தான் பட்ட அவமானங்களை தன் சமூகத்தினர் படாமல் இருக்க கழிவு மேலாண்மையில் உதவிடும் இளைஞர்!
மூன்றாம் தலைமுறை குப்பை சேகரிப்பாளரான கிருஷ்ணா, அவரது சமூகத்தினரின் உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்காக அயராது குரல் எழுப்புகிறார். ஒரு தொழில்முனைவோராக, கழிவு சேகரிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பையும், நம்பிக்கையையும் அளித்து, கழிவு நிர்வகிப்பதற்கான புதுமையான வழிகளை தொடர்ந்து ஆராய்கிறார்.
பிழைப்பிற்காக தெருக்களில் குப்பைகளை அள்ளியது தொடங்கி, இன்று 15 பேருக்கு வேலை கொடுத்து ஒரு கழிவு மேலாண்மை தொழில்முனைவராக உயர்ந்து நிற்பது வரை கிருஷ்ணாவின் கதை அசாதாரணமானது.
80 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது முன்னோர்கள் கள்ளக்குறிச்சியிலிருந்து பெங்களூருக்கு சிறந்த வாழ்க்கையைத் தேடி குடிபெயர்ந்தனர். மூன்றாம் தலைமுறை கழிவு சேகரிப்பாளராக அவரது துயரமான பயணம், மனதை கணக்க செய்வதுடன் குப்பைகள் சேகரிப்பாளர்களின் மீதான பார்வையை மறுபரிசீலினை செய்ய வேண்டிய நேரமிது என்பதை உணர்த்துகிறது. அவர்களது சமூகத்தினருக்கான மரியாதை மற்றும் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார் கிருஷ்ணா.

கழிவு சேகரிப்பாளர் டு கழிவு தொழில்முனைவர்...
"7ம் வகுப்புக்குப் பிறகு பள்ளியை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டேன். ஏனெனில், வகுப்பில் படிக்கும் சகமாணவன், நான் குப்பை அள்ளும் சமூகத்தைச் சேர்ந்தவன் என்று எல்லோரிடமும் சொன்னதில், அனைவரும் என்னை ஒதுக்கப்பட்டவர் போல நடத்தி, கடைசி பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள். அவமானப்பட்டேன், இனிமேல் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தேன்," என்று சோஷியல் ஸ்டோரியிடம் பகிர்ந்தார்.
பள்ளியை விட்டு நின்றபின் கிருஷ்ணா, அவரது அம்மாவுடன் சேர்ந்து ஜே.சி ரோட்டில் தொடங்கி பெங்களூரு மெஜஸ்டிக் வரை சென்று தினமும் 6-7 கி.மீ தூரம் நடந்து, தலையில் கனமான பைகளை சுமந்து கொண்டு குப்பைகளை எடுக்க சென்றார். ஆனால், அவர்களின் உடல் சுமையை விட அவர்களின் இதயத்தில் இருந்த பாரம் பெரிது. ஏனெனில், வீடுகளிலே கழிவுகளை பிரித்து வழங்குவது வழக்கமாக மாறுவதற்கு, பல ஆண்டுகளுக்கு முன்பே மறுசுழற்சிக்கு அனுப்ப கழிவுகளை கைகளால் பிரித்தெடுத்ததாக நினைவு கூர்ந்தார் அவர். சமூகத்தில் அவர்களுக்கான மரியாதை இல்லாததையும் கிருஷ்ணா சுட்டிக்காட்டுகிறார்.
"நாங்கள் ஏற்கனவே தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள். மக்கள் எங்களை அதற்கும் கீழே நடத்தினர். கழிவுகளை சேகரிக்க போதுமான வசதிகள் கிடையாது. நாங்கள் செய்யும் வேலைக்கு அங்கீகாரம் இல்லை, கண்ணியம் இல்லை. அப்படி ஒரு நாள் கூலியான 40-50 ரூபாய் உயிர்வாழவும் போதுமானதாக இல்லை."
