2020ல் வித்தியாசமாக நடந்த லாக்டவுன் திருமணங்கள்!
திருமணம் என்றாலே கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் கொரோனா பிரச்சினையால் இந்தாண்டு மார்ச் இறுதியில் இருந்தே திருமணங்கள் கொண்டாட்டங்களைக் குறைத்து, வித்தியாசமான முறையில் தான் நடந்து வருகின்றன.
கொரோனா... 2020ம் ஆண்டில் நிச்சயம் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். கொரோனாவுக்கு பயந்து உலக நாடுகள் அனைத்தும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது. எதிர்பாராமல் கிடைத்த விடுமுறையை குடும்பத்துடன் குதூகலிக்கும் நேரமாக பெரும்பாலான மக்கள் மாற்றிக் கொண்டனர். ஆனால் அந்தக் கொண்டாட்டங்கள் குடும்பத்திற்குள்ளாக மட்டுமே சுருக்கிக் கொண்டாட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது.
இதனாலேயே முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த பல திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்கள் இல்லாமல் களை இழந்தன. வீடுகளில் 20 பேர் மட்டுமே மாஸ்க் அணிந்து கொண்டு சமூக இடைவெளியைக் கடைபிடித்து திருமணங்கள் நடைபெற்றன. இதுவே வித்தியாசமான திருமணங்கள் தான்.
ஆனால் இதிலும் வேறுபட்டு 2020ம் ஆண்டில் கொரோனா பிரச்சினையால், நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு ஆச்சர்யமும், அதிர்ச்சியும் தரும் வகையில் நடந்த வித்தியாசமான பல திருமணங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.
இதோ அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்...
ஸ்பீட் போஸ்ட்டில் தாலி
கேரளாவைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ், அஞ்சலி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாகவே அவர்களது திருமணப் பேச்சு ஆரம்பமாகி விட்டது. ஆனால் இடையில் கொரோனா பிரச்சினை தலையிட, கடந்த மே மாதம் Zoom மூலம் கோலாகலமாக நடந்து முடிந்தது இவர்களது திருமணம்.
திருமணம் Zoom-ல் நடக்கப்போவதை உறுதி செய்ததும், அதற்கான ஐடி மற்றும் பாஸ்வர்ட்டையே அழகிய அழைப்பிதழாக டிசைன் செய்தனர் மணமக்கள். கேரளாவில் இருந்த மணமக்களின் பெற்றோர், தங்களால் திருமணத்தில் கலந்து கொள்ள இயலவில்லை என்ற போதும், ஏற்கனவே தாங்கள் வாங்கிவைத்திருந்த ‘மாங்கல்யத்தை’ (தாலி) ஸ்பீட் போஸ்டில் மணமக்களுக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகென்ன உலகமெங்கிலும் உள்ள தங்களின் நண்பர்கள், உறவுகள் Zoom-இல் சூழ, அஞ்சலி கழுத்தில் தாலியைக் கட்டினார் விக்னேஷ். இதில் ஒரே ஒரு குறை என்னவென்றால் மணமக்களின் பெற்றோர்களால் இத்திருமணத்துக்கு வரமுடியவில்லை. அவர்களும் ஜூம் மூலமாகவே தங்கள் மகளையும், மருமகனையும் வாழ்த்தினார்கள்.
சாலையோரத்தில் திருமணம்
ஆரம்பத்தில் கொரோனா இவ்வளவு நாள் ஊரடங்கை நடத்த வைக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் பள்ளிகள் விடுமுறை என அறிவித்த போதுகூட, மக்கள் அதனை திடீர் விடுமுறையாகத்தான் கருதினர். அதே போல் தான், மார்ச் 22ம் தேதி ஒருநாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, மறுநாள் முதல் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடலாம் என்றுதான் நினைத்தனர்.
எனவே கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோயிலில் திருமணத்திற்காக முன்பதிவு செய்திருந்தவர்கள், 22ம் தேதி தங்களது உறவினர்களுடன் கோயிலிலுக்கு வந்தனர். ஆனால், கோயிலினுள் திருமணம் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, கோயில் நிர்வாகம் அவர்களை வீட்டிற்குத் திரும்பிப் போகச் சொல்லி அறிவுறுத்தினர்.
