'டாக்ஸி புக்கிங் தொடங்கி உயில் எழுதுவது வரை' - 60+ வயதினருக்கு ஒரு தளத்தை உருவாக்கிய 66 வயது தொழில்முனைவர்..!
60க்கும் பின்னும் ஒரு வாழ்வு இருக்கிறது என்பதை உணர்த்த விரும்பிய மீனாட்சி மேனன், அக்கட்டத்தை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கடப்பதற்கு டாக்ஸி புக்கிங், டிராவல், யோகா தொடங்கி மருத்துவ உதவிகள் வரை 60+ வயதுடையவர்களுக்கான சகல சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் GenS Life எனும் தளத்தைத் தொடங்கியுள்ளார்.
60க்கும் பின்னும் ஒரு வாழ்வு இருக்கிறது என்பதை உணர்த்த விரும்பிய மீனாட்சி மேனன், அக்கட்டத்தை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கடப்பதற்கு டாக்ஸி புக்கிங், பில்லிங், யோகா தொடங்கி மருத்துவ உதவிகள் வரை 60+ வயதுடையவர்களின் உடல், மன, உணர்ச்சி, நிதி மற்றும் சமூக நல்வாழ்வைப் பூர்த்தி செய்ய சகல சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் 'ஜென் எஸ் லைஃப்' எனும் தளத்தைத் தொடங்கினார்.

60+ வயதினருக்கென ஒரு தளம்...
"2019ம் ஆண்டு. அப்போது எனக்கு வயது 60. ஐபோன் வாங்குவதற்காக ஒரு பெரிய எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு சென்றேன். அங்கிருந்த சேல்ஸ்மேன் என்னை ஒரு ஆண்ட்ராய்டு போனை வாங்கிக்கொள்ள சொன்னார். ஆண்ட்ராய்டு போன் 'என்னைப் போன்ற ஒருவருக்கு எளிதானது' என்று கூறினார். அப்போதுதான் நீங்கள் 60 வயதைத் தாண்டியவுடன் சமூகம் உங்களை எவ்வாறு வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்குகிறது என்பதை உணர்ந்தேன்," எனும் மீனாட்சி மேனை இச்சம்பவம் வெகுவாக பாதித்தது.
அதன் விளைவாய் 60க்கும் பின்னும் ஒரு வாழ்வு இருக்கிறது என்பதை உணர்த்தி, அக்கட்டத்தை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கடப்பதற்கு யோகா, நகைச்சுவை நிகழ்ச்சி தொடங்கி மருத்துவ உதவிகள் வரை சகல சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் 'ஜென் எஸ் லைஃப்' (GenS Life) எனும் தளத்தை தொடங்கினார்.
மும்பையில் பிறந்து வளர்ந்த மேனன், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவில் பல முன்னணி நிறுவனங்களில் பல ஆண்டுகளாக பணிபுரிந்தார். 2003ம் ஆண்டில், அவர் ஸ்பேஷியல் அக்சஸ் என்ற ஊடக மற்றும் சந்தைப்படுத்தல் தணிக்கை ஆலோசனை நிறுவனத்தை நிறுவினார்.
பின்னர், 2020ம் ஆண்டு அந்நிறுவனத்தை டெலாய்ட் கையகப்படுத்தியது. இதைத்தொடர்ந்தே, இந்தியாவில் வயது முதிர்வு குறித்த அவரது தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் அவதானிப்புகளால் ஈர்க்கப்பட்டு, அவர் மூத்தவர்களுக்கு நிறைவான வாழ்க்கையை நடத்துவதற்கான வளங்களையும் வாய்ப்புகளையும் வழங்கும் ஜென் எஸ் லைஃப் என்ற தளத்தைத் தொடங்கினார்.
"எனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியை பிராண்டுகள் மற்றும் உத்திகளை உருவாக்கினேன். இப்போது, வாழ்க்கையின் பிற்காலத்தில் மக்களுக்கு அர்த்தமுள்ள ஒன்றை உருவாக்க விரும்பினேன்."
இந்தியா பெரும்பாலும் ஒரு இளம் தேசமாக கொண்டாடப்படுகிறது, ஆனால், நாமும் ஒரு வயதான தேசமாக மாறி வருகிறோம். நகர்புற இந்தியாவில் ஆயுட்காலம் பெண்களுக்கு 78 ஆண்டுகளாகவும், ஆண்களுக்கு 74 ஆண்டுகளாகவும் உயர்ந்துள்ளது. இந்த மாற்றம் வயதானவர்களின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் அமைப்புகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நீங்கள் 60 வயதில் ஓய்வு பெற்று 90 வயது வரை வாழ்ந்தால், உங்களுக்கு முன்னால் 30 ஆண்டுகால வாழ்க்கை இருக்கிறது. அந்த ஆண்டுகளை சமூக எதிர்பார்ப்புகளின் கைதியாக உணருவதை கற்பனை செய்து பாருங்கள், என்றார்.

