிதமான சேலையில் புஷ்பக் நகரை வலம் வருவதுதான்.

மீசை, தாடியோடு தலையில் தூக்கிப் போட்ட கொண்டை, நெற்றியில் பெரிய சிகப்பு நிற பொட்டு, முழுக்கை ரவிக்கை, அதற்கு கச்சிதமாக புடவை என இவரது கெட்டப் பார்ப்பவர்களை கவரும் வண்ணமாக இருக்கிறது. அதோடு இதே கெட்டப்பில் விதவிதமான போட்டோஷூட்களையும் நடத்தி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார் இவர்.
pushpak saree

புகழ் அடைய வேண்டும் என்ற ஆசையில் இல்லை, ஆடைகளில் பாலின வேறுபாட்டைக் களைய வேண்டும் என்பதற்காக இப்படியான வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் புஷ்பக்.

“ஃபேஷன் துறையில் வளர்ந்து வரும் நபர் என்ற விருது எனக்கு கிடைக்குமா? நான் விருது பெற விரும்புகிறேனா? இல்லை. பின்னர் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். வங்கத்தை, எனது பாரம்பரியத்தை, எனது தாய்மண்ணின் கலைநயத்தை நான் பிரதிபலிக்க விரும்புகிறேன்,’’ என தனது ஆடைக்கான காரணம் குறித்து இன்ஸ்டா பதிவொன்றில் அவர் கூறியுள்ளார். மேலும்,

“இதுபோன்ற சவால் மிகுந்த விஷயத்தை ஆன்லைன் தளங்களில் பேசுவது எளிதானது. ஆனால், யதார்த்த உலகில் அந்தத் தடைகளை தகர்த்து செயலில் காட்டுவது கடினம். ஆகவே தான், இதைப் பேசுவதோடு மட்டுமல்லாமல், அதற்கு நானே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்,’’ என்கிறார்.

தனது இந்த புரட்சிகரமான முயற்சிக்கு வீட்டிலும், அக்கம்பக்கத்திலும் ஆரம்பத்தில் எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறார் புஷ்பக். கடந்தாண்டு லிப்ஸ்டிக் பூசிய தனது புகைப்படத்தைப் பார்த்து தனது தாயாரும், அக்கம்பக்கத்தினரும் கடுமையாக விமர்சித்ததாக ஒரு பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், விமர்சனங்களைக் கண்டு அவர் அஞ்சி, பின்வாங்கிவிடவில்லை. தன்னை விமர்சித்தவர்களுக்கு தன் பாணியிலேயே பாடம் புகட்ட நினைத்த அவர், மீண்டும் சிவப்பு வண்ண லிப்ஸ்டிக் அடித்த புகைப்படத்தை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டதுடன், தனது அக்கம்பக்கத்தினருக்கும் லிப்ஸ்டிக்கை பார்சலாக அனுப்பியுள்ளார். கூடவே, ‘விரைவில் மீண்டு வாருங்கள்..’ என்றும் கேப்சனிட்டுள்ளார்.

saree

தனது மாநிலத்தில் மட்டுமின்றி, உலகின் ஃபேஷன் தலைநகரான மிலன் நகர வீதிகளிலும் சேலை கட்டி போட்டோஷூட் நடத்தியவர் உலகளவில் கவனம் பெற்றவர் புஷ்பக்.

ஆரம்பத்தில் இவரது முயற்சி கேலிக்குரிய ஒன்றாக பார்க்கப்பட்ட போதும், இப்போது பலரை யோசிக்க வைத்திருக்கிறது என்பது இவரது புகைப்படங்களுக்கு கீழே பதிவிடப்பட்டுள்ள கமென்ட்களைப் பார்க்கும்போது புரிகிறது. சேலை அணிந்த இவரது புகைப்படங்கள்தான் இப்போது சமூகவலைதளங்களில் வைரல்.

திரைப்படங்கள் தாண்டி, பாலிவுட் நடிகர்களான ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குர்ரான, ஜிம் சர்ப் ஆகியோரும்கூட சமீபத்தில் இதுபோன்ற ஸ்டைல்களை முயற்சி செய்துள்ளனர். ரன்வீர் சிங் ஹீல்ஸ் வைத்த செருப்பு மற்றும் அதற்கேற்ற உடையை அணிந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஆனால் பிரபலங்களைத் தாண்டி சாமானியர்களும் இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுத்திருப்பது நிச்சயம் வரவேற்புக்குரியது.

ஆணையும், பெண்ணையும் பாலின ரீதியாக வேறுபடுத்திக் காட்டும் முக்கிய கருவியான ஆடைகளில் இந்த மாற்றத்தைத் தொடங்க நினைக்கும் புஷ்பக் போன்றவர்களின் முயற்சிகள் நிச்சயம் பாராட்டுக்குரியவை.