Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

5 ரூபாய் சம்பளம்; ரயில் தரையில் தூக்கம் - மறைந்த உஸ்தாத் ஜாகிர் ஹுசைனின் அறியப்படாத பக்கங்கள்!

உலக அரங்கிற்கு தபேலாவைக் கொண்டு வந்த ஒரு முன்னோடியான, உஸ்தாத் ஜாகிரின் பயணம் அவர் உருவாக்கிய தாளங்களைப் போலவே அசாதாரணமானது. அவரது வாழ்க்கையில் சில அதிகம் அறியப்படாத பக்கங்களில் சில வரிகள் இங்கே:

5 ரூபாய் சம்பளம்; ரயில் தரையில் தூக்கம் - மறைந்த உஸ்தாத் ஜாகிர் ஹுசைனின் அறியப்படாத பக்கங்கள்!

Thursday December 19, 2024 , 3 min Read

உலக புகழ்பெற்ற தபேலா மேஸ்ட்ரோ உஸ்தாத் ஜாகிர் ஹுசைன், கடந்த திங்கள்கிழமை (15 டிசம்பர்) அவரது 73 வயதில் சான் பிரான்சிஸ்கோவில் இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் நோயால் பாதிக்கப்பட்டு காலமானார். அவரது மறைவு இசையுலகினரை கலங்கச் செய்துள்ளது. இசை உலகம் அதன் ஒளிமயமான ஒருவரை இழந்துவிட்டது.

உலக அரங்கிற்கு தபேலாவை கொண்டு வந்த ஒரு முன்னோடியான, உஸ்தாத் ஜாகிரின் பயணம் அவர் உருவாக்கிய தாளங்களைப் போலவே அசாதாரணமானது. அவரது வாழ்க்கையில் சில அதிகம் அறியப்படாத பக்கங்களில் சில வரிகள் இங்கே:

மும்பையில் 1951ம் ஆண்டில் மார்ச் 9ம் தேதி பிறந்த ஜாகிர் உசேன், தபேலா மேஸ்ட்ரோ உஸ்தாத் அல்லா ரக்காவின் மூத்த மகனாவார். அவரது தந்தையிடமிருந்து இசை மீதான ஆர்வத்தையும் திறமையையும் மரபுரிமையாகப் பெற்றார்.

ustad zakir hussain

பட உதவி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

ரயில் தளத்திலே உறக்கம்!

அவரது ஆரம்ப கட்ட வாழ்க்கையில், உஸ்தாத் ஜாகிர் அடிக்கடி ரயிலில் பயணம் செய்தார். ரயிலில் இருக்கை கிடைக்காதபோது, ​​அவர் செய்தித்தாள்களை படுக்கையாகப் பயன்படுத்தி தரையில் தூங்கினார். அசௌகரியம் இருந்தபோதிலும், அவரது தபேலாவை மட்டும் எப்போதும் அவரது மடியில் வைத்திருந்தார். அதைத் தொடாமலும் சேதமடையாமலும் கவனமாகப் பாதுகாத்தார். அக்கருவியின் மீது அவ்வளவு மரியாதை கொண்டிருந்தார்.

ஏழு வயதிலே கலையின் மீதான ஆர்வம்

ஜாகிர் உசேன் ஏழு வயதிலேயே தபேலாவில் ஆழ்ந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அவரது தந்தையும், புகழ்பெற்ற தபேலா கலைஞருமான உஸ்தாத் அல்லா ரக்கா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அவர் கடுமையான பயிற்சியை மேற்கொண்டார். பெரும்பாலான குழந்தைகள் இசையைப் படிக்கக் கற்றுக் கொண்டிருந்த நேரத்தில், ஜாகிர் ஏற்கனவே பொது நிகழ்ச்சிகளை நடத்தி, அவரது ஆரம்பகால மேதைமையை வெளிப்படுத்தினார்.

முதல் ஊதியம் - ரூ.5

12 வயதில், ஜாகிர் ஒரு தபேலா இசை நிகழ்ச்சிக்காக அவரது முதல் ஊதியமாக ஐந்து ரூபாய் பெற்றார். இது ஒரு சிறிய தொகை, ஆனால், அது ஒரு கனவின் கனத்தை சுமந்தது. அந்த தருணத்திலிருந்து, அவரது பயணம் தொடங்கியது. உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களின் இதயங்களை கொள்ளைக் கொண்டார், உலக அரங்கில் இந்திய தாளத்தின் பங்கை மறுவரையறை செய்ய வைத்தார்.

நடிப்பின் மீதும் ஆர்வம்...

