உலகின் மிகப்பெரிய கூகுள் அலுவலகம் பெங்களூரில் திறப்பு - இதில் என்னென்ன சிறப்புகள்?
பெங்களூரில் திறக்கப்பட்டுள்ள கூகுள் நிறுவனம் நிலைத்தன்மையை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் மறுசுழற்சி, மழைநீர் சேமிப்பு மற்றும் எலக்ட்ரோகுரோமிக் கிளாஸ் என 100 சதவிகித தாங்குதிறனை கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவை மற்றும் தயாரிப்புகளை பயன்படுத்துகின்றனர். தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய சந்தையாக இந்தியா திகழ்கிறது. டெஸ்லா நிறுவனமும் இந்தியாவில் தனது பிரிவை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், கூகுள் நிறுவனமும் இந்தியாவில் தனது முதலீட்டை செய்து வருகிறது. அந்த வகையில், பிப்ரவரி 19 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் தனது புதிய மற்றும் மிகப்பெரிய இந்திய அலுவலகத்தை கூகுள் நிறுவனம் திறந்துள்ளது.
பெங்களூரின் மகாதேவபுரா பகுதியில் திறக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்திற்கு 'அனந்தா' (Ananta) என பெயரிடப்பட்டுள்ளது. அனந்தா என்றால் சமஸ்கிருதத்தில் எல்லையில்லாத அல்லது முடிவில்லாத என்று பொருள். தொழில்நுட்பத்தின் திறன் எல்லையில்லாமல் விரிவாகிக் கொண்டிருக்கிறது என்ற தொலைநோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நிலைத்தன்மையை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில் 100 சதவிகிதம் தண்ணீர் மறுசுழற்சி, மழைநீர் கேசரிப்பு உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவில் எலக்ட்ரோகிராமிக் கிளாஸ் பொருத்தப்பட்டுள்ள கட்டிடம் இதுவாகும். எலக்ட்ரோகுரோமிக் கிளாஸ் என்பது மின்னழுத்தத்தின் மூலம் வண்ணத்தை மாற்றிக்கொள்ளும் ஸ்மார்ட் கண்ணாடியாகும்.
தொழில்நுட்பயுகத்தில் இந்தியா எப்போதுமே ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது, ஸ்டார்ட் அப்கள் மற்றும் செயலிகள் உருவாக்கம் இவற்றிற்கு சான்றாக உள்ளன. டிஜிட்டல் கட்டமைப்பு கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய படைப்பாளிகள் பன்முகத்தன்மை கொண்டவர்களாக உள்ளனர். இந்தியாவுடனான எங்களது தொடர்பில் ஒரு முக்கியமான மைல்கல் அனந்தத அலுவலகம் திறப்பு, என்று கூகுள் தெரிவித்துள்ளது. உலக அளவில் கூகுளின் மிகப்பெரிய அலுவலகம் இதுவாகும்.
10 லட்சத்து 60 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் வகையில் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. எளிதில் குறிப்பிட்ட இடத்தை அடைவதற்காக ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்ட வகையில் கட்டிடங்கள் வடிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதற்காக மையப்பகுதியில் ‘சபா’ என்கிற பகுதி அமைக்கப்பட்டுள்ளது. உள் அலங்காரத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பெங்களூரிலேயே வாங்கப்பட்டுள்ளது.
பார்வையற்றவர்கள் எளிதாக நடந்து செல்ல சிறப்பு சென்சார் திரை அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஊழியர்கள் வேலை நேரத்தில் களைப்படையும் போது உற்சாகம் பெற நடைபயிற்சி மற்றும் ஜாகிங் பாதைகள் அமைக்கப்பட்டுளளன.
தொழில்நுட்பத்தின் புதிய அனுபவங்களை இந்தியா தனது மக்களுக்கு அளித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் பெருமைமிகு பங்குதாரதாக கூகுள் இருந்து வருகிறது. எங்களின் பயணத்தின் முக்கிய மைல்கல்லான பெங்களூருவில் அமைந்துள்ள புதிய அநன்தா வளாகம், தொழில்நுட்பத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சியான செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை நோக்கமாகக் கொண்டது என்று கூகுள் இந்தியாவின் மேலாளரும் துணைத்தலைவருமான ப்ருத்தி லோபனா தெரிவித்துளளார்.
தொழில் மற்றும் தனிநபரின் முன்னேற்றத்திற்கு உதவும் விதத்தில் ஏஐ தழுவி இயங்க உள்ளோம். பொருளாதாரம் என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல் விவசாயம், சுகாதாரம் மற்றும் ஃபிக்டெக்கிலும் ஏஐ பயன்பாட்டை ஊக்குவிக்க படைப்புகள் உருவாக்கப்படும். இந்தியாவின் துடிப்பான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களுடன் இணைந்து அதிக பயன்தரப்கூடிய தயாரிப்புகளை உருவாக்குவதை இலக்காக வைத்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.