19 வயதில் 400 மொழிகள் பேசி, எழுதி, தட்டச்சு செய்து அசத்தும் சென்னை இளைஞர்!
சென்னையைச் சேர்ந்த 19 வயது இளைஞரான மஹ்மூத் அக்ரம், சுமார் 400 மொழிகளில் பேசுவது, எழுதுவது மட்டுமின்றி தட்டச்சும் செய்து அசர வைக்கிறார். ஏற்கனவே பல உலக சாதனைகளைப் படைத்துள்ள இவர், விரைவில் புதிய உலக சாதனை படைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நிலையில், பலருக்கு தாய்மொழியைக் கற்பதிலேயே சிரமங்கள் இருக்கின்றன. ஆங்கிலம் கற்றால் உலகம் முழுவதும்கூட சுற்றி வந்து விடலாம் என்ற அவர்களின் தவறான பிம்பங்களை உடைக்கும் வகையில், சிலர் பல மொழி வித்தகர்களாக உள்ளனர். ஆனால், அப்படி பல மொழிகளைக் கற்றுக் கொண்டவர்கள் எல்லாம் வயதில் மூத்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
இந்த பிம்பத்தையும் உடைத்து மிகக் குறைந்த வயதில் 400 மொழிகளில் படிப்பது மட்டுமின்றி, எழுதுவது, தட்டச்சு செய்வது என பன்முகத் திறமையாளராக இருக்கிறார் 19 வயதேயான மஹ்மூத் அக்ரம் என்ற சென்னை இளைஞர்.

அப்பாவால் வந்த ஆர்வம்
மஹ்மூத் பிறந்தது ராமநாதபுரத்தில், பின்னர் அவரது குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டனர். அவரது தந்தை அப்துல் ஹமீத்தும் பல மொழிகள் அறிந்தவர். 16 மொழிகளைத் தெரிந்த அவர், இதுவரை சுமார் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் வேலை பார்த்துள்ளார்.
தனது நான்கு வயதில் அப்பாவின் பல மொழிகளைக் கற்கும் ஆர்வத்தைக் கண்டுதான், மஹ்மூத்திற்கும் இந்த மொழி ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
“மற்ற எல்லாப் பெற்றோரைப் போலவும் என் பெற்றோரும் ஆரம்பத்தில் ஆங்கிலத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால், அவர்களே வியந்து போகும் அளவிற்கு 26 ஆங்கில எழுத்துக்களையும் வெறும் ஆறே நாளில் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு தமிழில் உள்ள 299 எழுத்துக்களையும் மூன்றே வாரத்தில் கற்றுக் கொண்டேன். தமிழில் எனக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்து வட்டெழுத்து போன்ற பண்டைய தமிழ் எழுத்துக்களையும் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அவற்றையும் நான் ஆர்வமாகக் கற்றுக் கொண்டேன். அதன் தொடர்ச்சியாக என் அப்பாவிற்குத் தெரிந்த 16 மொழிகளையும் எனக்குக் கற்றுக் கொடுத்தார். அப்படி ஆரம்பித்ததுதான் இந்த மொழிகளைக் கற்றுக் கொள்ளும் தேடல்,” என்கிறார் மஹ்மூத்.

சிறுவயதில் அப்பா மொழிப்பிரியனுடன் மஹ்மூத் அக்ரம்
ஆசானாக மாறிய கூகுள்
ஆறு வயதாக இருக்கும்போதே, தனக்குத் தெரிந்த அந்த 16 மொழிகளிலும் எழுதுவது, படிப்பது மட்டுமின்றி, தட்டச்சு செய்யவும் கற்றுக் கொண்டுள்ளார் மஹ்மூத். நாளுக்கு நாள் அவரது மொழித் தேடல் அதிகமாக, அப்போது அவருக்கு கூகுள்தான் ஆசானாக மாறியுள்ளது.
“அப்பாவிற்குத் தெரிந்த 16 மொழிகளைக் கற்றுக் கொண்ட பிறகு, இன்னும் அதிக மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமானது. அப்போது இணையம்தான் எனது இந்த வேட்கைக்கு உதவியது. அப்படித்தான் எனது 8 வயதில், சுமார் 50க்கும் மேற்பட்ட மொழிகளை இணையம் வாயிலாகக் கற்றுக் கொண்டேன். என்னுடைய இந்த சாதனையை யூடியூப்பில் பதிவு செய்தேன். அதைப் பார்த்து, யுனிவர்சல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் என்னை அவர்களது ஷோவில் கலந்து கொள்ள வைத்தது. அப்போதுதான் எனது முதல் உலக சாதனையைப் பதிவு செய்தேன்,” என மகிழ்ச்சியுடன் தான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறார் மஹ்மூத்.
இந்த உலக சாதனைக்குப் பிறகும் அவரது தேடல் தீர்ந்தபாடில்லை. மேலும், மேலும் புதிய மொழிகளைத் தேடித்தேடிக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். அவரது பத்தாவது வயதில் அவர் 200 மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.

