அன்று 12ம் வகுப்பில் தோல்வி; இன்று Zoho தலைமைப் பொறுப்பில் சாதிக்கும் குப்புலஷ்மி!
10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோஹோ-வில் பணியாற்றும் குப்புலஷ்மி, தொழில்நுட்ப பின்னணி இல்லாமல் பெண்கள் தொழில்நுட்ப நிறுவனங்களில் சாதிக்க முடியும் என காட்டியுள்ளார்.
குப்புலஷ்மி கிருஷ்ணமூர்த்தி ஜோஹோ நிறுவனத்தின் Product Evangelist. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தொழில்நுட்பப் பின்னணி கொண்டவர்கள் மட்டுமே மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியப் பொறுப்பு வகிக்கமுடியும் என்கிற சிந்தனையை மாற்றியமைத்தவர் குப்புலஷ்மி.
இண்டஸ்டிரியல் மைக்ரோபயாலஜிஸ்ட் ஆன குப்புலஷ்மி ஆர்வத்துடன் தொழில்நுட்பம் சார்ந்த கற்றலைத் தொடங்கினார். தொழில்நுட்பத் தளமான ஜோஹோ நிறுவனத்தின் ஸ்டார்ட் அப் ப்ரோக்ராம் தலைவர் ஆனார்.
எளிமையான வாழ்க்கை
குப்புலஷ்மி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர்கள் பள்ளிப்படிப்பை நிறைவு செய்யவில்லை என்பதால் குழந்தைகளை நன்கு படிக்கவைக்கவேண்டும் என்று விரும்பினார்கள். ஏழ்மையான குடும்பச் சூழலில் படித்தார் குப்புலஷ்மி. இதனால் இளம் வயதிலேயே பல அனுபவங்களுடன் வாழ்க்கைப் பாடங்களை புரிந்துகொள்ளும் பக்குவம் அவருக்கு ஏற்பட்டது. வலுவானவராகவும் மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் பரிவு குணம் கொண்டவராக உருவெடுக்கவும் இது உதவியது.
பள்ளிக்கூடம் குப்புலஷ்மிக்கு சற்று கடினமான காலக்கட்டமாகவே இவருக்கு இருந்துள்ளது. ஆங்கிலம், உயிரியல் போன்ற பாடங்களில் குப்புலஷ்மி தேர்ந்தவராக இருப்பினும், 12-ம் வகுப்பில் கணிதப் பாடத்தில் ஃபெயில் ஆகியுள்ளார்.
“10ம் வகுப்புக்குப் பிறகு நான் எந்த பாதையை தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற புரிதல் இல்லாததால் அறிவியல் பிரிவை தேர்வு செய்தேன். அது ஒரு தவறான முடிவு என்று இப்போது உணர்கிறேன். என் பெற்றோர்களுக்கும் சரியாக வழிகாட்ட தெரியவில்லை. என் நண்பர்கள் பலரை இந்த நிகழ்வுக்குப் பின் இழந்தேன். அப்போது அது ஒரு பெரிய படிப்பினையை நான் கற்றேன்,” என்றார்.
இதனால் பல விஷயங்களில் ஆறுதலாகவும் உதவியாகவும் இருந்த நண்பர்களையும் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனது. மெல்ல தனித்துவிடப்பட்டார். இந்தத் தனிமையே தற்சார்புடன் மீண்டெழ உதவியது என்கிறார்.
“என் அம்மா எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தார். இருப்பினும் சுயமாக செயல்படவேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. என் அப்பா, சகோதரி, நான் என அனைவரும் சேர்ந்து அம்மாவிற்கு கற்றுக்கொடுத்தோம். என் அப்பா வீட்டு வேலைகளில் உதவ, என் அம்மா படித்து எம்.ஏ, எம்.எட் போன்ற பட்டங்களைப் பெற்றார்,” என்றார் குப்புலஷ்மி.
இதனால் இளம் வயதிலேயே பாலின பாகுபாடு பார்க்கப்படாத சமத்துவச் சிந்தனையை இவரது குடும்பச் சூழல் ஊட்டி வளர்த்தது.
“ஒரு கோர விபத்தில் என் பெற்றோர்களை இழந்துவிட்டேன். அவர்கள் என்னுடன் இருந்திருந்தால் நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து மகிழ்ந்திருப்பேன்,” என்கிறார் வருத்தத்துடன்.
ஆலோசகர்
குப்புலஷ்மி ஜோஹோ-வில் ஸ்டார்ட் அப்’களுக்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். நிறுவனங்கள் சிறப்பான நோக்கத்தையும் பணிக் கலாச்சாரத்தையும் உருவாக்க உதவுகிறார்.
