1,58,000 ஸ்டார்ட் அப்கள், 155 பில்லியன் டாலர் நிதி - வளர்ச்சிப்பாதையில் இந்திய ஸ்டார்ட் அப் சூழல்!
ஸ்டார்ட் அப்'களுக்கான நிதி, 2016ல் 8 பில்லியன் டாலராக மட்டும் இருந்த நிலை மாறி, 2024ல் 155 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. மேலும், 48 சதவீத ஸ்டார்ட் அப்'கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் உருவாகியுள்ளன.
இந்திய ஸ்டார்ட் அப் சூழல், 2016ல் ’ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டம் துவக்கப்பட்டது முதல் பெரிய அளவில் வளர்ந்திருப்பதாகவும், ஸ்டார்ட் அப்'கள் எண்ணிக்கை 400ல் இருந்து இப்போது 158,000 ஆக அதிகரித்திருப்பதாகவும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மேம்பாட்டுத்துறை (DPIIT) தெரிவித்துள்ளது.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் தொழில்முனைவு கலாச்சாரத்தை ஊக்குவித்து, வலுவான ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தை முக்கிய அம்சமாக திகழ்கிறது.
"இந்தத் திட்டம் இந்தியாவை வேலைத்தேடுபவர்களின் தேசம் என்பதில் இருந்து வேலையை உருவாக்குபவர்கள் தேசமாக மாற்றி இருக்கிறது,” என தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மேம்பாட்டுத்துறை (DPIIT) செயலாளர் அமர்தீப் சிங் பாட்டியா அண்மையில் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார்.
ஸ்டார்ட் அப்'களுக்கான நிதி, 2016ல் 8 பில்லியன் டாலராக மட்டும் இருந்த நிலை மாறி, 2024ல் 155 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. மேலும், 48 சதவீத ஸ்டார்ட் அப்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் செயல்படும் வகையில், ஸ்டார்ட் அப் பரப்பு விரிவடைந்திருப்பதாக, துறையின் துணை செயலாளர் சஞ்சீவ் சிங் தெரிவித்தார்.
இந்தியாவின் யூனிகார்ன் எண்ணிக்கையும் 2016ல் 8 எனும் நிலையில் இருந்து தற்போது 118 ஆக அதிகரித்துள்ளது. இந்தத் துறை 1.7 மில்லியன் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த பட்ஜெட்டில் ஏஞ்சல் வரி நீக்கப்பட்டது, 2016ல் ஸ்டார்ட் அப்களுக்கு நிதி அளிக்க நிதிகளின் நிதி (FFS) துவக்கப்பட்டது உள்ளிட்ட முக்கிய கொள்கை முடிவுகள் இந்த வளர்ச்சிக்கு உதவியுள்ளன.
"இந்தியாவுக்கு ஸ்டார்ட் அப்'கள் திரும்பி வர ஊக்கம் அளிக்கும் முக்கிய நடவடிக்கையாக ஏஞ்சல் வரி நீக்கம் அமைந்துள்ளதாக எதிர்வினைகள் தெரிவிப்பதாக," பாட்டியா குறிப்பிட்டார்.
10ம் தேதி, நாடு முழுவதும் ஸ்டார்ட் அப்களுக்கு நிதி அளிப்பதை மேம்படுத்தும் வழிமுறைகளை ஆராய, 75 மாற்று முதலீடு நிதிகள் (AIFs) பிரதிநிதிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உள்நாட்டு மூலதனம் மூலம் இந்திய ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ரூ.10,000 கோடி நிதியுடன் ஸ்டார்ட் அபர்களுக்கான நிதிகளின் நிதி உண்டாக்கப்பட்டது. ஸ்டார்ட் அப்களில் நேரடியாக முதலீடு செய்வதற்கு பதிலாக, இந்த திட்டம் செபியில் பதிவு செய்யப்பட்ட மாற்று முதலீடு நிதிகளுக்கு நிதி அளிக்கிறது. அவை, ஸ்டார்ட் அப்களில் சமபங்கு மற்றும் சமபங்கு சார்ந்த வழிகளில் முதலீடு செய்கின்றன.
உற்பத்தி சார்ந்த இன்குபேட்டர்கள் வளர்ச்சிக்காக என்.எஸ்.இ பட்டியிலிடப்பட்ட 100 முன்னணி நிறுவனங்களை துறை தொடர்பு கொண்டுள்ளது. இந்த முயற்சி நிதி திரட்டலை ஊக்குவிப்பதோடு, ஸ்டார்ட் அப் மற்றும் முன்னணி நிறுவனங்களிடையே கூட்டு முயற்சியை ஊக்குவித்து ஸ்டார்ட் அப் சூழலை மேம்படுத்த விரும்புகிறது. இதற்காக வழிகாட்டல் மற்றும் வளரும் வர்த்தகங்களுக்கான ஆதரவு அளிக்கப்படுகிறது.
உற்பத்தி ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்க சில முன்னணி நிறுவனங்களையும் துறை தொடர்பு கொண்டுள்ளது. இவற்றின் தயாரிப்புகளை வாங்கி ஊக்குவிக்க செய்வது முக்கிய நோக்கம், என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆங்கிலத்தில்: சௌஆன் சென், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan