WatchOut Wearables: குழந்தைகள், முதியோர் பாதுகாப்பை உறுதி செய்யும் ஸ்மார்ட் வாட்ச் உருவான உணர்வுபூர்வ கதை!
'என் குழந்தைப் பத்திரமா இருக்காளா?', 'பத்திரமாகப் பள்ளிக்குச் சென்றார்களா?' என்ற குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தான ஐயமும், பொறுப்பும் பெற்றோர்களுக்கு அவர்கள் பிறந்த தருணத்திலிருந்தே ஏற்பட்டுவிடுகிறது. ஒரு ஸ்மார்ட்வாட்ச் கண்டுபிடித்து பெற்றோரின் பயத்தை போக்கியுள்ளார் அபிஷேக்.
'என் குழந்தை பத்திரமா?', 'பள்ளிக்கு பாதுகாப்பாக சென்றார்களா?' என்ற ஐயமும் பொறுப்பும் பெற்றோர்களுக்கு எப்போதும் உண்டு. இச்சூழலில், பெற்றோர்களுக்கு உதவும் வகையில் குழந்தை வளர்ப்பை எளிதாக்க ஒரு ஸ்மார்ட் தீர்வை உருவாக்கியுள்ளார் மும்பையைச் சேர்ந்த இரசாயன பொறியாளராக இருந்து தொழில்முனைவராக மாறிய அபிஷேக் பஹேதி.
அது ஒரு புளூடூத் இணைப்புடன் கூடிய குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்ச். ஆனால், வழக்கமான ஸ்மார்ட் வாட்ச் போன்றதல்ல. மாறாக, இவை குழந்தைகளுடன் தொடர்பிலிருந்து பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆக்டிவிட்டி டிராக்கர் மற்றும் இன்-பில்ட் மியூசிக் பிளேயர் தவிர, இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் குழந்தைகளின் இருப்பிடத்தைக் கண்காணிக்க உதவும் வகையில் ஜிபிஎஸ் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெற்றோருடன் தொடர்ந்து இணைந்திருக்க 4ஜி அழைப்பு வசதியும், அவசர காலத்தில் உதவும் சாஸ் பட்டனும் உள்ளது. அதிலுள்ள ஆண்டி ரிமூவல் திருட்டு சென்சார் மூலம், குழந்தைகளின் மணிக்கட்டில் இருந்து ஸ்மார்ட்வாட்ச் அகற்றப்படும்போது பெற்றோருக்கு தெரியப்படுத்துகிறது.
"புளூடூத் ஸ்மார்ட் வாட்ச்கள் போல் அல்லாமல், இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு சாதனமாகும். உதாரணமாக, வெளிநாட்டில் வசிக்கும் பெற்றோர்கள் இந்தியாவில் இருக்கும் குழந்தையுடன் இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் வீடியோ கால் செய்ய முடியும். வாட்ச்சில் உள்ள ஜிபிஎஸ் கொண்டு அவர்கள் இருக்கும் இருப்பிடத்தை அறிந்து கொள்வதுடன், பாதுகாப்பான பகுதியில் இருக்கிறார்களா என்பதையும் கண்காணிக்க முடியும். உங்கள் மணிக்கட்டில் உள்ள தொலைபேசி போன்றது இந்த சாதனம்" என்றார் அபிஷேக் பஹேதி.
இழப்பினால் உருவாக்கிய பாதுகாப்பு வாட்ச்!
2010-ம் ஆண்டு அபிஷேக் அவரது வீட்டில் ஏற்றபட்ட எதிர்பாராத தீ விபத்தில் மாமாவையும், அவரது அக்கா மகளையும் இழந்துள்ளார். அந்த இழப்பு ஏற்படுத்திய தாக்கம், மற்றவர்களுக்கு இதே நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாய் 2022-ஆம் ஆண்டில் உருவாக்கியதே 'வாட்ச்அவுட் வியரபல்ஸ்' (
) எனும் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பு நிறுவனம்."எங்களுடையது கூட்டுக் குடும்பம். விபத்தன்று அம்மா, மாமா, மருமகள் (அக்கா மகள்) மருமகன் ஆகியோர் வீட்டில் இருந்தனர். விபத்தில் சிக்கி எனது மாமாவும், மருமகளும் புகையால் உயிரிழந்தனர். அவர்கள் உயிர் பிழைக்க குறைந்தது 30-40 நிமிடங்களாவது போராடியிருக்க வேண்டும். அவர்களால் சரியான நேரத்தில் வெளிவர முடியவில்லை, யாராலும் அவர்களைக் காப்பாற்றவும் முடியவில்லை. இந்த ச்சம்பவம் என்னை உலுக்கியது" என்று புலம்புகிறார் அபிஷேக்.
அவரது வாழ்வில் ஏற்பட்ட பெரும் இழப்பு தந்த வலியே ஸ்மார்ட் வாட்ச் கண்டுபிடிப்பதற்கான துாண்டுகோலாக இருந்துள்ளது. அவசர காலங்களில் குடும்ப உறுப்பினர்களை எச்சரிக்கக் கூடிய கேஜெட்டை உருவாக்க முயன்றுள்ளார். "குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவக் கூடிய சில சாதனங்கள் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அடுத்தடுத்த ஆண்டுகளில், பல நாடுகளுக்குப் பயணம் செய்தேன். இந்தியாவில் ஸ்மார்ட் வாச்களுக்கு உள்ள ரீச்சைப் பார்த்த பிறகுதான் இதுபோன்ற ஸ்மார்ட் வாட்ச்சுக்கான யோசனை பிறந்தது" என்று கூறினார்.
இந்த கைக்கடிகாரத்தின் தனித்தன்மை என்னவென்றால், தொலைபேசி இணைப்பு இல்லாமலே இயங்கக் கூடிய ஒரு சுயாதீனமான சாதனமாகும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்றவை.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த 37 வயதான ஜோத்சனா ஜா அவரது 10 வயது மகளுக்கு ஸ்மார்ட் வாட்சை வாங்கிக் கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியது...
“எனக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என் மகள் விளையாட்டு வகுப்புகள் மற்றும் டியூஷனுக்கு செல்வதால் பாதுகாப்பிற்காக ஜிபிஎஸ் சாதனத்தை தேடினேன். சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட் வாச்களில் இல்லாத ஒரு சிறப்பு அம்சம் இதிலுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் அவளது பின்னணியில் ஒலிக்கும் ஒலியினையும் கேட்க முடியும். அவளுக்கே தெரியாமல் அவளுடைய சூழலில் என்ன நடக்கிறது என்பதை அறிய முடிகிறது.
இன்று பெரும்பாலான குடும்பங்களில் தாய், தந்தை இருவரும் வேலை செய்கிறார்கள். இச்சூழலில் குழந்தைகளை பாட்டிகளுடன் விட்டுச் செல்ல வேண்டியுள்ளது. பாட வகுப்புகளுக்கு அப்பாற்பட்ட திறமைகளை வளர்க்கும் வகுப்புகளுக்கு குழந்தைகள் செல்கின்றனர். அவர்களுக்கு இந்த ஸ்மார்ட் வாட்ச்களை கட்டிவிடுவது பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.
மூத்தோர் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் சாதனம்...
இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளிடம் அவர்களுக்குத் தேவையானதை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. குழந்தைகள் அவர்களாகவே தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த கடிகாரம் அதற்கு உதவியாக இருக்கும் என்கிறார் அபிஷேக்.
“ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி இந்த ஸ்மார்ட் வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, எனது பெற்றோர் ராஜஸ்தானில் இருக்கிறார்கள், நான் மும்பையில் வசிக்கிறேன் என்றால், இந்தக் கடிகாரத்தின் மூலம் அவர்களின் உடல்நிலையை என்னால் கண்காணிக்க முடியும்.
பெரியவர்களின் சென்சார்களின் உதவியுடன் அவர்களின் உடல் வெப்பநிலை, இரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் அளவு பற்றிய தகவல்களைப் பெற இது உதவுகிறது. அதன் ஆண்டி-ஃபால் அலாரம் சென்சார் மூலம், பெற்றோர் கீழே விழுகிறார்களா அல்லது வழுக்கினாரா என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.
மெல்லிய சிலிக்கான் மூலம் ஸ்மார்ட் வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளதால், நாள் முழுவதும் கையில் அணிந்தாலும் அசெளகரியமான உணர்வை அளிக்காது. ஒவ்வொரு மூன்றாவது நபரும் நாள் முழுவதும் கடிகாரங்களை அணிந்து இரவில் மட்டுமே அவற்றை அகற்றுவார்கள். குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் வாட்சை அணியாமல் அருகில் வைத்திருந்தாலும், உங்களால் வீடியோ அல்லது ஆடியோ கால் செய்ய முடியும்” என்கிறார் அபிஷேக்.