ஜென் எஸ் லைஃப் தளமானது, 60+ வயதுடையவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும், 30 மற்றும் 40 வயதுடைய பெரியவர்கள் அவர்களது குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோருக்கான பொறுப்புகளை கையாள்வதில் உள்ள அழுத்தத்தைக் குறைப்பதற்கும் ஒரு தளமாகும். அதன் செயலி 12 மொழிகளில் கிடைக்கிறது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்ன வகையான சேவைகள் தேவை என்பது குறித்து ஓர்மாக்ஸ் நடத்திய தொடர்ச்சியான ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த செயலி உருவாக்கியுள்ளனர். இன்று, இந்த செயலி இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் சவுதி அரேபியாவிலும் கிடைக்கிறது.
உறுப்பினர் மாதிரியில் செயல்படும் இத்தளம், ஆண்டுக்கு ரூ.990 சந்தாவில் பரந்த அளவிலான சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது. உடல்நலம், நல்வாழ்வு, நிதி, பயணம், பாதுகாப்பு மற்றும் தோழமை சேவைகளை ஒருங்கிணைக்கிறது மற்றும் உறுப்பினர்கள் அடிப்படைக் கட்டணத்தை செலுத்தி, பின்னர் தேவைக்கேற்ப கூடுதல் சேவைகளைத் பெரும்பாலும் தள்ளுபடி விலையில் தேர்ந்தெடுக்கும் மாதிரியில் செயல்படுகிறது. எடுத்துக்காட்டாக, அனைத்து மருத்துவ பரிசோதனைகளுக்கும் 15% தள்ளுபடியை வழங்க மெட்ரோபோலிஸ் லேப்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
மேலும், முதியோர் பராமரிப்பு மற்றும் உதவி சேவைகளுக்காக அன்வயா மற்றும் ஹெல்பீ போன்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. டாக்ஸிகளை முன்பதிவு செய்வது முதல் வீட்டு சுகாதாரப் பராமரிப்பு வரை உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுக்கான உதவியை அணுகலாம்.
"மருத்துவத் தள்ளுபடி பரிசோதனை மூத்த உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினருக்கும் பொருந்தும். 'எனது குறியீட்டைப் பயன்படுத்தி தள்ளுபடி பெறுங்கள்' என்பது மூத்தவர்களின் மதிப்பை உணர ஒரு சிறிய ஆனால் சக்திவாய்ந்த வழியாக மாறுகிறது," என்றார்.
ஜென் எஸ் லைஃப் வழங்கும் சேவைகள்:
- வழக்கமான சுகாதார பரிசோதனைகள் மற்றும் மூத்த குடிமக்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப கண்காணிப்பு சேவைகள்.
- டாக்ஸிகளை முன்பதிவு செய்தல், பில்களை செலுத்துதல் அல்லது வீட்டு வேலைகளை நிர்வகித்தல் ஆகியவற்றில் உதவியளித்து, அன்றாட வாழ்க்கையை சுமூகமாக்குதல்.
- டிமென்ஷியா போன்ற நினைவாற்றல் தொடர்பான சவால்களைக் கையாளும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு ஆதரவு.
- மூத்த குடிமக்களுக்கு ஏற்ற விடுமுறை நாட்களுக்கான டிராவல் பேக்கேஜ்கள்.
- மனநலம், ஊட்டச்சத்து மற்றும் நிதி திட்டமிடல் போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய கட்டுரைகள், வீடியோக்களின் தொகுப்பு.
- பல்வேறு நிலை உடல் திறனுக்காக வடிவமைக்கப்பட்ட யோகா மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள்.
- இணைப்புகளை வளர்ப்பதற்கும் தனிமையை எதிர்த்துப் போராடுவதற்கும் மெய்நிகர் அடா அமர்வுகள் மற்றும் நிகழ்வுகள்.
- உணவியல் நிபுணர்கள், பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் மனநல நிபுணர்கள் உள்ளிட்ட நிபுணர்களுடன் ஆலோசனைகள்.
- உயில் மற்றும் பத்திர சேவைகள், எஸ்டேட் திட்டமிடல், குடும்ப அறக்கட்டளை உருவாக்கம் மற்றும் பரம்பரை சேவைகள்
இவை தவிர, செயலியில் உள்ள ஒரு SOS பொத்தானை, அவசரகாலத்தில் மூன்று முறை அழுத்தும்போது பயனர்களின் அவசர தொடர்புகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்ட செய்தியை அனுப்புகிறது என்பது இதன் முக்கியமான அம்சமாகும்.

"அறுபது என்பது புதிய நாற்பது அல்ல; அறுபது என்பது அறுபது..!"
"உங்கள் வயதை எதிர்ப்பதை விட அதை ஏற்றுக்கொள்வது முக்கியம். அறுபது என்பது புதிய நாற்பது அல்ல; அறுபது என்பது அறுபது, அது அற்புதமானது. நாம் அதை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்," என்று அவர் வலியுறுத்துகிறார்.
60 வயதிற்குப் பிறகு வாழ்க்கை என்பது உலகத்திலிருந்து பின்வாங்குவது பற்றியது என்ற கதையை அகற்றுவதே ஜென் எஸ் லைஃப் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நடைமுறை சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்த தளம் சமூக உணர்வை வளர்க்கிறது. ஆன்லைன் அடா அமர்வுகள் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பயண அனுபவங்கள் வரை, பல மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் தனிமையை எதிர்த்துப் போராட உதவுகிறது. மீனாட்சி மேனனைப் பொறுத்தவரை, GenS Life என்பது ஒரு வணிகத்தை விட அதிகம் - இது இந்தியாவில் முதுமை அடைவது என்றால் என்ன என்பதை மறுவரையறை செய்வதற்கான ஒரு இயக்கம்.
"60+ வயது என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல, மாறாக அது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும். மேலும் முதியவர்கள் முழு சுதந்திரத்துடன் வாழ்க்கையை வாழ முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் சக்கரத்தை மீண்டும் கண்டுபிடிக்கவில்லை. முதியவர்களுக்கு ஒரு சமமான சமூகத்தை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம்," என்று கூறி முடித்தார்.
தமிழில்: ஜெயஸ்ரீ

சீனியர் சிட்டிசன்களின் நண்பனாய் அனைத்து சேவைகள் அளிக்கும் சென்னை நிறுவனம்!