குறைபாடுகளை தாண்டி வாழ்க்கை லட்சியங்களை அடையப் போராடிய போற்றப்படாத 7 ஹீரோக்கள்!
இந்தியாவில் 20 மில்லியன் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் சமூக களங்கள்களை எதிர்த்து போராடவேண்டிய நிலை முதல் அரசாங்கத்தின் ஆதரவின்றி செயல்படவேண்டிய நிலை வரை ஒவ்வொரு நாளும் இவர்களுக்கு சவால் நிறைந்ததாகவே உள்ளது.
இருந்தும் மனம் தளராமல் அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடுபவர்களும் உள்ளனர். அப்படிப்பட்ட சிலரைக் குறித்து இங்கே பார்ப்போம்.
1. மிக்கைல் மெர்சண்ட் : காது கேளாத வாய் பேச முடியாத மாடல்
மிக்கைல் மெர்சண்ட்க்கு பிறவியிலேயே காது கேட்காது, வாய் பேச முடியாது. அத்துடன் அவர் மிகவும் குண்டாக இருந்தார். இதனால் பள்ளியில் உள்ள மாணவர்களின் தொடர் கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் ஆளானார். எனவே அவர் கூச்சசுபாவம் கொண்ட, அதிகம் பேசாத, குறைவான சுயமரியாதையுடனே வளர்ந்தார். 16 வயதில் அவரது அம்மா இறந்ததும் நிலைமை மேலும் மோசமாகியது. அம்மாவின் இழப்பை எதிர்கொள்ள முடியாமல் பள்ளிப்படிப்பை கைவிட்டார். சில ஆண்டுகள் மன அழுத்தத்தில் இருந்தார்.
எனினும் சில காலங்களுக்கு பிறகு மாடலாக இருந்த அவரது அம்மாவைப் போலவே இவரும் மாடலாக வேண்டும் என்று விரும்பினார். ஒரு வருட தீவிர பயிற்சிக்குப் பிறகு 145 கிலோ இருந்த உடல் எடையை பாதியளவிற்கு குறைத்து 75 கிலோ ஆனார். காது கேளாமை குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காது கேட்க பயன்படுத்தும் கருவியை பொருத்தியவாறே இரண்டு ஃபோட்டோ ஷூட்களை முடித்துள்ளார்.
2. நிதி கோயல் : பார்வையிழந்த இவர் இந்தியாவின் முதல் நகைச்சுவை நிகழ்ச்சி்யாளர்
உருவப்படம் வரையும் ஓவியராகவேண்டும் என்பதே நிதியின் விருப்பமாக இருந்தது. ஆனால் அவருக்கு 15 வயதிருக்கையில் ஏற்பட்ட நோய் காரணமாக பார்வையிழந்தார். இந்த கண் நோய் அவரது கனவை பாழாக்கியது. ஆனால் அவரது உற்சாகத்தை குலைக்கவில்லை. தனது குறைபாட்டை ஏற்றுக்கொள்ளத் துவங்கியதால் அவருக்கு வாழ்க்கை குறித்த ஒரு புதிய கண்ணோட்டம் கிடைத்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மேடையில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்த தீர்மானித்தார்.
30-களில் இருக்கும் இவர் பாலின நீதிக்காக போராடும் ஆர்வலராகவும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக போராடுபவராகவும் செயல்படுகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பு நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தத் துவங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு மத்தியில் தோழமையின் தேவை குறித்தும் அவர்களது பாலியல் தேவைகள் குறித்தும் வசனங்களை உருவாக்கத் துவங்கினார்.
3. திவிஜ் ஷா : விபத்தில் ஒரு கை இழந்த இவர் சைக்கிள் ஓட்டுவதில் சாம்பியன்
திவிஜ் ஷாவிற்கு நான்கு வயதிருக்கையில் நடந்த ஒரு விபத்தில் வலது கையை இழந்தார். அந்த விபத்து தனது வாழ்க்கையையே முடக்கிவிடக்கூடாது என தீர்மானித்து இரண்டு கைகளைக் கொண்ட சராசரி நபரைக் காட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டார்.
திவிஜ் தனது பதின்ம வயதில் மேற்கு வங்காள கிரிக்கெட் அணியின் 16 வயதிற்குட்பட்டவர்களின் அணியில் விளையாடினார். எம்பிஏ முடித்ததும் பெங்களூருவில் நிதி ஆய்வாளராக பணியாற்றினார். அடுத்தடுத்த சவால்களை எதிர்கொள்ள விரும்பி சைக்கிள் ஓட்டுவதிலும் ஈடுபட்டார். இவரைப் போன்ற ஒரு கை இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக சைக்கிள் இல்லாதபோதும் இந்த முயற்சியில் ஈடுபட்டார். தீவிர பயிற்சிக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆசிய பாரா சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கம் வென்றார். 2020-ல் நடக்கவிருக்கும் பாராலிம்பிக்ஸில் சாம்பியன் ஆகவேண்டும் என்பதில் தீவிர முனைப்புடன் இருக்கிறார்.