இதனால் கோயில் அருகில் சாலையில் வைத்தே, உறவினர்கள் முன்னிலையில் மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டி அழைத்துச் சென்றார். அவரவர் குடும்பத்தைச் சேர்ந்த உற்றார், உறவினர்கள் மலர் தூவி புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துச் சென்றனர்.
மாநில பார்டரில் திருமணம்
தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கு கேரள மாநிலம் கோட்டயம் காரப்புழா பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது. மே மாதம் இவர்களுக்கு இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறு வாளார்டி என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஊரடங்கு அமலில் இருந்ததால், மணமகன் பிரசாந்த், இ-பாஸ் பெற ஆன்லைன் மூலம் கேரளா செல்ல விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை. இருந்தபோதும் திருமணத்தை நிறுத்த இருவீட்டாருக்கும் மனமில்லை.
எனவே, கேரளாவில் இருந்து மணமகளும், தேனியில் இருந்து மணமகனும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட படி, மே 25ம் தேதி காலை தமிழக - கேரள எல்லையான குமுளி சோதனைச் சாவடிக்குத் திருமண உடையுடன் வந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இருமாநில போலீசாரும் விசாரணை நடத்தினர். அப்போது மாரியம்மன் கோயில் செல்ல அனுமதிக்குமாறு மணமகன் தரப்பில் கோரிக்கை வைத்தனர். ஆனால் இ-பாஸ் இல்லாமல் அனுமதிக்க முடியாது என கேரள போலீசார் கறாராக மறுத்துவிட்டனர்.
இதனால், அதே சோதனைச் சாவடியில் வைத்து காயத்ரி கழுத்தில் தாலி கட்டினார் பிரசாந்த். புதுமணத் தம்பதிகளுக்கு எல்லைப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இருமாநிலக் காவல்துறையினர், வருவாய்த் துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் உறவினர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
ஆனால் திருமணம் முடிந்து விட்ட போதும், இ-பாஸ் இல்லாத காரணத்தால் பிரசாந்தை கேரளாவுக்குள் அனுமதிக்க அம்மாநில போலீசார் மறுத்து விட்டனர். இருவருக்கும் இ-பாஸ் இல்லாத காரணத்தால், திருமணம் முடிந்த கையோடு புதுமணத்தம்பதி இருவரும், அவரவர் தங்களது வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
ரிப்பன் பிணைப்பு
கலிபோர்னியாவைச் சேர்ந்தவர்கள் பேட்ரிக் டெல்கடோவும், லாரன் ஜிமெனெஸ்சும். திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த நான்கு ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தது இந்த ஜோடி. கடந்த 2019ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்வது என முடிவெடுத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். 2020ம் ஆண்டு தங்களது திருமணத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டனர் பேட்ரிக்கும், லாரனும்.
ஆனால் கொரோனா இவர்களது திட்டத்தை மாற்றியது. எனவே மூன்று முறை அவர்களது திருமணம் தள்ளிப் போனது. எனவே நவம்பர் மாத இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்வது என முடிவெடுத்தனர். சரியாக திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருந்தபோது, மணப்பெண் லாரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் மீண்டும் திருமணம் தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டது.
அதனை விரும்பாத மணமக்கள், இம்முறை எப்படியும் திருமணத்தை நடத்தியே தீருவது என உறுதியாக இருந்தனர். அதன்படி, மணமகள் தனது அறை ஜன்னல் அருகே இருக்க, மணமகன் கீழே நின்றுகொண்டு திருமண பந்தத்திற்கான உறுதிமொழியை ஏற்றனர்.
அப்போது இருவரும் நீளமான ஒரு ரிப்பனைக் கொண்டு தங்களது கைகளை இணைத்திருந்தனர். திருமணத்தின் போது இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்திருப்பது போன்ற உணர்வைப் பெற இப்படிச் செய்ததாக கூறியுள்ளனர்.
