முதலீடே இல்லாமல் வாட்ஸ் அப் மூலம் ஆர்கானிக் பொருட்கள் விற்பனை - மாதம் ரூ.1 லட்சம் ஈட்டும் காங்கேயம் பெண்!
கடையோ, பெரிய உற்பத்தி ஆலையோ தேவையில்லை. வீட்டில் இருந்து கொண்டே ஆரோக்கியமான விளைநிலப் பொருட்களை புத்துணர்ச்சியோடு வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதை தொழிலாக செய்து, மாதம் ரூ.1 லட்சம் வருமான ஈட்டுகிறார் பூர்ணிமா மோகன்.
முதலீடே இல்லாத தொழில் அதில் ஜெயிக்கனுங்குறதுல பூர்ணிமா மோகனுக்கு ரொம்ப இஷ்டம். சொந்த ஊர் கரூர், திருமணத்துக்கு அப்புறம் கணவரோட ஊரான திருப்பூர் மாவட்டம் காங்கேயத்துல செட்டில் ஆகி இருக்காங்க. பட்டப்படிப்பு படிச்சிட்டு பன்னாட்டு நிறுவனத்துல வேலையில இருந்த பூர்ணிமா திருமணத்துக்கு அப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டு அந்த வேலைய செஞ்சிருக்காங்க.
“கல்யாணமாகி காங்கேயம் வந்ததுக்கு அப்புறம், வேலையை தொடர முடியாத சூழ்நிலை இருந்துச்சு. ஷிப்ட் மாறி மாறி வேலை செய்ததால உடல் ஆரோக்கியத்துலயும் பிரச்னை ஏற்பட்டுச்சு. அதனால சொந்தமாக தொழில் தொடங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து வேலையை விட்டுவிட்டேன்,” என்று தான் தொழில்முனைவராக பரிணாமித்ததை பற்றி யுவர் ஸ்டோரி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் பூர்ணிமா.

பூர்ணிமா மற்றும் தனசேகர் - நிறுவனர்கள், Eyarkai Uzhavan
தொழில்முனைவர் ஆனது எப்படி?
சின்ன வயசுலேருந்து பல கஷ்டங்கள பார்த்து வளர்ந்தவர். அப்பா, அம்மா சொந்தமாக புடவை விற்பனை தொழில் செய்து, அதில் நஷ்டத்தை மட்டுமே பார்த்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் வேலை தேடி திருப்பூருக்கு வந்து இரண்டு பேரும் கம்பெனிகளில் வேலைக்கு சேர்ந்துவிட்டனர். அதனால பூர்ணிமா அரசுப் பள்ளியில படித்து காலேஜ் சேர்ந்து பட்டம் பெற்றுள்ளார்.
“காலேஜ் முடிச்சதுமே சென்னையில ஒரு நிறுவனத்துல வேலைக்கு சேர்ந்தேன். MNC வேலைய பாத்துகிட்டே கிடைக்கிற நேரத்துல சொந்தமா ஒரு தொழில் செய்யலாம்னு நினைச்சேன். அப்பா அம்மாவ தோற்கடிச்ச அதே புடவை பிசினஸ கையில எடுத்தேன். ஆனா அதிக முதலீடு இல்லாம வாட்ஸ் அப் க்ரூப்லயே சேலைகள விற்பனை செய்ய ஆரம்பிச்சேன்னு,” அவங்களோட முதல் தொழில்முனைவு அனுபவத்த பகிர்ந்தார் பூர்ணிமா.
இப்போ எப்படி மார்க்கெட்டிங் தளமா இன்ஸ்டாகிராம் இருக்கோ அப்படி வாட்ஸ் அப் பிசினஸ்க்கு உதவின காலகட்டம் அது. Clothing orbitz-ங்குற பேர்ல அவங்க செஞ்ச அந்த தொழில் மாசம் ரூ.20,000 வரைக்கும் பூர்ணிமாவுக்கு லாபம் தந்திருக்கு.