4. ஸ்வர்னா ராஜ் : சக்கரநாற்காலியில் இருக்கும் சர்வதேச விளையாட்டுவீரர்
ஸ்வர்னாவிற்கு இரண்டு வயதிருக்கையில் அவரை போலியோ தாக்கியது. கால்களில் 90 சதவீத குறைபாடுள்ள இவர் கடந்த இரண்டாண்டுகளாக சக்கர நாற்காலியில் இருக்கிறார். சாதாரணமாகவே இந்தியாவில் பெண்கள் விளையாட்டுத் துறையில் நுழைவது சுலபமான விஷயம் இல்லை. அதுவும் குறைபாடுகள் இருந்தால் அது மேலும் கடினமாக இருக்கும். எனினும் ஸ்வர்னா டேபிள் டென்னிஸ் கற்பதற்கும் சர்வதேச அளவில் இந்தியா சார்பில் விளையாடுவதற்கும் அவரது குறைபாடு தடையாக இருக்கவில்லை.
ஸ்வர்னா சர்வதேச பாரா டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் மட்டுமல்ல குறைபாடு உள்ளவர்களுக்கான உரிமைக்காக போராடும் ஆர்வலர். மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கத்தை நடத்துபவராகவும் ’விக்லங் சஹாரா சமிதி’யில் தன்னார்வலராகவும் செயல்படுவதுடன் ஆலோசகராகவும் உள்ளார். எம்காம் மற்றும் MSW என இரண்டு முதுகலை பட்டங்களை பெற்ற இவர் வங்கியிலும் ஒரு கம்ப்யூட்டர் சென்டரிலும் பகுதி நேரமாக பணிபுரிகிறார்.
5. ஆனந்த் அர்னால்ட் : சக்கர நாற்காலியில் வலம் வரும் மிஸ்டர் இந்தியா
ஆனந்த் 13 வயதில் பாடிபில்டிங்கை துவங்கி அதே வருடம் கோப்பையை வென்றார். ஆனால் அவருக்கு 15 வயதிருக்கையில் முதுகெலும்பு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு வாழ்க்கையே மாறிப்போனது. அறுவை சிகிச்சை முடிந்து குணமானதும் அடுத்த மூன்றாண்டுகளுக்கு கழுத்துக்குக் கீழே முடமாகிப்போனார்.
குடும்பத்தின் ஆதரவுடன் சக்கர நாற்காலியில் இருந்தவாறே பயிற்சி மேற்கொண்டு விரைவில் மீண்டும் வெற்றி பெற்றார். தற்போது சக்கரநாற்காலியுடன் முடங்கிப்போனாலும் இவர் மூன்று மிஸ்டர் இந்தியா டைட்டில்களையும் 12 மிஸ்டர் பஞ்சாப் டைட்டில்களையும் 20-க்கும் மேற்பட்ட இதர டைட்டில்களையும் வென்றுள்ளார். அவரது குறைபாடு அவரை முடக்கிவிடாமல் கவனமாக பார்த்துக்கொண்டு பல வெற்றிகளை வசப்படுத்தியுள்ளார்.
6. ப்ரதீக் பிரசன்னா : கிரிக்கெட் வீரர்
கர்நாடகாவின் மங்களூரைச் சேர்ந்த ப்ரதீக் பிரசன்னா பிறவியிலேயே காது கேளாதவர். ஆனால் அவர் ஏழு மாத குழந்தையாக இருந்தபோதுதான் இந்த குறைபாட்டை அவரது குடும்பத்தினர் தெரிந்துகொண்டனர். காது கேட்பதற்கான கருவியை பொருத்திக்கொண்ட போதும் ஐந்து வயது வரை அவர் பேசவில்லை. எனினும் உட்செவிச்சுருள் பதியம் (cochlear implant) அவர் தன்னுடைய வட்டத்தினுள் இருந்து வெளிவர உதவியது. தற்போது சுறுசுறுப்பாக, வேடிக்கையான விஷயங்களில் ஆர்வம் கொண்ட குழந்தையாக வலம் வருகிறார். இவருக்கு ஆங்கிலம், அறிவியல், ட்ரம்ஸ் வாசித்தல் போன்றவற்றில் ஆர்வம் அதிகம்.
எனினும் அவரது அதீத ஆர்வமான கிரிக்கெட் விளையாட்டு அவரை மற்றவர்களுடன் பழகி தன்னை சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்ளும் நபராக மாற்றியது. 14 வயது நிரம்பிய பள்ளி கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான இவர் இந்தியா சார்பில் விளையாடும் நாளை எதிர்நோக்கியுள்ளார்.
7. அக்ஷான்ஷ் குப்தா : பெருமூளை வாதம் நோய் தாக்கப்பட்ட இவர் பிஎச்டி முடித்துள்ளார்
அக்ஷான்ஷ் குப்தாவிற்கு பிறவியிலேயே பெருமூளை வாதம் (cerebral palsy) நோய் தாக்கம் இருந்தது. 95 சதவீத குறைபாடு இருந்தது. அவரது கால் மூட்டுகள் செயல்படவில்லை. இதனால் அவர் தானாக உணவருந்தவோ சக்கரநாற்காலியை நகர்த்தவோ முடியாது. அவரது தெளிவற்ற பேச்சு காரணமாக யாரையும் தொடர்பு கொள்ளமுடியாமல் அவதிப்பட்டார். ஆனால் இவை எதுவுமே அவரது கனவை நோக்கி பயணிக்க தடையாக இருக்கவில்லை. இன்று இவர் JNU-விலிருந்து PhD பெற்றுள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர் : கிருத்திகா ராஜம்