தபேலா அவரது அடையாளத்தின் மையமாக இருந்தபோது, ​​​​அவர் கேமரா முன் நுழைந்தார். 1983ம் ஆண்டில் வெளியாகிய ‘ஹீட் அண்ட் டஸ்ட்’ திரைப்படத்தில் இசைக்கலைஞராக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர், புகழ்பெற்ற மங்கேஷ்கர் சகோதரிகளின் வாழ்க்கை கதையால் ஈர்க்கப்பட்ட திரைப்படமாக கருதப்படும் சாஸ் திரைப்படத்தில் நடித்தார். மிக சமீபத்தில், அவர் தேவ் படேலின் மங்கி மேன் படத்திலும் தோன்றினார். ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி "வா தாஜ்" எனும் வசனத்துடன் தாஜ்மஹால் முன்பு தபேலா வாசித்து கொண்டே ஜாகிர் நடித்த டீ துாள் விளம்பரம் பயங்கர ஹிட்டானது.

wah taj zakir

ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தின் போராசிரியர்...

உஸ்தாத் ஜாகிரின் செல்வாக்கு கல்வித்துறையிலும் பரவியது. அவர் 2005-2006ம் கல்வியாண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பழைய டொமினியன் ஃபெலோ மற்றும் முழு இசைத் துறை பேராசிரியராக பணியாற்றினார். அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராகவும் பணியாற்றினார், அங்கு அவர் மாணவர்களுடன் ரிதம் மற்றும் இசை பற்றிய அவரது ஆழ்ந்த அறிவைப் பகிர்ந்து கொண்டார்.

உலகின் பெரும் இசை ஜாம்பாவான்களுடன் பணியாற்றிய உஸ்தாத்...

1970-களில், உஸ்தாத் ஜாகிரின் தபேலா உலகங்களுக்கு இடையே ஒரு பாலமாக மாறியது. பீட் ஜெனரேஷன் கவிஞர் ஆலன் கின்ஸ்பெர்க், ஜார்ஜ் ஹாரிசன், ஜான் ஹேண்டி மற்றும் சர் ஜார்ஜ் இவான் மாரிசன் போன்ற ஐகான்களுடன் அவர் ஒன்றிணைந்து பணியாற்றினார்.

விருதுகளும், 'சக்தி' இசைக்குழுவும்!

ஜாகிர் ஹுசைனின் இசைக்கான பங்களிப்புகள் அவருக்கு 4 கிராமி விருதுகள், 1988ம் ஆண்டில் பத்மஸ்ரீ, 2002ம் ஆண்டில் பத்ம பூஷன் மற்றும் 2023ம் ஆண்டில் பத்ம விபூஷன் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றன. பாரம்பரிய கலைகளுக்கான அமெரிக்காவின் உயரிய கவுரவமான நேஷனல் ஹெரிடேஜ் பெல்லோஷிப்பைப் பெற்றவர். கார்னகி ஹால், ராயல் ஆல்பர்ட் ஹால் மற்றும் கென்னடி சென்டர் போன்ற மதிப்புமிக்க இடங்களில் அவர் நிகழ்த்திய நிகழ்ச்சிகள் உலகளாவிய ஐகானாக அவரது அந்தஸ்தை மேலும் உறுதிப்படுத்தியது. உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் உலகளாவிய புகழ் பெற்றிருந்தாலும், அவரது இந்திய பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றி இருந்தார்.

zakir hussain

1970-களில், அவர் கிதார் கலைஞர் ஜான் மெக்லாலின், வயலின் கலைஞர் எல். சங்கர் மற்றும் தாளக் கலைஞர் விக்கு விநாயக்ராம் ஆகியோருடன் இணைந்து 'சக்தி' என்ற இணைவுக் குழுவை உருவாக்கினார். குழுமத்தின் அற்புதமான வேலை, முன்னோடியில்லாத வகையில் மேற்கத்திய பார்வையாளர்களுக்கு இந்திய இசையை அறிமுகப்படுத்தியது. கிரேட்ஃபுல் டெட் இசைக்கலைஞரான மிக்கி ஹார்ட் உடனான அவரது கூட்டாண்மை, 1991ம் ஆண்டில் கிராமி விருது பெற்ற பிளானட் டிரம் ஆல்பத்திற்கு வழிவகுத்தது.

இந்த ஆல்பம் உஸ்தாத் ஜாகிரின் பாரம்பரிய இந்திய தாளங்களை உலகளாவிய தாள பாணிகளுடன் ஒருங்கிணைக்கும் திறனுக்கு ஒரு சான்றாகும். அவர் ஜார்ஜ் ஹாரிசன், வான் மோரிசன் மற்றும் யோ-யோ மா போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றினார், இசைக்கு எல்லைகள் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்தார்.

அவரது மறைவு, வார்த்தைகளால் நிரப்ப முடியாத ஒரு வெறுமையை விட்டுச் சென்றுள்ளது. நான்கு முறை கிராமி விருது வென்றவரின் தாளங்கள் என்றென்றும் நம் இதயங்களில் எதிரொலிக்கும், வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்.

தகவல் உதவி :தி பெட்டர் இந்தியா மற்றும் தி நியூஸ் மில்