'தலைமையேற்க அனுமதிக்காக காத்திருக்காதீர்கள்' - SheSparks-இல் பெண்களுக்கு டாக்டர்.ரஞ்சனா குமாரி அழைப்பு!
யுவர்ஸ்டோரியின் SheSparks 2025 நிகழ்ச்சியில் பேசிய டாக்டர்.ரஞ்சனா குமாரி, நிர்வாகம், தலைமை மற்றும் கொள்கை வகுத்தல் ஆகிய துறைகளில் பெண்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்றும், பிரிதிநித்துவம் அவர்கள் உரிமை என்றும் வலியுறுத்தினார்.
சமத்துவம் என்பது அதிகாரம் எனும் நம்பிக்கை கொண்ட டாக்டர்.ரஞ்சனா குமாரி நிர்வாகம், தலைமை மற்றும் கொள்கை வகுத்தல் ஆகிய துறைகளில் தங்களுக்கு உரிய இடத்தை பெண்கள் கைப்பற்ற வேண்டும், என வலியுறுத்தினார்.
பெங்களூருவில் நடைபெற்ற SheSparks 2025 நிகழ்ச்சியில் பேசிய ரஞ்சனா குமாரி, இந்தியாவில் பெண்ணுரிமைக்கு ஆதரவாக சட்ட மற்றும் கொள்கை சார்ந்த மாற்றங்களுக்காக பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை நினைவு கூர்ந்தார்.

சமூக ஆய்வுக்கான மையத்தின் இயக்குனராக இருக்கும் ரஞ்சனா குமாரி,. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் இயக்கத்தில் முன்னிலையில் இருக்கிறார். முடிவெடுக்கும் பொறுப்புகளில் இருந்து பெண்களை விலக்கி வைத்த அமைப்பு சார்ந்த தடைகளை அவர் விளக்கினார்.
வீடு அல்லது பணியிடத்தில் பெண்களை பாதுக்காக்க நம்மிடம் வரைவுதிட்டமோ, தடுப்பு வேலிகளோ இல்லை என்று குடும்ப வன்முறை சட்டம் மற்றும் பணியிட சீண்டல்களுக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முந்தைய நிலையை சுட்டிக்காட்டி குறிப்பிட்டார்.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கான போராட்டமும் அவரது பேச்சின் மையமாக அமைந்தது.
“நாம் அதற்காக 27 ஆண்டுகள் போராடினோம் என்று குறிப்பிட்டவர், இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து வந்த எதிர்ப்புகளையும் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்திற்குள் இந்த மசோதாவுக்கு எதிராக உறுப்பினர்கள் செயல்பட்ட விதம் பற்றி கூறியவர், அவர்களில் சிலர் ‘எங்கள் சடலங்கள் மீது தான் இது நிறைவேறும்,“ என்று முழங்கியதையும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் எண்களுக்கு 33 சதவீத இடம் அளிக்கும் இந்த மசோதா இறுதியாக நிறைவேற்றப்படுவதற்கு முன் தொடர்ச்சியாக தடைகளை எதிர்கொண்டது.
இது தொடர்பாக மாற்றத்தை கொண்டு வருவதற்கான செயல்பாட்டு உத்திகளையும் குறிப்பிட்டார்.
"நாடு ஒப்புக்கொள்ளும் வரை மக்கள் ஒப்புக்கொள்ளும் வரை எதுவும் மாறாது என நம்பினோம்," என்று தெரிவித்தார்.
பெண்ணுரிமை குழுக்கள் நாடு முழுவதும் ரயில் பயணம் மேற்கொண்டு, இந்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களிடம் கையெழுத்து சேகரித்தது. அரசியல் தலைவர்கள் செயற்பாட்டாளர்கள் நேரடியாக எதிர்கொண்டனர்.
வாஜ்பாயி பிரதமராக இருந்த போது அவரை சந்திக்க நேரம் கேட்டு, அவரது இல்லத்தை முற்றுகையிட்டோம் என்றார். நாங்கள் அத்துமீறுவதால் கைது செய்யப்படலாம் என எச்சரிக்கப்பட்ட போதும் பின்வாங்கவில்லை, என்றார்.
இந்த முயற்சிகளை எல்லாம் மீறி, பாலின பிரதிநித்துவத்தில் இந்தியா இன்னமும் பின் தங்கியுள்ளது என்றார்.
"உலக அளவில் பெண்கள் நாடாளுமன்றத்தில் 28 சதவீதம் இருக்கின்றனர். இந்தியாவில் இது 14 சதவீதம் மட்டும் தான்," என்றார்.
சட்டமன்றங்களில் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. மாநிலங்களில் இது 3 முதல் 9 சதவீதமாக அமைகிறது. முடிவெடுக்கும் பொறுப்புகளில் பெண்கள் குறைவாக இருப்பது அரசியலை கடந்தும் நிலவுகிறது.தொழில்கள் மற்றும் அமைப்புகளில் உள்ள பாலின இடைவெளியை சுட்டிக்காட்டினார்.
"நாம் மேஜையில் இல்லை என்றால், நமக்கு பாதகமாக தான் இருக்கும் என்றவர், தங்களை வடிவமைக்கும் கொள்கை முடிவுகளை உருவாக்க பெண் தலைமை தேவை என்றார்.
"பெண்கள் சிறிய பலன்களை பெறுவதற்கானவர்கள் அல்ல. இது அரசியல்சாசன, சட்ட மற்றும் மனித உரிமை சார்ந்தது. தொழில்முறைம் பரப்பில் பெண்கள் தங்களுக்கு தாங்களே உதவிக்கொள்ள வேண்டும்," என்றார்.
"தயவு செய்து பேசுங்கள், நம்மில் பலருக்கு மேஜையில் இடம் இருக்கிறது. ஆனால் நாம் பேசத் தயங்குகிறோம். நம் எண்ணங்களும் மிகவும் முக்கியமானவை” என்றார். மெட்டா இயக்குனர் குழுவில் தனது அனுபவத்தை குறிப்பிட்டவர், நிறுவனங்கள் பெண்களின் சமூக மற்றும் கலாச்சார நிதர்சனங்களை புரிந்து கொள்ளாததால், அவர்கள் தேவைகளுக்கு ஏற்ற முடிவுகள் எட்டப்படுவதில்லை, என்றார்.
பாலின சமத்துவத்தை அடைவதில் குரல் கொடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
"அடங்கிப்போவதை நிராகரிப்பது மட்டும் போதாது, நாம் விவாதங்கள், முடிவுகளில் தாக்கம் செலுத்த வேண்டும் என்றவர், சமத்துவத்திற்கான வேட்கை அனைத்து துறைகளிலும் எதிரொலிக்க வேண்டும்," என்றார்.
ஆங்கிலத்தில்: சயான் சென், தமிழில்: சைபர் சீம்மன்
Edited by Induja Raghunathan