ஏஐ உதவியோடு வர்த்தகப் பயணச் சேவையை மேம்படுத்த Pickyourtravel திட்டம்!
இந்தியாவின் முன்னணி சர்வதேச பயண ஏற்பாடு பிராண்டான சென்னையைச் சேர்ந்த Pickyourtrail, வர்த்தகப் பயண திட்டமிடலை சீராக்கி, எளிமையாக்க உதவும் FLUID சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவின் முன்னணி சர்வதேச பயண ஏற்பாடு பிராண்டான 'பிக்யுவர்டிரையல்' (Pickyourtrail), வர்த்தகப் பயண திட்டமிடலை சீராக்கி, எளிமையாக்க உதவும் புளுயிட் (FLUID) சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சேவை வர்த்தக நோக்கிலான பயண ஏற்பாட்டை டிஜிட்டல்மயமாக்கி, முன்பதிவுக்கான நேரம் மற்றும் செலவை குறைத்து பயணத்தை எளிதாக்குகிறது.
இந்தியாவில் 2024ல் வர்த்தகப் பயணங்கள் 18.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக சர்வதேச வர்த்தக பயண சங்கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், ஊழியர்களின் விருப்பத்தேர்வு, தொலைதூர பணி போக்கு, வர்த்தகம் – சுற்றுலா இணைந்த பயணம் ஆகியவை வர்த்தக பயண திட்டமிடலை சிக்கலாக்குகின்றன.
இந்த சவாலை எதிர்கொள்வதில் தொழில்நுட்பம், குறிப்பாக ஏஐ முக்கியப் பங்கு வகிக்கிறது. 28 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள பயண ஏற்பாடுத் துறை, ஆக்கத்திறன் ஏஐ நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள உள்ளது.
இந்நிலையில், புளுயிட் சேவை வர்த்தக பயண நிர்வாகத்தை டிஜிட்டல்மயமாக்கி, செயல்திறன் மிக்கதாக மாற்றுகிறது. ஆக்கத்திறன் ஏஐ உதவியுடன் மேம்பட்ட தானியங்கி தன்மையோடு, முன்பதிவு செயல்முறையை இந்த சேவை சீராக்கி, 19 இ-மெயில்கள் மற்றும் 72 மணி நேரம் தேவைப்படும் செயல்முறையை 2.5 நிமிடங்களில் நிறைவேற்றித்தருகிறது.
இந்த மேடை, ஊழியர்கள், விருந்தாளிகள் என இருத்தரப்பினரையும் ஏற்றுக்கொண்டு, அனுமதி நேரத்தை 95 சதவீதம் வேகமாக்கி, வர்த்தக பயண கொள்கைகள் மற்றும் சர்வதேச விதிகளுக்கு ஏற்ப செயல்படுகிறது.
“வர்த்தக பயணம் அதிகரிப்பது பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாகும். பெருந்தொற்று காலம் தொலைதூர பணி போக்கை பிரபலமாக்கியதோடு, நேரடி சந்திப்புகளுக்கான மதிப்பையும் உணர்த்தியது. வர்த்தக நிறுவனங்கள் தங்கள் பயண திட்டங்களை மாற்றி அமைக்க முயற்சிக்கும் நிலையில், வர்த்தகம்- சுற்றுலா சார்ந்த பயணங்கள் புதிய போக்காக அமைகின்றன,” என பிக்யுவர்டிரையல் நிறுவன இணை நிறுவனர் ஹரிகணபதி கூறியுள்ளார்.
இந்த மாறிவரும் பழக்கத்திற்கு ஏற்ற சேவையாக புளுயிட் அமைகிறது. வர்த்தக பயண நிர்வாகத்திற்கான செலவு குறைந்த, செயல்திறன் வார்ந்த சேவையாக அமைகிறது. செயல்முறையை எளிதாக்கி பட்ஜெட்டையும் குறைக்கிறது, என அவர் மேலும் கூறியுள்ளார்.
50,000 பயண திட்டங்களோடு, புளுயிட் சேவை, முன்பதிவு செயல்முறையின் 96 சதவீதத்தை தானியங்கிமயமாக்கி, 100 சதவீத ஜிஎஸ்டி பின்பற்றலை சாத்தியமாக்கியுள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் பயண ஏற்பாட்டில் 27 சதவீதம் அளவுக்கு செலவை குறைக்க முடிகிறது.
பிக்யுவர்டிரையல் நிறுவனம், 2014ல் ஹரி கணபதி மற்றும் ஸ்ரீநாத் சங்கர் ஆகியோரால் நிறுவப்பட்டு சர்வதேச பயண நிர்வாக சேவைகளை வழங்கி வருகிறது. அண்மையில் இந்தியாவின் சிறந்த சர்வதேச விடுமுறை பிராண்ட் விருது வென்றது. சென்னை, தில்லி, மதுரை, ஐதராபாத் மற்றும் திருவனந்தபுரத்தில் அலுவலகங்கள் கொண்டுள்ளது.
Edited by Induja Raghunathan