ஒரு மாதத்தில் 1000 ஆர்டர்; ரூ1 கோடி நிதியை பெற்ற அபிஷேக்!
சமீபத்தில் அபிஷேக்கும் அவரது மருமகன் திவ்யஷித்தும் ஸ்டார்ட்அப்களுக்கான பிரத்யேக டிவி நிகழ்ச்சியான 'ஷார்க் டேங்க் இந்தியா'-ல் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி அமெரிக்க ரியாலிட்டி ஷோவான ஷார்க் டேங்கின் உரிமையின் இந்தியப் பதிப்பாகும்.
தனியார் சேனலில் ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களான முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் முன் ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் அவர்களது தொழிலின் நோக்கத்தை விளக்கி எடுத்துரைப்பர். அதில் சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் முதலீட்டாளர்களான நடுவர்கள் அவர்களது நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வர் அல்லது நிதிக்கடன் வழங்குவர்.
ஷார்க் டேங்க் நிகழ்ச்சியில் நடுவர்கள் முன்னிலையில் அபிஷேக் அவரது ஸ்மார்ட் வாட்ச் பற்றியும் அதன் நோக்கத்தையும் எடுத்துரைத்தார். அபிஷேக் குடும்பத்தில் ஏற்பட்ட துயர்ச் சம்பவத்தை போன்றே நடுவர்களுள் ஒருவரான ஷாதி டாட் காமின் நிறுவனர் அனுபம் மிட்டலும் கடந்து வந்துள்ளார். அதனால், அபிஷேக்கின் கண்டுபிடிப்பால் ஈர்க்கப்பட்ட அவரும் சுகர் காஸ்மெட்டிக்ஸ் சிஇஓ வினீதா சிங்கும் இணைந்து அபிஷேக்கிற்கு ஒரு ஒப்பந்தம் வழங்கினர். 10 சதவீத ஈக்விட்டிக்கு ரூ.1 கோடியும், 15 சதவீத வட்டியுடன் ரூ.1 கோடி கடனும் தருவதாக கூறினர்.
"நடுவர்கள் முன்னிலையில் எங்களது ஸ்மார்ட் வாட்ச் பற்றி எடுத்துரைக்க பயந்துகொண்டு இருந்தேன். ஆனால், அந்நிகழ்ச்சி நல்ல உணர்வை தந்தது. சந்தைப் பங்கை எவ்வாறு அதிகரிப்பது மற்றும் தொழிலில் கவனம் செலுத்த வேண்டியவை பற்றிய உதவிக்குறிப்புகளைப் பெற்றுள்ளோம். நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு எங்களது விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளது. நீங்கள் ஒரு பிராண்டாக மாறும் வரை மக்கள் உங்கள் தயாரிப்பை வாங்க மாட்டார்கள். நீங்கள் இன்னும் ஒரு பிராண்டாக இல்லாததால், உங்கள் தயாரிப்பை மக்கள் வாங்குவதில்லை. இந்நிலையை உடைக்க சிறிது நேரமும், பொறுமையும் தேவை. எங்களுக்கு அதை உடைக்க ஷார்க் டேங்க் உதவியது.
இதுவரை, நாடு முழுவதும் 3,000-க்கும் மேற்பட்டவர்கள் ஸ்மார்ட் வாட்ச்சை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மாதம், மட்டும் 1,000 ஆர்டர்களை கிடைத்துள்ளது. குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்ச் ரூ.6,000 முதல் ரூ.10,000 வரையிலும், மூத்த குடிமக்களுக்கான ஸ்மார்ட் வாட்ச்களின் விலை ரூ.7,000 வரையிலும் நிர்ணயித்துள்ளோம். இது மிக வேகமாக மாறிவரும் சந்தை, விரைவில் செலவுகளைக் குறைத்து மலிவு விலையில் தயாரிப்பை வழங்க முடிவெடுத்துள்ளோம். எங்களின் அடுத்த அறிமுகம் சுமார் ரூ.4,999 ஆகும்" என்று கூறி முடித்தார் அவர்.
தகவல் மற்றும் படங்கள் உதவி: The better India