ஆனால், நாங்கள் மக்கள் வேண்டாமென துாக்கியெறியும் குப்பைகளை பிரித்தெடுத்து, மறுசுழற்சி மூலம் அவற்றிற்கு புதிய உயிர் கொடுத்து, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட உதவுகிறோம் என்பைத மக்கள் புரிந்து கொள்வதில்லை," என்று வருத்தத்துடனும், கோபத்துடனும் பகிர்ந்த கிருஷ்ணா, வேறு ஏதாவது வேலைக்கு சென்றுவிட எண்ணினார்.
"ஒரு டாக்ஸி டிரைவராகவோ அல்லது அலுவலகப் பணியாளராக வேலை செய்திருக்கலாம் என்று அடிக்கடி நினைப்பேன். அதன் மூலம் என் வாழ்க்கை மாறியிருக்கும். ஆனால் என் சமூகத்தின் நிலை?" என்று கிருஷ்ணா அவரது 18 வயதில் ஏற்பட்ட இந்த உணர்தல் அவரை மாற்றத்திற்காகப் போராடத் தூண்டியது.
அதன்படி, கழிவு சேகரிப்பாளர்களை ஒன்றிணைத்து, அவர்களின் பணிக்கு நற்பெயரையும் கண்ணியத்தையும் கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதை இலக்காக கொண்டு அவர்களை ஒன்றிணைக்கத் தொடங்கினார். இதில் கிருஷ்ணாவை சரியான திசையில் வழிநடத்த பக்கபலமாக இருந்தார் கழிவு மேலாண்மை தீர்வுகளை வழங்கும் அமைப்பான `வேஸ்ட் வைஸ்` டிரஸ்டின் நிறுவனர் ஆன்செல்ம் ரொசாரியோ.
"அவர் (ரொசாரியோ) என்னை ஒரு கழிவு சேகரிப்பாளராகவே நடத்தவில்லை. என்னைச் சுற்றி கைகளை வைக்கவோ அல்லது கட்டிப்பிடிக்கவோ தயங்கவில்லை. அவர் என்னை சகமனிதனைப் போல நடத்தினார். தேசத்திற்கு நமது பணி எவ்வளவு முக்கியம் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்," என்று கிருஷ்ணா நினைவு கூர்ந்தார்.
"சமூகத்தில் மரியாதைக்காக போராடுகிறோம்..."
2016ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில், உலர் கழிவு சேகரிப்பு செயல்பாட்டில் முறைசாரா கழிவு சேகரிப்பாளர்களைச் சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் கழிவு சேகரிப்பாளர்களுக்கு உலர் கழிவு சேகரிப்பு மையங்களை ஒதுக்க BBMP துணைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதன்மூலம் 2017ம் ஆண்டு, டோம்லூரின் உலர் கழிவு சேகரிப்பை நடத்த கிருஷ்ணா BBMP உடன் நேரடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இன்று, இந்த மையம் நாளொன்றுக்கு 3 டன் உலர் கழிவுகளை சேகரிக்கிறது மற்றும் 15 பேர் கொண்ட குழுவைக் கொண்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பெண்கள், பிரிக்கப்பட்ட கழிவுகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இருந்து அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இது தவிர, கிருஷ்ணா அரசுப் பள்ளிகளில் கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.

கிருஷ்ணாவால் இயக்கப்படும் பெங்களூருவின் டோம்லூரில் உள்ள உலர் கழிவு சேகரிப்பு மையத்தில், உலர் கழிவுகளை வரிசைப்படுத்தி பிரித்தெடுக்கும் பெண்கள் குழு.
"நாங்கள் வெறும் கழிவு சேகரிக்கும் சமூகம் மட்டுமல்ல, கழிவு மேலாண்மையில் பங்களிப்பாளர்கள். கழிவுகளைப் பற்றிய அறிவு எங்களுக்கு நிறைய இருக்கிறது. ஆனால், அதனால் எங்களுக்கு எந்தப் பலனும் கிடைப்பதில்லை. மேலும், கழிவு சேகரிப்பாளர்கள் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய பகுதியினர். இருப்பினும், நாங்கள் கண்ணியத்திற்காக போராடுகிறோம்," என்றார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, முறைசாரா கழிவு சேகரிப்பாளர்களை ஒன்றிணைக்க "த்யாஜ்ய ஷர்மிகா" சங்கம் உருவாக்கப்பட்டது. இந்த சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார் கிருஷ்ணா. அப்போதிருந்து, அவர் அர்ஜென்டினா, கானா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று கழிவு மேலாண்மை குறித்துப் பேசி வருகிறார்.
