Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

எலான் மஸ்க் பின்பற்றும் செயல்திறன் மிக்க 6 ‘தடாலடி’ விதிகள்!

எலான் மஸ்க் தனது நிறுவனங்களின் செயல்திறனுக்கான 6 ரகசியங்களை பகிர்ந்து கொண்டார். அவைதான் தனது நிறுவனங்களின் வெற்றிக்குக் காரணம் என்கிறார்.

எலான் மஸ்க் பின்பற்றும் செயல்திறன் மிக்க 6 ‘தடாலடி’ விதிகள்!

Monday December 23, 2024 , 3 min Read

மார்வெல் காமிக்ஸ் படங்களில் வரும் ‘அயர்ன் மேன்’ கதாபாத்திரத்தை நம்மில் பலரும் அறிந்திருப்போம். பெரும் பல தொழில்களில் வெற்றிகண்ட தொழிலதிபராகவும், தொழில்நுட்ப வல்லுநராகவும் சித்தரிக்கப்பட்ட அந்தக் கதாபாத்திரத்தின் நிஜ வடிவமாக எலான் மஸ்க்கை சொல்லலாம். அந்த அளவுக்கு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் என உற்பத்தி துறையில் தான் ஒரு நிபுணர் என்பதை அண்மைக் காலங்களில் நிரூபித்துள்ளார்.

சமீபத்தில், எலான் மஸ்க் தனது நிறுவனங்களின் செயல்திறனுக்கான 6 ரகசியங்களை பகிர்ந்து கொண்டார். அவைதான் தனது நிறுவனங்களின் வெற்றிக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த ஆறு விதிகள் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

elon musk

1) பெரிய மீட்டிங்குகளுக்கு பெரிய ‘நோ’

எலான் மஸ்கின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று என்னவென்றால், நிறைய நபர்களை வைத்து நடத்தப்படும் மீட்டிங் எல்லாம் பெரும்பாலும் நேரத்தை வீணடிப்பதாகும். இவை பல நபர்களுடன் பொருத்தமற்ற விவாதங்களால் நிரப்பப்படுகின்றன என்று அவர் நம்புகிறார். எலான் மஸ்க் கூற்று இதுதான்:

“குறைவான நபர்களை வைக்கப்படும் கூட்டங்களே பயன் தரும். ஒரு திட்டத்திலோ அல்லது நிர்வாக முடிவுகளிலோ நேரடியாக ஈடுபடும் நபர்களை மட்டுமே வைத்து மீட்டிங் நடத்தப்பட வேண்டும். இதன்மூலம் விவாதங்கள் திசை மாறாமல், விரைவாக முடிவு எடுக்க முடியும்.”

ஒரு பெரிய மீட்டிங்கில் இருக்கும்போது, நம்முடைய இருப்பு அங்கு அவசியமா என்பதை யோசிக்க வேண்டும். இல்லை என்றால் அங்கிருந்து வெளியேறி ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடலாம்.

2) புத்திசாலித்தனத்தை விட தெளிவே முக்கியம்

கார்ப்பரேட்களால் பயன்படுத்தப்படும் மேற்பூச்சு வார்த்தைகள், குறியீட்டுச் சொற்களுக்கு தான் எதிரானவர் என்பதை அழுத்தமாக நிறுவுகிறார் மஸ்க். இதுபோன்ற தேவைற்ற தொழில்நுட்ப மொழிகள் நேரத்தை வீணடிப்பது மட்டுமின்றி, தெளிவானப் புரிதலையும் தடுக்கின்றன.

யாராக இருந்தாலும் அவர்களிடம் பாரபட்சமின்றி எளிய மொழியைப் பயன்படுத்துமாறு மஸ்க் வலியுறுத்துகிறார். இந்த அணுகுமுறை ஒத்துழைப்பை வளர்ப்பது மட்டுமின்றி, முக்கிய முடிவுகளை விரைந்து எடுக்க உதவும்.

