தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லையா? - இன்று முதல் இதை செய்யுங்கள்!
மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோருக்கு நாளை முதல் உதவி மையம் செயல்பட தொடங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோருக்கு இன்று முதல் உதவி மையம் செயல்பட தொடங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. இத்திட்டத்தை தற்போது ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் நிறைவேற்றியுள்ளது. இதற்கான அறிவிப்பை, இந்தாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15-ம் தேதி முதல் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் இத்திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' என பெயர் சூட்டப்பட்டது.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி அன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரத்தில் இருந்து இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கு முன்னோட்டமாக பல ஆயிரக்கணக்கான பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டது.
செப்டம்பர் 20ம் தேதிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மகளிரின் வங்கிக் கணக்கிலும் 1000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தகுதி இருந்தும் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக தமிழ்நாடு அரசு தற்போது அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பம் தேர்வாக செய்ய வேண்டியது என்ன?
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியானதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் 2 கட்டங்களாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி, சுமார் 50 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் நிராகரிக்கப்பட்ட 50 லட்சம் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? எனத் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். அவர்களுக்கு முறையான காரணத்தை அதிகாரப்பூர்வமாக சொல்ல வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஒருவேளை விண்ணப்பம் தவறுதலாக நிராகரிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு மேல்முறையீடு செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும் என அதிகாரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
- விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டு நிலுவையில் உள்ளதா? நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணம் என்ன? போன்ற தகவல்களையும், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேற்று முதல் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அந்த குறுஞ்செய்தியுடன் இலவச உதவி எண்ணையும் இணைத்து அனுப்பும் படி அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
- மேலும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- அதாவது, தகுதி இருந்தும் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கருதும் இல்லத்தரசிகள், குறுஞ்செய்தி வந்த 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலமாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம்.
- அப்படி மேல்முறையீடு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேல்முறையீடு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் தகுதி குறித்து விசாரிக்கப்பட்டு, கள ஆய்வு செய்யப்பட்டு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
- மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கான ஏடிஎம் அட்டைகள் வங்கிகளில் இருந்து விநியோகிக்கப்படும் என்றும், ஏடிஎம் அட்டையை ஆக்டிவேட் செய்ய வங்கி கிளைகளை அணுகும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் உதவி மையம் செயல்படும்:
மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோருக்கு இன்று முதல் உதவி மையம் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அந்த மையத்தை அணுகி விண்ணப்பம் நிராகரிப்பு, மீண்டும் விண்ணப்ப பதிவு உள்ளிட்டவை குறித்து தீர்வு காணலாம்.
அதேபோல், ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் வங்கிக் கணக்குக்கிற்கு உரிமைத்தொகை டெபாசிட் செய்யப்படாமல் இருப்பது தொடர்பான சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இன்று முதல் உதவி மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை:
‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' என்ற பெயரில் தகுதியுள்ள இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை நேரடியாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வரும் நிலையில், மினி பேலன்ஸ் என்ற பெயரில் வங்கிகள் அந்த தொகையை பிடித்தம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட போதும், அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
அரசு வழங்கும் உரிமைத் தொகையை பிடித்தம் செய்யக்கூடாது என வங்கிகளுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்ற மகளிர் உரிமைத் தொகையை நிர்வாக செலவினங்களுக்காக நேர் செய்யக்கூடாது என வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தங்களை மீறி செயல்படும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், உரிமைத் தொகை வங்கிகளால் பிடித்தம் செய்யப்பட்டால் 1100 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்றும், இதுதொடர்பாக விரைவில் மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.