Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

செயல்முறைக் கல்வி மூலம் குழந்தைகள் வாழ்வில் ஏற்றத்தை தரும் 'ஃப்ளின்டோபாக்ஸ்'

செயல்முறைக் கல்வி மூலம் குழந்தைகள் வாழ்வில் ஏற்றத்தை தரும் 'ஃப்ளின்டோபாக்ஸ்'

Wednesday February 24, 2016 , 7 min Read

அப்பா கடல் ஏன் நீலமா இருக்கு! வானம் ஏன் தூரமா இருக்கு! என்று குழந்தைகள் கேட்கும் கேள்வி சில நேரங்களில் நம்மை திகைக்க வைத்து விடும். அந்த அளவிற்கு அவர்களின் கற்பனைத் திறன் இளம் வயதில் பம்பரமாய் சுற்றி யோசிக்கும், எனவே அவர்களுக்கு சரியான வழிகாட்டல் அந்த வயதில் தேவை. அவர்களுக்கு நாம் கற்பிக்கும் விஷயங்களே அவர்களை சிறந்தவர்களாக வடிவமைக்கும். ஆனால் வேகமாக மாறிவரும் இந்த தொழில்நுட்பக் காலத்தில் குடும்ப நிர்வாகம், குழந்தை வளர்ப்பு ஆகியவை பெற்றோர்களுக்கு சவாலான வார்த்தைகளாகிவிட்டன. 

நிதித்தேவை பெற்றோர்களை வேகமாக ஓடவைத்து, வாழ்க்கை முறையில் குழந்தைகளை கவனிக்க போதுமான நேரம் ஒதுக்கமுடியாமல் ஆக்கிவிடுகிறது. இதன் விளைவு வளர்பருவக் குழந்தைகள் தொலைக்காட்சி, வீடியோ கேம் மற்றும் செல்போன் விளையாட்டுகளில் மூழ்கிகிடக்கின்றனர். இப்படி குழந்தைகளோடு நேரம் செலவிட முடியாததால் அவர்களை சரியாக வழிநடத்த முடியவில்லை என்று கவலைப்படும் பெற்றோர்களுக்கு தீர்வு தருகிறது "ஃப்ளின்டோபாக்ஸ்" (Flintobox) நிறுவனம்.

குழந்தைகளுக்கான கல்வியை விளையாட்டின் மூலம் புகுத்தி வரும் 'ஃபிளின்டோபாக்ஸ்'-ன் இணை நிறுவனர் அருண் பிரசாத்திடம் தமிழ் யுவர் ஸ்டோரி நடத்திய கலந்துரையாடல் இதோ...

செயல்வழிக் கற்றலே குழந்தைகளின் அறிவுத்திறனை ஊக்கப்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லாதவர் அருண் பிரசாத், 

“நம் நாட்டில் கல்வி கற்கும் முறையை மேம்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பாடத்தை மனப்பாடம் செய்ய வைப்பதை விட அவர்களுக்கு அவற்றை செயல் மூலம் புரிய வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். குழந்தைகளின் கற்பனைத் திறனையும், பேராவலையும் பூர்த்தி செய்ய வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. ஆனால் பொருளாதாரம் அதற்கு கைகொடுப்பதில்லை என்று பலரும் நினைக்கின்றனர். அவர்களின் கவலையை துடைக்கும் எங்களின் முயற்சிக்கான அடையாளமே ஃப்ளின்டோபாக்ஸ்” என்கிறார் அவர்.
image


ஃப்ளின்டோ, வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கும் 2 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளின் செயல்திறனுக்கு ஏற்ப அறிவுத்திறனை மேம்படுத்தும் விளையாட்டு பொருட்களை கொண்ட ஒரு பெட்டி. இது குழந்தைகளை தொலைக்காட்சி பார்ப்பதில் இருந்து விடுதலை செய்து அவர்கள் நேரத்தை அர்த்தமுள்ள வகையில் செலவிட்டு அதன்மூலம் அறிவை வளர்த்துக் கொள்ள உதவுகிறது. 

“குழந்தைகளின் 90 சதவிகித மூளை வளர்ச்சி இந்த 6 ஆண்டு செயல்பாடுகள் மூலமே அதிகரிக்கும் என்பதால் எங்கள் குழு இவர்களை மையப்படுத்தியே விளையாட்டு பொருட்களை உருவாக்குகிறது என்கிறார் அருண். 