கவச உடையில் திருமணம்
இதுவும் மேலே பார்த்தது போன்ற சம்பவம் தான். ஆனால் நடந்தது இந்தியாவில். ராஜஸ்தான் மாநிலம் பாரா எனும் ஊரைச் சேர்ந்தவர் மணமகள். திருமணம் நடைபெற இருந்த நாளில் தான், மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அவர் அதே ஊரில் உள்ள கெல்வாரா கோவிட் மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
திருமணக் கனவுகளோடு இருந்த தனது வருங்கால மனைவிக்கு இப்படி ஆகிவிட்டதே என கவலைப்பட்ட மணமகன், திட்டமிட்டபடி அன்றே திருமணத்தை நடத்தி முடித்து விடுவது என முடிவெடுத்தார்.
இதையடுத்து அரசிடம் முறையான அனுமதி பெற்று கொரோனா மையத்திலேயே அவர்களது திருமணம் நடந்து முடிந்தது. மணமக்கள் மற்றும் புரோகிதர்கள் என முக்கியமானவர்கள் மட்டுமே அத்திருமணத்தில் கலந்துகொண்டனர். அனைவரும் பிபிஇ எனப்படும் கொரோனா கவச உடை அணிந்து திருமணத்தில் பங்கேற்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
500கிமீ கார் ஓட்டிய மாப்பிள்ளை
மத்தியப் பிரதேசம் குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷ்ரவன். மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையில் புராஜெக்ட் மேனேஜராக பணி புரிந்து வரும் இவருக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜபல்பூரைச் சேர்ந்த ஸ்ருதி என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஸ்ருதி பிஎஸ்ஸி தேர்வுகளுக்கு தயாராகி வந்ததால், உடனடியாக அவர்களது திருமணம் நடைபெறவில்லை. எனவே மார்ச் மாதம் திருமணத்தை நடத்த இருவீட்டு பெரியவர்களும் தேதி குறித்தனர்.
அந்த சூழ்நிலையில் தான் கொரோனா பிரச்சினையால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எப்படியும் ஜூன் மாதத்திற்குள் நிலைமை சீராகி விடும் என திருமண தேதியை மாற்றினர். ஆனால் அப்போது நிலைமை சரியாவதாகத் தெரியவில்லை. எனவே திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்தனர்.
பொதுப் போக்குவரத்து வசதி இல்லாததால், தனது திருமணத்திற்காக சுமார் 500 கிமீ தூரம் தானே கார் ஓட்டி ஜபல்பூர் வந்து சேர்ந்தார் ஷ்ரவன். குறைவான உறவினர்கள் முன்னிலையில் அவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு மீண்டும் தனது மனைவியை அழைத்துக் கொண்டு தானே காரை ஓட்டிக் கொண்டு குணா சென்றடைந்தார் புதுமாப்பிள்ளை ஷ்ரவன்.
விழிப்புணர்வு திருமணம்
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக தரப்பட்டதால், திருமண நிகழ்ச்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக களைகட்டத் தொடங்கியுள்ளது. கிடைத்த வாய்ப்பை கொண்டாட்டத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல் விழிப்புணர்விற்கும் பயன்படுத்தியுள்ளனர் கோவில்பட்டியைச் சேர்ந்த மணமக்கள்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பொறியாளர்களான கௌதம் குமார், மனோகரி இருவரின் திருமணம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் திருமண அழைப்பிதழ் முதல் அனைத்திலும் அரசு விதிமுறைகளை திருமண வீட்டார் கடைபிடித்தனர்.
மணமக்களை வாழ்த்தி விதவிதமான பேனர்கள் வைக்காமல் சமூக இடைவெளியின் அவசியத்தை வலியுறுத்தியும், முகக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் பேனர்கள் வைத்தனர். பன்னீர் தெளித்து வரவேற்பு அளிக்க வேண்டிய இடத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, காய்ச்சல் கண்டறியும் தெர்மா ஸ்கேனரையும் பயன்படுத்தினர்.
திருமண விழாவிற்கு வந்தவர்களுக்கு தாம்பூல கவர்களில் கபசுர குடிநீர் பாக்கெட்டுகளும், முகக்கவசமும் வழங்கப்பட்டது. அனைவருமே விழிப்புணர்வுடன் செயல்பட்டு கொண்டாட்டங்கள் இருந்தாலும், கொரோனாவை எளிதில் வென்றிட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த திருமணம் நடந்து முடிந்து பாராட்டுகளைக் குவித்தது.
