'2035ல் இந்திய மென்பொருள் துறை 100 பில்லியன் டாலராக இருக்கும்' - சாஸ்பூமி கணிப்பு!
ஏஐ., எஸ்.எம்.பி, மற்றும் அரசு டிஜிட்டல் திட்டங்கள் ஆகியவற்றால் இந்திய மென்பொருள் துறை ஐந்து மடங்கு வளர்ச்சி காண உள்ளது.
இந்திய மென்பொருள் சந்தையின் மதிப்பு, ஏஐ உந்துசக்தியால் தற்போதுள்ள 20 பில்லியன் டாலரில் இருந்து 2035ல் 100 பில்லியன் டாலராக உருவாகும், என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
மென்பொருளை ஒரு சேவையாக வழங்கும் சாஸ் (SaaS) நிறுவனர்கள் மற்றும் இதர மென்பொருள் உருவாக்குனர்கள் அமைப்பான சாஸ்பூமி, தனது ஆண்டு அறிக்கையில் அடுத்த பத்தாண்டுகளில் 5 மடங்கு வளர்ச்சி உண்டாகும், என தெரிவித்துள்ளது.
ஏஐ நுட்பம் சார்ந்த தானியங்கிமயம், செயல்திறன் வாய்ந்த மென்பொருள் வளர்ச்சி, எஸ்.எம்.பி ஏற்பு மற்றும், ஆழமாகும் அரசின் டிஜிட்டல் முயற்சிகள் ஆகியவை இதற்கு உந்துசக்தியாக இருக்கும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சந்தையில் 75 சதவீதம் உலக நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், அடுத்த பத்தாண்டுகள் முற்றிலும் மாறுபட்ட விதி புத்தகத்தை கொண்டிருக்கும். இதில் இந்திய ஸ்டார்ட் அப்கள் வலுவான சேவை மற்றும் புதுமையாக்கம் சார்ந்த இந்தியாவுக்கான தீர்வுகளை உருவாக்கும்.
“நம்முடைய உள்நாட்டு சந்தையில் வாய்ப்பு பெரிதாகவும், இன்னமும் பூர்த்தி செய்யப்படாததாகவும் இருக்கிறது. இந்திய சாஸ் நிறுவனங்களைப் பொருத்தவரை, ஏஐ நுட்பம் கொண்டு உருவாக்கப்படக்கூடிய உலக அளவில் வளர்ச்சி பெறக்கூடிய உள்ளூர் தீர்வுகளை உருவாக்கும் திறன், இந்திய தனித்தன்மை கொண்ட சவால்களை எதிர்கொள்ளும் குறிப்பிட்ட நோக்கிலான சாஸ் சேவைகள் ஆகியவை சார்ந்து வெற்றி அமையும்,” என சாஸ்பூமி சி.இ.ஓ அவினாஷ் ராகவா கூறியுள்ளார்.
அதிகரிக்கும் நிறுவனங்கள் சார்ந்த ஏஐ மற்றும் கிளவுட் ஏற்பு சந்தை விரிவாக்கத்திற்கு 35 பில்லியன் டாலர் பங்களிப்பு செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கை தெரிவிக்கிறது.
பி.எப்.எஸ்.ஐ., சுகாதார நலன், உற்பத்தி ஆகிய துறைகளில் உள்ள நிறுவனங்கள் ஏஐ சார்ந்த தானியங்கிமயம் மற்றும் கிளவுட் செயல்திறனில் முதலீடு செய்து மென்பொருள் தேவையை பெருக்கி வருகின்றன. இதனிடையே, டிஜிட்டல் முதன்மை நிறுவனங்கள் மென்பொருள் செலவை தற்போதைய 4.6 பில்லியன் டாலரில் இருந்து 2035ல் 26 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உலக தொழில்நுட்ப போட்டியில் இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நாடாக இருக்கமுடியாத ஒரு கட்டத்தில் நுழைகிறோம். எதிர் உள்ள 100 பில்லியன் டாலர் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் அணுகுமுறையை மறுவரையறை செய்ய வேண்டும்; உத்திகளை மாற்றி அமைத்து, மேலும் சிறந்த முறையில் கூட்டு முயற்சியில் ஈடுபட்டு, நீண்ட நீடித்த வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று சாஸ்பூமி தன்னார்வலர் மற்றும் முதலீட்டாளரான கவுரிசங்கர் நாகராஜன் கூறினார்.
இந்த சந்தை விரிவாக்கத்தில் எஸ்.எம்,பிகள் முக்கிய பங்கு வகிக்கும். குறிப்பிட்ட பிரிவு சாஸ் தீர்வுகள் 13 பில்லிடன் டாலர் வாய்ப்பை கொண்டுள்ளன. சைபர் பாதுகாப்பு சந்தை தற்போதைய 1.6 பில்லியன் டாலரில் இருந்து 2035ல் பத்து பில்லியன் டாலராக வளரும். அரசும் தனது மென்பொருள் ஏற்பை அதிகரிக்க உள்ளது. அரசு மென்பொருள் செலவு 2035ல் 8 பில்லியன் டாலராக அதிகரிக்கும். டிபிஐ முயற்சிகள் மற்றும் நெறிமுறைகள் பின்பற்றுவது இதற்கு முக்கிய காரணங்கள்.
“இலட்சியத்தை சமரசம் செய்யாமல் செயல்திறனை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு தான் சாஸ் எதிர்காலம் உள்ளது. வலுவான அடிப்படைகள் கொண்ட, மூலதன செயல்திறம் மிக்க நிறுவனங்களையே முதலீட்டாளர்கள் நாடுகின்றனர்,” என 1லேட்டைஸ் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.அமர் சவுத்ரி கூறினார்.
ஆங்கிலத்தில்: திம்மையா பூஜாரி, தமிழில்: சைபர் சிம்மன்

ஏஐ முதன்மை நிறுவனங்களை ஊக்குவிக்கும் 'BoomiAI' மேடையை அறிமுக செய்தது SaasBoomi
Edited by Induja Raghunathan