"2 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளை நாம் செதுக்கி வடிவமைக்கும் முறையே அவர்களை வாழ்நாள் முழுவதும் வழிநடத்திச் செல்லும் என்கிறது ஆய்வு, எனவே இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒருமுகப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்காக குழந்தைகள் 12 வித்தியாசமான பகுதிகளில் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்று ஆராய்ச்சிகள் வலியுறுத்துகிறது,” என்கிறார் அருண். 

ஒவ்வொரு மாதமும் குழந்தைகளின் பேராவலை பூர்த்தி செய்யவும் அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் சந்தா முறையிலான திட்டங்களில் குதூகலம் நிறைந்த விளையாட்டு பொருட்களை உள்ளடக்கிய பெட்டியை ஃபிளின்டோ டெலிவரி செய்கிறது. இந்த பெட்டியில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழந்தை வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படும் குழுவை உருவாக்குகிறது என்று பெருமைப்படுகிறார் அருண். ஒவ்வொரு பெட்டியிலும் கற்பனைத்திறன், கண்டுபிடிப்பு, மொழி உள்ளிட்ட 12 வெவ்வேறு பகுதிகளை உள்ளடக்கிய விதவிதமான செயல்திறன்கள் அவர்களுக்கு விளையாட்டு வழியே திறனை மேம்படுத்தும் என்று விளக்கமளிக்கிறார்.

image


நாம் ஒரு புள்ளி வைத்தால் போதும் குழந்தைகள் அதைவிட பலமடங்கு யோசிப்பர். அவர்களின் அறிவுத் திறனை தூண்டுவதன் மூலம் உதயமாகும் பல நல்ல எண்ணங்கள், சிந்தனைகள், ஈர்ப்புகளை அவர்கள் தங்களது அன்றாட வாழ்வில் செயல்படுத்துவர். பெற்றோரின் அரவணைப்பில் அவர்களுக்கு எப்போதும் கிடைக்கும் ஒரு ஆலோசனையைப் போல இது திகழ்வதால் அவர்களுக்கு கவனச் சிதைவை ஏற்படுத்தும் மற்ற பொழுதுபோக்கு எந்திரங்கள் மீதான நாட்டம் குறைந்து விடும் என்கிறார் அருண்.

ஃப்ளின்டோபாக்ஸ்-ம் நற்பண்புகளும்

2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட ஃப்ளின்டோபாக்ஸ் நிறுவனம் இணையவழியில் வர்த்தகத்தைத் தொடங்கியதாகக் கூறுகிறார் ராமநாதபுர மன்னின் மைந்தன் அருண் பிரசாத். ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் ஃப்ளின்டோ, மக்களைச் சென்றடைத்ததாகக் கூறும் அவர், புத்துணர்ச்சியோடு சந்தையில் புதிய திட்டத்தோடு வெளிவந்த எங்கள் பொருளுக்கு தொடக்கம் முதலே நல்ல வரவேற்பு இருந்தது என்கிறார்.

ஃப்ளின்டோபாக்ஸை தேர்வு செய்வதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் அருண் பிரசாத் பட்டியலிட்டார்:

1. பணத்திற்கு மதிப்பு – குழந்தைகளுக்கு 4-5 வரையிலான வெவ்வேறு திட்டங்களை உள்ளடக்கிய பொருட்கள் அளிக்கப்படும். 6 மாத சந்தாவிற்கு ரூ.645 கட்டணமும், 3 மாத சந்தாவிற்கு ரூ.695 சந்தாவும் வசூலிக்கப்படுகிறது.

image


2. ஈடுபாட்டோடு இருத்தல் – குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டிய 2 முதல் 8 வயது வரையிலான அறிவுத்திறனை மட்டுமே குறியாக வைத்து செயல்கள் மற்றும் விளையாட்டுகளை ஃப்ளின்டோ கட்டமைக்கிறது, மற்ற நிறுவனங்கள் இது போன்று வயது வாரியாக செய்வதில்லை.

3. இ-காமெர்ஸ் – இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பொம்மை நிறுவனங்கள் கூட இணையம் வழியே 5-8% விற்பனையையே செய்ய முடிகிறது, ஆனால் எங்கள் நிறுவனம் 100% இணைய வழி வர்த்தகம் மூலமே இளம் பெற்றோர் மற்றும் குழந்தைகளை பயன்பெற வைக்கிறது.

4. மனதிருப்தி – பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு எங்கள் மூலம் சிறப்பான செயல் வழி கற்றல் பேக்கேஜை கொடுத்த திருப்தியோடு பணிக்குச் செல்லலாம்.