பிளாஸ்டிக் தடையால் குப்பை எடுப்பவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. மேலும், கழிவுகளை நம்பி வாழும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட சமூகத்திற்கு "நியாயமான மாற்றத்திற்கு" வழிக்கோருகிறார். 2019ம் ஆண்டில், கிருஷ்ணா ஒரு அயல்நாட்டு மாணவருடன் ஜவுளி கழிவு சேகரிப்பை முன்னோட்டமாக நடத்தினார்.
மாற்றத்தை நோக்கிய நீண்ட பாதை..!
"டோம்லூரில் உள்ள வீடுகளுக்குச் சென்று, ஜவுளிக் கழிவுகளைக் கொடுக்கும்படி கேட்டேன். முதலில், நாங்கள் அவற்றை செகண்ட் ஹேண்ட் சந்தைகளில் விற்று ஒரு சிறிய வருமானத்தைப் பெற்றோம். அதை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல விரும்பி, நாங்கள் மீண்டும் ஹசிரு தலாவுடன் கூட்டு சேர்ந்தோம். பெங்களூரில் உள்ள அனைத்து உலர் கழிவு மையங்களுக்கும் ஜவுளி கழிவு சேகரிப்பு குறித்து பயிற்சி அளித்தோம். 180 டன் ஜவுளி கழிவுகளை சேகரித்து, மறுசுழற்சிக்காக வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பினோம்," என்றார்.

ஜவுளி கழிவுகளை சேகரிக்கும் கிருஷ்ணா.
ஜவுளி கழிவு சேகரிப்பை மேலும் கட்டமைக்கப்பட்டதாகவும் சாத்தியமானதாகவும் மாற்ற, கிருஷ்ணா என்வியுவின் ஒரு முயற்சியான ரீடெக்ஸின் கழிவு சேகரிப்பாளராகப் பணியாற்றுகிறார். ரீடெக்ஸ் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் உள்ள படுக்கை துணிகள், துண்டுகள், குளியலறைகள், தரைவிரிப்புகள், திரைச்சீலைகள் போன்ற ஜவுளிக் கழிவுகளை புதிய, நோக்கமுள்ள ஜவுளிகள் அல்லது பொருட்களாக மாற்ற உதவுகிறது.
ரீடெக்ஸூடன் கைகோர்த்த கிருஷ்ணா, ஓட்டல்களிலிருந்து ஜவுளி கழிவுகளை பெற்று அவற்றை பிரித்தெடுத்து மறுசுழற்சிக்கு அனுப்புகிறார். கழிவு மேலாண்மையில் முக்கிய பங்காற்றி மாற்றத்திற்கு வித்திட்டாலும், எங்களை பற்றிய சமூகத்தின் பார்வை மாறவில்லை என்று வேதனையுடன் கூறுகிறார்.
"என் மகனை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த நான் இன்னும் தயங்குகிறேன், அவன் ஒரு குப்பை சேகரிப்பவரின் மகன் என்று முத்திரை குத்தப்படுவான் என்று பயமாக உள்ளது. நாங்கள் செய்யும் வேலை தொடர்ந்து களங்கப்படுத்தப்படுவதால், எங்கள் சமூகத்திற்கு வெளியே எங்களால் திருமணம் செய்து கொள்ள முடியாது. சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், நாங்கள் இன்னும் கழிவுகளுடன் வேலை செய்பவர்களாகவே அறியப்படுகிறோம்," என்றார்.
நமது நகரங்களை சுத்தமாக வைத்திருக்கவும், மறுசுழற்சி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் மற்றும் நிலையான கிரகத்திற்கு பங்களிக்கும் கழிவு சேகரிப்பாளர்களின் பணியை நாம் அங்கீகரித்து மதிக்க வேண்டிய நேரம் இது.
தமிழில்: ஜெயஸ்ரீ

இந்தியாவின் குப்பை பிரச்சனையை தீர்க்கும் நண்பர்கள் - கழிவு நிர்வாக சிக்கலுக்கு வழிகாட்டும் 'Recircle'