மாட்டு கோமியம் விவகாரத்தில் கல்லீரல் மருத்துவரின் கேலியும்; ஸ்ரீதர் வேம்புவின் பதிலடியும் - தொடரும் சர்ச்சை!
மாட்டு கோமியம் மருத்துவ குணம் கொண்டது என்ற ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடியின் கருத்துக்கு ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு ஆதரவு தெரிவித்திருந்தார். அதற்கு கடுமையாக சாடிய கல்லீரல் மருத்துரின் கருத்துக்கு பதிலளித்த வேம்பு இடையே சமூக வலைதளத்தில் வார்த்தை போர் முற்றியது.
மாட்டு கோமியம் மருத்துவ குணம் கொண்டது என்றும், பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் கொண்டது என்றும், நமது வயிற்றில் ஏற்படும் ஜீரண கோளாறை குணப்படுத்தும் என்றும் பொங்கல் விழாவில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான விமர்சனங்கள் வலுத்த நிலையில், இது தொடர்பான சில ஆய்வு கட்டுரைகளை மேற்கொள் காட்டி அவைகள் தனது பேச்சுக்கான மூல ஆதாரம், என்றும் அறிவியல்பூர்வமாகவே தான் கருத்து தெரிவித்ததாகவும் விளக்கம் அளித்திருந்தார்.
மாட்டு கோமியத்தை அருந்துவது ஆபத்தானது, அது மருத்துவ குணம் கொண்டது என்பதற்கான அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை, என பலரும் காமகோடியை கடுமையாக விமர்சித்த நிலையில், காமகோடிக்கு ஆதரவாக தனது எக்ஸ் தளத்தில் Zoho நிறுவன செயல் இயக்குனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து பதிவிட்டிருந்தார்.
அதில், காமகோடி கல்வியாளர் மட்டுமின்றி, சிறந்த ஆராய்ச்சியாளார் என்றும், அறிவியல் கட்டுரைகளை மேற்கோள்காட்டியே கோமியம் குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும்,
"நவீன அறிவியல் நமது பல பாரம்பரிய அறிவை மதித்து அங்கீகரித்து வருகிறது என்றும், ஒரு சில ஆன்லைன் கும்பல் மட்டுமே அவருக்கு எதிரான பாரபட்சமாக கருத்து பகிர்ந்து வருவதாகவும் காட்டமாக விமர்சித்திருந்தார். இது மட்டுமின்றி, கோமியத்தை மருத்துவத்திற்கு பயன்படுத்துவதை எதிர்ப்பவர்கள், குடல் தொற்று நோய்க்கு, வேறு ஒருவரின் மலத்தை பெற்று அதைக்கொண்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவது குறித்து தெரியாதா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்."
ஸ்ரீதர் வேம்புவின் எக்ஸ் தள பதிவுக்கும் பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
அதில் ஒருவர் தான் கல்லீரல் மருத்துவர் (The Liver Doc) சிரியக் ஆபி பிலிப்ஸ். ஸ்ரீதர் வேம்புவின் கருத்தை மேற்கொள்காட்டி அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"கோயமியம் குறித்து ஸ்ரீதர் வேம்பு மற்றும் காமகோடி வெளியிட்டுள்ள கூற்றுகளுக்கு எந்த அறிவியல்பூர்வமான ஆதராமும் இல்லை என்றும், மனித நலன் சார்ந்த விவகாரங்களில், ஆதாரங்களுடன் விவாதிக்க இருவரும் தயாரா?" எனவும் வினா எழுப்பியிருந்தார்.
அத்தோடு அவர் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, ஸ்ரீதர் வேம்புவை மிக மோசமாக விமர்சித்திருந்தார். அறிவியல் படிக்காத 'பூமர் அங்கிள்' என்றும், பண்டைய முட்டாள்தனத்தை ஊக்குவிப்பவர் என்று ஆபி பிலிப்ஸ் கருத்து தெரிவித்திருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாரம்பரிய நடைமுறைகளிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டாலும், மலம் மாற்றும் அறுவை சிகிச்சை தொடர்பாக வேம்புவின் கருத்துக்கள் அறிவியலால் நிரூபிக்கப்பட்டவை, ஆனால், அதேசமயத்தில் கோமியம் சிகிச்சைக்கு நல்லது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை, என்றும் ஆபி பிலிப்ஸ் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு,
”அறிவியல்பூர்வமாக நிரூபிக்கவில்லை என்ற வாசகத்தை சொல்லியே நாட்டின் பண்டைய மருத்துவ முறைகளை சிலர் அவமதிப்பதாகவும் விமர்சித்திருந்தார். இடதுசாரி சிந்தனைவாதிகள் சிலர் அறிவியலை மட்டும் நம்புங்கள் எனச் சொல்லி பாரம்பரிய அறிவு கட்டமைப்பு சிதைக்க முயல்கிறார்கள்,” என ஸ்ரீதர் வேம்பு காட்டமாக பதிலிட்டுள்ளார்.
மேலும், ஸ்ரீதர் வேம்புவின் இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள மருத்துவர் பிலிப்ஸ், ஸ்ரீதர் வேம்பு, காமகோடி போன்ற சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள், அறிவியல்பூர்வமாக கருத்துக்களை மட்டுமே பகிரவேண்டும் என்றும், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத பண்டைய போலி நடைமுறைகளையும், காலாவதியான சிகிச்சை முறைகளையும் ஆதரிக்கக்கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
வெறும்காலில் நடப்பதில் நன்மைகள் உள்ளன என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீதர் வேம்பு கருத்து வெளியிட்டு இருந்தார். அப்போதும் கல்லீரல் மருத்துவரான பிலிப் விமர்சித்து இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே சமூக வலைதளத்தில் வார்த்தைப் போர் நடந்தது. அந்த சமயத்திலும் கூட ‘திமிர்பிடித்த மருத்துவர்களிடமிருந்து விலகி இருங்கள்’ என்று தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு அறிவுறுத்தி, எனக்குத் தெரிந்த சிறந்த மருத்துவர்கள் அனைவரும் அடக்கமானவர்கள், ஏனென்றால் மனித உடல் எவ்வளவு சிக்கலானது என்பது அவர்களுக்குத் தெரியும், என்று வேம்பு கூறி இருந்தார்.