ஃப்ளின்டோபாக்ஸ்ன் தொழில்நுட்ப வளர்ச்சி

இணையம் வழியிலான வர்த்தகத்தில் மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் 2015ம் ஆண்டு ஃப்ளின்டோ செயலியை அறிமுகம் செய்தது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவச பதிவிறக்கம் செய்து கொள்ளும் இந்த செயலியில் உள்ள சிறப்பம்சங்கள்:

image


கதை சொல்லி- பன்மொழி ஒலிப்புத்தகங்கள்

இந்தப் பகுதி குழந்தைகளிடம் சுயமாக கதைசொல்லும் திறனை வளர்ப்பதோடு, தங்கள் விருப்ப மொழியை சரளமாக பேசவும் உதவும். அதே போன்று இரவு நேரங்களில் பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல நல்ல கதைகளைச் சொல்லும் வாய்ப்பை உருவாக்குகிறது. தற்போது ஆங்கிலம், இந்தி, தமிழ் மொழிகளில் இந்த சேவை வழங்கப்படுகிறது.

பெற்றோரை ஒவ்வொரு வாரமும் இணையவைத்தல்:

ஃப்ளின்டோபாக்ஸ் செயலி பெற்றோர் தங்களின் பிள்ளைகளுக்கு ஏற்ற செயல்திறன்களை அவர்களோடு இணைந்து முயற்சிக்கும் ஒரு நிகழ்ச்சி. வாரந்தோறும் நடைபெறும் இதில் எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கும் இந்தமுயற்சி குழந்தைகளுடன் பிணைந்திருக்க முடியவில்லை என்று கருதும் பெற்றோர் ஒரு நாளேனும் அவர்களோடு இணைந்து சுவாரஸ்யமான விளையாட்டு மற்றும் புதிய முயற்சிகளை செய்து பார்க்கலாம்.

பெற்றோருக்கான குறிப்புகள்

குழந்தைகளோடு இணைந்திருக்கும் செயல்களைத் தவிர, இந்த செயலியில் பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய குறிப்புகள் மற்றும் அனுபவங்கள் கட்டுரைகளாக வழங்கப்படும். இந்த கட்டுரைகள் அனைத்தும் முன்பள்ளி (Preschool), கிண்டர்கார்டன் ஆசிரியர்கள், குழந்தைகள் நல ஆலோசகர்கள், மற்றும் மனநல ஆலோசகர்களோடு இணைந்து குழந்தைத்திறன் மேம்பாடு, பெற்றோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள், ஊட்டச்சத்து ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் இருந்து கருத்துகளைப் பெற்று அவை கட்டுரையில் இணைக்கப்படுகிறது.

image


ஃப்ளின்டோபாக்ஸின் தொடக்கம்

கல்வி மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈடுபாடு இருக்கும், கல்வித் துறையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. என்னுடைய நண்பர் இந்த ஸ்டார்ட் அப் எண்ணம் குறித்து கூறிய போது ஒரு கனம் கூட யோசிக்காமல் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியதாகச் சொல்கிறார் அருண். 

“என்னுடைய நண்பர் விஜய் தன் 5 வயது மகன் அதர்வா, நேரம் காலம் இல்லாமல் தொலைக்காட்சி மற்றும் செல்போனிலேயே கவனச் சிதைவு அடைவதைப் பார்த்து, அதற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்ய நினைத்தார். அந்தச் சிறுவனை திறன் வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் ஈடுபடச் செய்தார், வேலைக்குச் செல்லும் மற்ற பெற்றோரும் இதே சூழ்நிலையை எதிர்கொள்வார்கள் என்பதை என்னோடு பகிர்ந்து கொண்டார். அப்போது தான் நாங்கள் இதை ஒரு பொருளாக தயாரித்து சந்தைப்படுத்தலாம் என்று முடிவு செய்தோம்". 

உடனடியாக குழந்தைகள் மேம்பாடு, விளையாட்டு வடிவமைப்பு, கல்வியை கட்டமைக்கும் முதல்கட்ட ப்ரோட்டோடைப் நிபுணர்களின் உதவியோடு நாங்கள் மக்களிடம் இந்த திட்டத்தை செயல்படுத்தினோம். முதற்கட்டமாக 60-க்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் பெற்றோரிடம் இதைக் கொண்டு சேர்த்த போது அவர்கள் பொருட்களின் தரம் மற்றும் எங்களின் புதிய எண்ணத்தை விரும்பினர். இதுவே எங்களது குழுவை ஃப்ளின்டோபாக்ஸ் நிறுவனமாக கட்டமைக்க உதவியது” என்கிறார் MBA பட்டதாரி அருண் பிரசாத்.

