கால் டாக்ஸி ஓட்டுநர் டூ விவசாயி வரை; வறுமையிலும் தந்தைகளை தலைநிமிர வைத்த 10ம் வகுப்பு மாணவிகள்!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. வழக்கம் போலவே அரசுப் பள்ளியில் படித்தவர்கள், வறுமையான குடும்பச் சூழ்நிலையில் பயின்ற மாணவிகள் பலரும் அதிக மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. வழக்கம் போலவே அரசு பள்ளியில் படித்தவர்கள், வறுமையான குடும்ப சூழ்நிலையில் பயின்ற மாணவிகள் பலரும் அதிக மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
விவசாயியின் மகள், கால் டாக்ஸி டிரைவர் என கஷ்டப்பட்டு படிக்க வைத்த தந்தைகளை மகள்களின் சாதனைகள் குறித்து பார்க்கலாம்...
விவசாயி மகள் படைத்த சாதனை:
பத்தாம் வகுப்பில் 496 மதிப்பெண்கள் பெற்று விவசாயி மகள் யுவஸ்ரீ சாதனை படைத்துள்ளர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஆவரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகள் யுவஸ்ரீ, பாலசுப்பிரமணியன் விவசாயம் செய்து வருகிறார்.
இவருக்கு விவசாயம் மூலம் கிடைக்கும் வருவாய் குறைவாக இருந்தாலும், மகளை எவ்வித குறையும் இல்லாமல் தனியார் பள்ளியில் படிக்க வைத்துள்ளார். அப்பாவின் கஷ்டத்தை உணர்ந்து படித்த யுவஸ்ரீயும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து ராமநாதபுரம் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களில் தலா 99 மதிப்பெண்கள் என மொத்தம் 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். விவசாயி மகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 496 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளதை மாணவியின் பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் இனிப்புகள் வழங்கி பாராட்டி வருகின்றனர்.
கனவை நனவாக்கிய டாக்ஸி ஓட்டுநர் மகள்:
சென்னையில் அப்பாவின் கனவை நினைவாக்கி பெற்றோரை ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்துள்ளார்.
சென்னை அசோக்நகரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்துவருகிறார் மாணவி காவ்யா. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 479 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்துள்ளார்.
எனது கனவை நிறைவேற்றிய மகள் என்ன படிக்க வேண்டும் என ஆசைப்பட்டாலும் அதனை நிறைவேற்றுவேன் என காவ்யாவின் தந்தை தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,
“கார் டிரைவரின் மகளான எனக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடிக்க வேண்டும் என நினைத்தேன். நான் பள்ளியில் முதல் மதிப்பெண்கள் பெற வேண்டும் என அப்பா தொடர்ந்து உற்சாகப்படுத்தி வந்தார். இன்று எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு கல்லூரி பேராசிரியர் ஆக வேண்டும்,” என கனவையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர் மகள்:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசுப் பள்ளியில் படித்த ஆட்டோ ஓட்டுனரின் மகள் 10ம் வகுப்பு அரசு பொது தேர்வில் மாவட்டத்தில் 493 மதிப்பெண் பெற்று முதல் இடம்பிடித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நீயூ வசந்த நகரில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் விஜயக்குமார் மற்றும் ஜெகதா தம்பதியினர் மகள் இலக்கியா மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியில் படித்து வந்தார்.
இன்று 10வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. இதில் 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று சிவகங்கை மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார். இதில் தமிழ்-98 ஆங்கிலம்-98, கணிதம்- 100 அறிவியலில்-100 மற்றும் ஆகிய சமூக அறிவியல்- 97 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தந்தை இறந்த சோகத்திலும் சாதனை:
திருக்கோவிலூரில் தந்தை உயிரிழந்த நிலையில் தேர்வு எழுத சென்ற பத்தாம் வகுப்பு மாணவி 428 மதிப்பெண்கள் பெற்றது குடும்பத்தினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட தாசர்புரம் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ்- பெயிண்டர், பாப்பாத்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்களும், திலகா என்ற ஒரு மகளும் உள்ளனர். திலகா அதே பகுதியில் உள்ள டேனிஷ் மிஷன் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், முருகதாஸ், பெயிண்டர், உடல்நலம் குன்றி கடந்த ஏப்ரல் மாதம்10ஆம் தேதி என்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்நிலையில், முருகதாஸின் மகள் திலகா தனது தந்தை முருகதாஸ் உயிரிழந்தார். தனது தந்தையின் சடலம் வீட்டில் இருக்கும் பொழுதே அன்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்வும் அதன் தொடர்ச்சியாக மற்ற தேர்வுகளும் எழுதி இருந்தார். இந்த நிலையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், டேனிஷ் மிஷன் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 428 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளார்.
பள்ளி மாணவி திலகா கூறுகையில்,
“எனது தந்தை என்னை எப்போதுமே நன்றாக படிக்க வேண்டும் அரசு வேலைக்கு போக வேண்டும் எனக்கூறுவார். அதுதான் என்னுடைய ஆசை என என்னுடைய அப்பா அடிக்கடி சொல்லி வந்தார். அவர் ஆசையை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து முயற்சி செய்வேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
தந்தை உயிரிழந்த சோகத்திலும் மகள் தொடர்ச்சியாக தேர்வு எழுதி 428 மதிப்பெண் பெற்றது இப்பகுதி மக்களிடையே வரவேற்பையும், நிகழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.