ஸ்டார்ட் அப்’கள் நிதி தொடர்பாக கவனம் செலுத்துவதுடன் ஊழியர்களிடையே பாலின சமத்துவம், பாதுகாப்பை உறுதிசெய்தல், மன நலம் போன்ற அம்சங்களிலும் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார்.
“வெற்றிகரமான தலைவர்கள் எப்போதும் மனித வளங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். நிறுவனத்தை நிலைப்படுத்த பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டியிருக்கும். அது முக்கியம்தான். அதேசமயம் மனித வளத்திற்கும் அதற்கு நிகரான முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்,” என்கிறார் குப்பு.
ஜோஹோ பயணம்
குப்புலஷ்மி ஜோஹோ நிறுவனத்தில் மென் திறன் மற்றும் தொடர்பாடல் திறனை மேம்படுத்தும் பயிற்சியாளராக சேர்ந்தார். வெவ்வேறு கலாச்சாரப் பின்னணி கொண்ட வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ளவும் அவர்களது தேவைகளைப் புரிந்துகொண்டு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ளவும் ஊழியர்களுக்கு பயிற்சியளித்தார்.
மாநில அரசாங்கங்கள், இன்குபேட்டர்கள், ஆக்சலரேட்டர்கள் என நிறுவனத்தில் பங்கு வகிக்கும் அனைவரையும் ஜோஹோ நிறுவனத்துடன் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தினார்.
குப்புலஷ்மிக்கு தொழில்நுட்பப் பின்னணி இல்லை. ஜோஹோ வாடிக்கையாளர்களும் இவரைப் போன்றே தொழில்நுட்பப் பின்னணி கொண்டவர்கள் இல்லை என்பதால் ஜோஹோ பிராடக்ஸ் தொடர்பாக பணிபுரியுமாறு ஜோஹோ சிஇஓ இவரிடம் பரிந்துரைத்துள்ளார்.
உடனே களமிறங்கிய குப்புலஷ்மி, ஆர்வத்துடன் தொடர்ந்து ஏராளமான கேள்விகள் எழுப்பி, பதிலறிந்து தொழில்நுட்ப அம்சங்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கினார்.
“தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் புதிய அறிமுகம் இருந்துகொண்டே இருக்கும். தொடர் கற்றல் மட்டுமே உங்களை தக்கவைத்துக்கொள்ள உதவும்,” என்கிறார்.
மற்றவர்களுக்கு ஆலோசகராக, வழிகாட்டியாக செயல்படவேண்டியது பொறுப்புணர்வுடன் கூடியது என்கிறார். இதுதவிர குப்புலஷ்மி புத்ரி திட்டத்தில் பணியாற்றுகிறார். இந்த லாப நோக்கமற்ற நிறுவனம் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன் பயிற்சியில் கவனம் செலுத்துகிறது.
பெண்களின் பங்களிப்பு
பொதுவாக பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதாகவே பலருக்கு தோன்றுகிறது. இருப்பினும் சமீபத்தில் பல பெண்கள் ஆரவாரம் ஏதுமின்றி பெரியளவில் சாதித்து வருகின்றனர். தற்போது பல தளங்கள் முன் வந்து இவர்களது சாதனைப் பயணங்களை உலகறியச் செய்து வருகின்றன என்கிறார் குப்புலஷ்மி.
இளம் தலைமுறையினர் தங்களது தொழில் வாழ்க்கையை கவனமாகத் தேர்வு செய்யவேண்டும் என்கிறார்.
“இளம் சமூகத்தினர் வெறுமனே கிடைக்கும் வேலை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. வாய்ப்புகளை முறையாக ஆய்வு செய்து தங்களது திறனுக்கு ஏற்ற வாய்ப்பை மட்டுமே தேர்வு செய்யவேண்டும்,” என்கிறார்.
ஒவ்வொரு அலுவலக சந்திப்பிலும் தான் ஒரு பெண் என்பது ஏதோ ஒரு குறிப்பின் மூலம் நினைவுப்படுத்த்தப்படும் என்றும் ஆரம்பத்தில் அதைக் கடந்து பணியில் கவனம் செலுத்துவது சவாலாக இருந்ததாகவும் குப்புலஷ்மி தெரிவிக்கிறார்.
கட்டுரை உதவி: ஆதிரா நாயர், மேக்கர்ஸ் இந்தியா | தமிழில்: ஸ்ரீவித்யா