திருமணத்திற்குப் பிறகு யுபிஎஸ்சி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள டாக்டர் புஷாரா பானோ!
மன உறுதி, கடின உழைப்பு, முறையான திட்டமிடல் ஆகியவையே வெற்றியின் சீக்ரெட் என்கிறார் டாக்டர் புஷாரா பானோ.
பல பெண்களின் ஒருமித்த கருத்து ‘கல்யாணத்திற்குப் பிறகு என் கனவு தடைபட்டுவிட்டது’ என்பதே. பெண்கள் படிப்பு முடித்து, தங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் நுழைந்து, ஓரளவிற்கு அனுபவமும் பெற்று, அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரைவாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும்போது, திருமணம் அவர்களுக்கு வேகத்தடையாக மாறிவிடுகிறது.
திருமணத்திற்குப் பிறகும் சில பெண்களுக்கு சரியான சூழல் அமைந்துவிடுகிறது. இவர்களால் புகுந்த வீட்டினரின் ஆதரவுடன் தங்கள் லட்சியங்களை அடைந்துவிடமுடிகிறது. ஆனால், பலரது வாழ்க்கையில் திருமணம் தற்காலிகமாகவாவது ஒரு முட்டுக்கட்டையைப் போட்டுவிடுவதே நிதர்சனம்.
மன உறுதியுடன் கடினமாக உழைத்தால் எப்படிப்பட்ட சூழலிலும் கனவை நனவாக்கிக் கொள்ளலாம் என நிரூபித்திருக்கிறார் டாக்டர் புஷாரா பானோ.
திருமணத்திற்குப் பிறகு தேர்வு
புஷாரா பானோ திருமணத்திற்குப் பிறகு நான்கு முறை யுபிஎஸ்சி சிவில் சரிவீஸ் தேர்வு எழுதியிருக்கிறார். இதில் இரண்டு முறை தகுதி பெற்றிருக்கிறார்.
டாக்டர் புஷாரா சவுதி அரேபியாவில் இருந்தார். அங்கு உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்,
“என் உழைப்பு என் நாட்டிற்கு பலனளிக்கவேண்டும் என்று விரும்பினேன். சவுதி அரேபியாவில் தொடர்ந்து வேலை செய்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று எத்தனையோ பேர் என்னிடம் எடுத்து சொன்னார்கள். ஆனால் என் நாட்டு மக்களுக்கு நான் சேவை செய்யவேண்டும் என்கிற முடிவில் நான் உறுதியாக இருந்தேன். என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பினேன்,” என்கிறார் டாக்டர் புஷாரா.
கனவை நனவாக்கிக்கொள்ள குடும்பமோ, திருமணமோ குழந்தைகளோ ஒருபோதும் தடையாக இருக்காது என்பது இவரது திடமான நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் இவரை உயர்த்தியுள்ளது.
2017ம் ஆண்டு இவர் முதல் முறையாக முதல்நிலைத் தேர்வு எழுதினார். ஆனால், அதில் தேர்ச்சி பெறவில்லை. இருப்பினும், இந்த பயிற்சியும் அனுபவமும் 2018-ம் ஆண்டு இவர் எழுதிய தேர்விற்குக் கைகொடுத்தது. 2018ம் ஆண்டு இவர் முதன்மைத் தேர்விற்கும் நேர்காணலுக்கும் சென்றிருந்தார். அந்த சமயத்தில் இவருக்கு முதல் குழந்தை பிறந்திருந்தது. இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தார்.
குடும்பம் – வேலை சமநிலை
டாக்டர் புஷாரா பானோ உத்திரப்பிரதேசத்தில் உள்ள கன்னோஜ் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரது கொள்ளுத்தாத்தா இந்திய காவல்துறையில் எஸ்பி பொறுப்பில் இருந்தவர். இதனால் இளம் வயதிலேயே புஷாராவின் மனதில் சிவில் சர்வீஸ் விதை விதைக்கப்பட்டது.
“வீடு, குழந்தைகள், படிப்பு, தேர்வு, வேலை என அனைத்தையும் சமாளிப்பது சவாலான விஷயம்தான். மறுப்பதற்கில்லை. ஆனால் முடியாத விஷயம் இல்லை. முறையாக திட்டமிட்டு ஒரு நாளைத் தொடங்கினோமானால் அனைத்தும் சாத்தியம்,” என்று உற்சாகமாக கூறுகிறார்.
இவை வெறும் வார்த்தைகள் அல்ல. இவரது அனுபவம். முதல்நிலை தேர்வு தினத்திற்கு முந்தைய நாள் புஷாராவின் நெருங்கிய உறவினர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் அவரைப் பெரிதும் உலுக்கியது.
இரவு முழுவதும் கண் விழித்திருந்த புஷாரா மறுநாள் தேர்வு எழுதியிருக்கிறார். வெறும் 0.75 மதிப்பெண்களில் தேர்ச்சி பெறவில்லை. ஆனாலும் மனம் தளராமல் அடுத்த ஆண்டு தனது முயற்சியை இரட்டிப்பாக்கினார்.
முறையான திட்டமிடல்
டாக்டர் புஷாரா பல மணி நேரம் படிக்கும் சுபாவம் கொண்டவர் அல்ல.
“நான் விரைவாகப் புரிந்துகொள்வேன். காலையில் 6 மணிக்கு எழுந்து படிக்க ஆரம்பித்துவிடுவேன். காலை நேரத்தில் மூன்று மணி நேரம் படிப்பேன். வேலை நேரத்தில் ஓய்வு கிடைக்கும்போதும் படிப்பேன். வீடு திரும்பியதும் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு இரவு 8 மணி முதல் 11 மணி வரை படிப்பேன்,” என்கிறார்.
இப்படி முறையாக திட்டமிடுவதால் தினமும் ஆறு முதல் ஏழு மணி நேரம் படிப்பிற்காக செலவிட முடிகிறது. இந்த நேரத்தை வீணாக்காமல், கவனம் சிதறாமல் பார்த்துக்கொண்டாலே போதுமானது என்கிறார்.
முறையான திட்டமிடல் என்பது தேர்விற்கு மட்டுமல்ல வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நிச்சயம் கைகொடுக்கும் என்பது இவரது திடமான நம்பிக்கை.
“சமூகத்தின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை. உங்கள் இலட்சியத்தை அடைய திருமணம், குழந்தைப்பேறு இப்படி எதுவுமே தடையாக இருக்காது,” என்கிறார்.
இணையத்தில் ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடப்பதால், ஆன்லைனில் உள்ளடக்கங்களைத் தேடும்போது மிகுந்த கவனத்துடன் தகவல்களை திரட்டவேண்டும்.
நோட்ஸ் எடுக்கும்போது மற்றவர்களின் முறையைப் பின்பற்றாமல், உங்களுக்கு ஏற்ற வகையில் எடுத்துக்கொள்ளவேண்டும். தகவல்களின் அளவு முக்கியமில்லை, தரம் மட்டுமே முக்கியம் என்பதை நினைவில்கொள்ளவேண்டும். இவையே டாக்டர் புஷாராவின் ஆலோசனைகள்.