மின்னஞ்சல் அனுப்பும்போதும் சரி அல்லது மீட்டிங்கில் பேசினாலும் சரி, எந்தக் குழப்பமான வாசகமும் இல்லாமல் கருத்தை அனைவரும் புரிந்துகொள்ளும் எளிய மொழியைப் பயன்படுத்துவது சிறப்பு. இது நேரத்தை மிச்சப்படுத்துவதுடன் தவறான புரிதல்களை தவிர்க்க உதவும்.

3) நேரடி தொடர்பு

ஒரு நிறுவனத்திற்குள் தொடர்பு என்பது முடிந்தவரை நேரடியாக இருக்க வேண்டும் என்று எலான் மஸ்க் நம்புகிறார்.

காதைச் சுற்றி மூக்கை தொடுவது போன்ற தொடர்புச் சங்கிலிகள் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும். வழக்கமான படிநிலை கட்டமைப்பைத் தவிர்த்து குறுகிய வழியில் எளிமையாகவும் நேரடியாகவும் தொடர்புகொள்வதை அவர் ஊக்குவிக்கிறார்.

ஒருவரிடம் ஒரு தகவலை கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்றால், அது தேவையற்ற படிகள் எதுவும் இன்றி நேரடியாக கொண்டு செல்லப்பட வேண்டும்.

முக்கியமான தகவல்கள் சரியான நேரத்தில் சரியான நபர்களைச் சென்றடைவதை இந்த அணுகுமுறை உறுதி செய்கிறது.

4) பங்களிப்பு இல்லை எனில் கிளம்பலாம் ப்ளீஸ்!

ஒரு மீட்டிங்கிலோ அல்லது உரையாடலிலோ நமது பங்களிப்பு இல்லையென உணரும் தருவாயில் அங்கிருந்து வெளியேறுவதே புத்திசாலித்தனம், என்கிறார் எலான் மஸ்க். நேரம் என்பது மிகவும் விலைமதிப்பற்ற வளம். ஒரு சூழ்நிலைக்கு நம்மால் எந்த மதிப்பும் இல்லை என்றால் என்றால், தாராளமாக விலகிச் சென்று மற்றவர்களை தொடர அனுமதிப்பது நல்லது.

elon musk

5) தர்க்கத்துக்கு முக்கியத்துவம்

முடிவெடுப்பதிலும் சிக்கலைத் தீர்ப்பதிலும் பொது அறிவு மற்றும் தர்க்கத்தின் முக்கியத்துவத்தை மஸ்க் வலியுறுத்துகிறார்.

தேவையற்ற செயல்முறைகள் அல்லது சூழ்நிலைகளை மிகைப்படுத்திக் கொண்டு நிலைமையை மேலும் சிக்கலாக்குவதற்குப் பதிலாக, நேரடியான பகுத்தறிவு மற்றும் தர்க்கத்துடன் சிக்கல்களை அணுகுவது சிறந்தது.

ஒரு சவாலை எதிர்கொள்ளும்போது அதில் மிகவும் அர்த்தமுள்ள விஷயம் எது என்பதை ஒரு நிமிடம் அலசினால், சிக்கலான உத்திகள் மற்றும் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தும் அதிநவீன தீர்வுகளில் சிக்கிக் கொள்வதை தவிர்க்கலாம்.

6) அடிக்கடி மீட்டிங் வேண்டாமே!

எலான் மஸ்க் கூறும் வெற்றிக்கான ஆறாவது மற்றும் கடைசி தாரக மந்திரம், ‘அடிக்கடி மீட்டிங் நடத்துவதை தவிர்க்க வேண்டும்’ என்பதுதான்.

தொடர் மீட்டிங்குகள் வேலையின் ஓட்டத்தை சீர்குலைத்து, உற்பத்திப் பணிகளில் செலவிடக் கூடிய நேரத்தை வீணடிக்கின்றன.

திரும்பத் திரும்ப நடத்தப்படும் மீட்டிங்கில் ஏற்கெனவே பேசிய விஷயங்களையே மீண்டும் மீண்டும் பேசும் நிலை ஏற்படும் என்கிறார் மஸ்க். சும்மா பேருக்கு மீட்டிங் நடத்துவதையும், தேவைகள் எதுவும் இன்றி தொடர்பு கொள்வதையும் தவிர்க்கச் சொல்கிறார்.


Edited by Induja Raghunathan