ராமநாதபுரம் மாவட்டம் மனன்குடியைச் சேர்ந்த அருண் பிரசாத் பள்ளிப்படிப்பிற்கு பின் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். இதன் பின்னர் டார்த்மோத்தில் உள்ள டக் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ பயின்றார். பொருட்கள் மேலாண்மை பற்றிய அறிவு அருணுக்கு வருவதற்கு காரணமாக அமைந்தவை அவரது அனுபவங்களே, அருண், சாம்சங் கொரியா நிறுவனத்தில் மார்க்கெட்டிங் (M&A) பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர், மேலும் தொடக்க கால அமெரிக்க ஹெல்த்கேர் ஸ்டார்ட்அப்களுக்கு VC நிதி முதலீட்டாளராகவும் செயல்பட்டுள்ளார்.

ஃப்ளின்டோ குழு கட்டமைப்பு

தன்னுடைய அனுபவங்களையும் இணை நிறுவனர்கள் விஜயய்பாபு காந்தி மற்றும் ஸ்ரீநிதியை இணைத்து ஃப்ளின்டோவை உருவாக்கினார் அருண். விஜய்பாபு சன் மைக்ரோ சிஸ்டம்ஸ், ஆரகிள், ஜூலை சிஸ்டம்ஸ் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். அவர் எம்ஐடியில் பயின்ற தொழில்நுட்ப பட்டதாரி, விஜய் ஃப்ளின்டோவின் தொழில்நுட்ப வடிவமைப்பாளர். 

image


இதே போன்று மற்றொரு இணை நிறுவனரான ஸ்ரீநிதியும் தொழில்நுட்பப் பட்டதாரி. இந்தியாவின் ரைடட்ஷேரிங் தளமான ஜிங்ஹோப்பரில் தொழில்நுட்பத் தலைவராக பணியாற்றி இருக்கிறார். ஸ்ரீநிதி ஃபிளின்டோவில் ரோபோக்களை உருவாக்கல் மற்றும் பொருட்கள் தயாரிக்கும் குழுவில் தொழில்நுட்ப & வடிவமைப்புத் தலைவராகவும் விளங்குகிறார்.

முதலீடும் நிதியுதவியும்

சென்னையில் தொடங்கி, நடத்தப்பட்டு வரும் ஃப்ளின்டோ நிறுவனத்திற்கான தொடக்கக்கால நிதியை நாங்கள் எங்கள் மூன்று பேரின் சேமிப்பில் இருந்து முதலீடு செய்தோம் என்கிறார் அருண். அதனால் ஒரு பக்கம் வியாபார பிரச்னைகள் மற்றொரு பக்கம் சொந்தப் பிரச்னைகள் என்று சிக்கித் தவித்ததாகச் சொல்கிறார். இரண்டிற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு தான் இடைவெளி, ஏனெனில் எங்களது தயாரிப்பு புதிய பரிமாணத்தில் இருந்ததால் அது மற்றவர்களின் மனதில் இடம்பிடிக்க கொஞ்ச காலம் தேவைப்பட்டது. இந்த காலகட்டத்திற்குள் எங்களது சொந்த செலவுகளுக்கான நிதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது, ஆனால் அந்த கஷ்டகாலங்களில் எங்களுடைய குடும்பத்தார் ஆதரவு அளித்ததோடு, எங்களை புரிந்து கொண்டு, நம்பிக்கையோடு இருந்தனர் என்று நெகிழ்கிறார் அருண் பிரசாத்.

ஸ்டார்ட் அப்களுக்கு ஏஞ்சல் நிதியுதவி அளிக்கும் GSF க்ளோபல், அமெரிக்காவைச் சேர்ந்த க்ளோக்வெஸ்டார், ஜெர்மனியின் AECAL மற்றும் Mauj Mobile ல் இருந்து $300,000 நிதியை 2014ம் ஆண்டு ஃப்ளின்டோ பெற்றுள்ளது. இந்த நிதியைக் கொண்டு சந்தையை அளவிடவும், செயல்பாடுகள் மற்றும் பொருட்களை மேம்படுத்தவும் பயன்படுத்திக் கொண்டோம் என்கிறார் விடாமுயற்சியை நம்பிக்கையாகக் கொண்ட அருண் பிரசாத். எங்களது தயாரிப்புகள் இந்தியாவில் 35 நகரங்களில் 1,20,000 வாடிக்கையாளர்களை மகிழ்விக்கிறது என்று கூறும் அருண், கல்விக்கு முக்கியத்துவம் தேவைப்படும் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து பலரும் எங்கள் புதிய முயற்சிக்கு ஆர்வம் தெரிவிக்கின்றனர் என்றார். எனவே அடுத்தகட்டமாக ஓராண்டிற்குள் இந்த இரு நாடுகளுக்கும் எங்களது திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் முடிவெடுத்துள்ளதாகக் கூறுகிறார்.