புதுப்புது சாதனைகள்
மஹ்மூத்தின் திறமைக்கு சவால் விடும் வகையில், நமது தேசிய கீதத்தை 20 மொழிகளில் எழுதிக் காட்டும் சவாலை விடுத்தது தி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்டும், இந்தியன் அச்சீவர்கள் புக் ஆப் ரெக்கார்ட்டும். அதையும் 75 நிமிடங்களில் செய்துகாட்டி தனது திறமையை மீண்டும் நிரூபித்தார் மஹ்மூத். இந்தச் சாதனையைச் சரிபார்ப்பதற்கே மூன்று மாதங்கள் தேவைப்பட்டதாம். நானூறு மொழிகளைப் பரிசோதிக்கக்கூடியவர்கள் கிடைக்காமல் கின்னஸ் சாதனை இன்னும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறதாம்.
“உலகத்தில் மொத்தம் 6,500க்கும் மேற்பட்ட மொழிகள் புழக்கத்தில் உள்ளன. ஆனால், அவற்றில் பல அழிவு நிலைக்குச் சென்று விட்டன. தற்போது 500-600 மொழிகள் மட்டுமே தற்போது பேசப்பட்டு வருகின்றன. மேலும், இந்த மொழிகளும் அழிந்து விடாமல் இருக்க, இளம் தலைமுறையினருக்கு மொழிகளைக் கற்றுக் கொள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நான் எனது 12 வயதில் 400 மொழிகளைக் கற்றுக் கொண்டேன். 2019ம் ஆண்டு எனது திறமையைப் பற்றி அறிந்து கொண்ட ஜெர்மனி அரசு, என்னை அழைத்து என சில தேர்வுகளை வைத்தார்கள். அதில் நான் தேர்ச்சி அடைந்ததால், அங்குள்ள பள்ளியிலேயே எனக்கு படிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் தந்தார்கள்,” என்கிறார் மஹ்மூத்.
ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு மற்றவர்கள் பயிலும் கல்வி முறையை மஹ்மூத்திற்கு அவரது பெற்றோர் பின்பற்றவில்லை. அவரது இந்த ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் சிறப்பு பயிற்சிகளை அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
“என் மகனின் இந்த மொழி கற்றுக் கொள்ளும் ஆர்வத்திற்கு நாங்கள் பெரும் உதவியாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும், என முடிவு செய்தோம். அதனால்தான் எனது பெயரைக்கூட மொழிப்பிரியன் என நான் மாற்றிக் கொண்டேன். அதோடு, மஹ்மூத்தின் ஆர்வத்திற்கு உதவும் வகையில் அவரை இஸ்ரேல் பள்ளியில் நாங்கள் சேர்த்தோம்.“
ஒவ்வொரு பெற்றோருமே தங்கள் பிள்ளைகளின் திறமைகளை அறிந்து கொண்டு அதற்கு தேவையான உதவிகளைச் செய்தால், நிச்சயம் அவர்கள் சாதனைகளைப் புரிவார்கள். அதற்கு மஹ்மூத்தே நல்லதொரு சான்று, என்கிறார் மஹ்மூத்தின் அப்பா.

பயிற்சி நிலையம்
தான் கற்றுக் கொண்டதை, தன்னோடு நிறுத்திக் கொள்ளாமல் மற்றவர்களுக்கு பயன்படுத்த நினைத்த மஹ்மூத், 2016ம் ஆண்டு இன்ஸ்டிடியூட் ஒன்றை ஆரம்பித்தார். அதில் தன்னைப் போலவே மொழிகளை கற்றுக் கொள்ள ஆர்வம் கொண்டவர்களுக்கு அவர் கற்றுத் தந்து வருகிறார். தற்போது அவரிடம் தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேஷியா என பல நாடுகளில் இருந்தும் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகக் கற்று வருகின்றனர்.
“தமிழின் பெருமையை உலகறியச் செய்வதுதான் என் நோக்கம். திருக்குறள், தொல்காப்பியம் போன்றவை இதுவரை 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும். அடுத்ததாக, 46 மொழிகளைச் சரளமாகப் பேசும் மிகக் குறைந்த வயதுடையவர் என்ற கின்னஸ் சாதனையைப் படைக்க வேண்டும்,” என தன் எதிர்கால லட்சியங்களை அடுக்குகிறார் மஹ்மூத்.
இந்த குறைந்த வயதில் இந்த சாதனைகளை செய்வது ஒன்றும் அவ்வளவு எளிதானதில்லை. நினைவாற்றலை இழக்காமல் இருப்பதற்காக வெள்ளைச் சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், மைதா, பிராய்லர் கோழி, பிராய்லர் முட்டை, பதப்படுத்தப்பட்ட பால், நொறுக்குத் தீனிகள், சாக்லேட், ஐஸ்க்ரீம், காபி, டீ போன்றவற்றைக்கூட மஹ்மூத் சாப்பிடுவதில்லை. அவர் மட்டுமல்ல. அவருக்காக அவர் வீட்டில் உள்ளவர்களும் இந்தப் பொருட்களைச் சாப்பிடுவதில்லையாம்.
சிறுதானிய உணவுகளும், தாகம் எடுத்த 4 நிமிடங்களுக்குள் தண்ணீர் பருகுவதும், தினமும் சுடோகு பயிற்சி எடுத்துக்கொள்வதும் நினைவாற்றலுக்கு நல்லது என்று டிப்ஸும் கொடுக்கிறார் மஹ்மூத் அக்ரம்.
தகவல் மற்றும் படங்கள் உதவி: டிடி நெக்ஸ்ட் மற்றும் பெட்டர் இந்தியா