ஃபேஸ்புக் லைவ் திருமணம்
கோவை துடியலூர் அருகேயுள்ள குருடம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் பாபு என்பவருக்கும் பிரவீனாவுக்கும் ஊரடங்கிற்கு முன்னதாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஏப்ரல் 26ம் தேதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் திடீரென ஊரடங்கு விதிக்கப்பட, திருமணத்தை தள்ளி வைக்காமல் வித்தியாசமாக அதனை நடத்தி முடிக்க விக்னேஷ் முடிவு செய்தார்.
அதன்படி, ‘'ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் எளிய முறையில் வீட்டிலேயே திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு நிலைமை சீர் அடைந்த பிறகு வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைக்கின்றோம். திருமணத்தை நேரடியாக ஃபேஸ்புக் லைவ் மற்றும் யூடியூப்பில் காணுங்கள்,” என சமூகவலைதளங்கள் மூலம் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வித்தியாசமான அழைப்பிதழை அனுப்பினார்.
ஊரடங்கு தீவிரமாக இருந்த நிலையில் விக்னேஷின் இந்த வித்தியாசமான திருமண அழைப்பிதழ் சமூகவலைதளங்களில் வைரலானது. கூடவே, திருமண விருந்திற்காக திட்டமிருந்த விருந்து உணவை குருடம்பாளையம் ஊராட்சியோடு இணைந்து உணவின்றி தவிக்கும் 2 ஆயிரம் பேருக்கு வழங்கி அப்ளாஸ்களை அள்ளினார் புதுமாப்பிள்ளை விக்னேஷ்.
வீடியோ கால் திருமணம்
மார்ச் மாதம் திடீரென ஊரடங்கு விதிக்கப்பட்டதால் பீகாரில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஒரு திருமணம் நடந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பயணக் கட்டுப்பாடுகளால் மணமக்களே நேரடியாகச் சந்தித்துக் கொள்ள இயலாத நிலை. எனவே, குடும்பப் பெரியவர்கள் தொழில்நுட்ப உதவியுடன் அந்த திருமணத்தை நடத்தி முடித்தனர்.
தெலுங்கானாவிலும் இதே போன்ற ஒரு திருமணம் மார்ச் மாதம் நடைபெற்றது. கோட்டங்குடம் மாவட்டத்தை சேர்ந்த ஷேக் அப்துல் நபி என்பவரின் மகளுக்கும் சவுதி அரேபியாவில் பணி புரிந்துவரும் எம்பிஏ பட்டதாரி முகம்மது அத்னான் கான் என்பவருக்கும் திருமணம் நடத்த பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால் பல்வேறு நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட சவுதி அரேபியாவிலிருந்து அத்னானால் இந்தியா வர முடியவில்லை. எனவே திருமணத்தை வித்தியாசமான முறையில் வீடியோ கால் வழியாக செய்தனர்.
நாட்டு எல்லையில் திருமணம்
இந்தத் திருமணத்தில் மாப்பிள்ளை கனடாவைச் சேர்ந்தவர். மணமகளோ அமெரிக்காக்காரர். சர்வதேச விமானப் போக்குவரத்து கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட, கடந்த ஜூலை மாதம் இவர்களது திருமணம் இருநாட்டு எல்லையில் எளிமையாக நடந்து முடிந்தது.
இருநாட்டு எல்லைப் பாதுகாப்பு படையினரிடமும் அனுமதியுடன், மணமக்கள் மணமகன் குடும்பத்தோடு கனடா பகுதியில் நிற்க, மணமகள் குடும்பத்தினர் அமெரிக்கப் பகுதியில் நின்றார். இருவீட்டாருக்கும் இடையில் பெரிய முள்வேலி.
நல்லவேளையாக மணமகளும் கனடாவிலேயே இருக்க, முள்வேலிக்கு அந்தப்பக்கமாக இருந்து, மகளின் திருமணத்தை ரசித்தனர் பெற்றோர்.