ஃப்ளின்டோபாக்ஸ் பிசினஸ் டுடேவின் 'கூலஸ்ட் ஸ்டார்ட் அப் 2014' விருதையும், சிஐஐ எனப்படும் இந்திய தொழில்தறை கூட்டமைப்பிடம் இருந்து 'சிறந்த கல்வி ஸ்டார்ட் அப் 2014' விருதையும் பெற்றது எங்களது பயணத்தில் மைல்கல் என்கிறார் அருண்பிரசாத். அதே போன்று 'kidstoppress 2014'ம் ஆண்டின் சிறந்த சந்தா பெட்டிகள் என்று எங்கள் தயாரிப்பை பாராட்டி கவுரவித்ததாகவும் பெருமைப்படுகிறார் அவர்.

image


கற்றுக் கொண்ட பாடம்

ஃப்ளின்டோபாக்ஸ் ஒரு தனித்துவமான பொருள். எங்கள் பொருட்கள் பற்றி மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை, அதே சமயம் ஆரம்ப கால கல்விக்குத் தேவையான அம்சங்கள் இவை என்பதை மக்களுக்கு புரிய வைப்பது கடினமாக இருந்தது, 8 வயதிற்குள் குழந்தைகளை இவ்வளவு கஷ்டப்படுத்த வேண்டுமா என்பதே பலரின் கேள்வி, நாங்கள் இன்னும் இதுபோன்ற சவால்களை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம் என்றும் கூறுகிறார் அவர்.

தொழில்முனைவு பயணத்தில் கற்றுக் கொண்ட பாடங்களாக அவர் கூறுவது,

1. பொறுமை - ஒரு உறுதியான திட்டம் வெற்றிபெற இரண்டு ஆண்டுகளாவது தேவை. பொறுமையோடு இருக்க வேண்டும்.

2. விடாமுயற்சி – முயற்சி செய்தால் மட்டுமே அனைத்தும் சாத்தியம்.

3. கட்டமைப்பு - உங்கள் எண்ணத்தை விட அதை சுற்றி மக்களை கட்டமைக்க வேண்டியதே மிகவும் முக்கியமானது.

எந்த ஒரு திட்டமும் நல்ல வர்த்தகமாக வளர உறுதியான வியாபார அஸ்திவாரங்களான வருவாய் திறன், லாபம் மற்றும் செயல்பாடுகள் தேவை. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்படுகின்றன, ஆனால் அவை வெற்றிபெறாமல் போவதற்கு இந்த முக்கிய காரணிகளில் நிலவும் கவனக்குறைவே என்கிறார் அருண்பிரசாத். ஆனால் இது முற்றிலும் தவறான அணுகுமுறை என்றும் கூறிவிடமுடியாது, ஏனெனில் சில ஆண்டுகள் கழித்தே வருவாய் மற்றும் லாபம் பெறமுடியும் என்றால் அதுவரை காத்திருப்பதிலும் தவறில்லை.

ஆனால் நீங்கள் காத்திருக்கும் காலங்களுக்கு ஏற்ப சொந்த தேவைக்கான நிதியில் பிரச்சனை வராமல் திட்டமிட்டுக் கொள்ளுங்கள், அப்போது தான் உங்களது தொழில் வேகம் பெற இரண்டு மூன்று மடங்கு காலதாமதமானாலும் நீங்கள் எதிர்பார்த்த இலக்கை சென்றடைய முடியும் என்று இளம் தொழில்முனைவர்களுக்கு ஆலோசனை சொல்லும் அருண் விடைபெறுவதற்கு முன் "முயற்சி திருவினையாக்கும்" என்கிறார். 

இணையதள முகவரி: Flintobox ஃபேஸ்புக்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

குழந்தை கற்றல் மற்றும் வளர்ப்பில் பெற்றோர்களுக்கு உதவும் தம்பதிகள்!

10 வயது சிஇஓ,12 வயது சிடிஓ… ஆச்சரியப்படுத்தும் குழந்தைகள்!