ஏற்கனவே தொழில் செஞ்ச அனுபவம் இருந்ததால திருமணத்துக்கு அப்புறம் வேலைய விட்டப்ப மறுபடியும் clothing orbitz பெயரில் ஆன்லைனில் புடவை விற்பனையை செய்யத் தொடங்கியுள்ளார். ஒரு பிரேக்குக்கு அப்புறம் தொடங்கினாலும் அவர் எதிர்பார்த்த லாபத்தை அப்போதும் பெற்றிருக்கிறார்.
“ஒரு வருடம் clothing orbitz சிறப்பா செயல்பட்டுச்சு அதுக்கப்புறம் மகப்பேறு அடைந்த போது உடல்நிலை சரியாக ஒத்துழைக்காததால் அந்த தொழிலையும் விட்டுவிட்டேன். நான் ஒரு ஆளாக அந்தத் தொழிலை செய்து வந்தேன், அதனால் நான் இல்லாமல் அந்த தொழில் எப்படி இயங்கும் என்பதை பற்றி யோசிக்காமல் விட்டுவிட்டேன். இதன் விளைவாக, என்னைத் தவிர வேறு யாரும் அதை செய்ய முடியாமல் அதை நிறுத்தவேண்டியதாகிவிட்டது,” என்று கூறுகிறார் பூர்ணிமா.
இயற்கை பொருட்கள் மீதான ஆர்வம்
கர்ப்பமான 3 மாதத்தில் இருந்து மகன் பிறந்த 1 வருஷம் வரை எந்த வேலையும் செய்யாமல் முடங்கிப் போய்விட்டேன். மறுபடியும் ஒரு பிரேக் என்னோட career எப்படி சரிசெய்யலாம்னு யோசிச்சுகிட்டே இருந்தேன். எந்த முதலீடும் இல்லாமல் தொழில் பற்றிய எந்த புரிதலும் இல்லாமலே clothing orbitzஐ லாபகரமான தொழிலாக செய்ய முடிந்தது. அதனால் மீண்டும் அதையே தொடங்கி வெற்றி காண முடியும் என்று நினைத்தேன். ஆனால், எனக்கு கிடைத்த சொந்த அனுபவம் என்னுடைய தொழில்முனைவு பாதையை மாற்றியது, என்கிறார்.
பூர்ணிமாவின் கணவர் தனசேகர் வீட்டில் விவசாயமே பிரதான தொழில். தனசேகர் பொறியியல் படித்திருந்தாலும் விவசாயத் தொழிலையே செய்து வந்தார். பால் கறந்து விற்பனை செய்வது, தோட்டத்தில் விளையும் காய்கறிகளை எடுத்துச் சென்று விற்பனை செய்வது என சிறிய அளவில் செய்து வந்தார்.

திருமணமான புதிதில் இந்த வாழ்க்கை முறை எனக்கு ஒத்துவராது என்று பலரும் சொன்னார்கள். ஆனால், என்னுடைய கணவர் எனக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு இந்த வாழ்க்கை முறையும் ஆரோக்கியமான உணவு முறையும். என்னுடைய கர்ப்ப காலத்தில் நான் இதை உணர்ந்தேன்.
“திருமணத்திற்கு முன்னர் எனக்கு மாதவிடாய் பிரச்னை இருந்தது, ஆனால் எந்த மருத்தவ சிகிச்சையும் இல்லாமல் காங்கேயத்தில் கிடைத்த வாழ்க்கைச் சூழல் மற்றும் உணவு முறையால் என்னுடைய உடல் தானாகவே சீராகி இயற்கையாகவே நான் கருவுறும் நிலையை அடைந்தேன். நஞ்சில்லா உணவுடைய பயன் என்ன என்று அப்போது எனக்கு புரிந்தது. இதையே ஏன் நாம் ஒரு தொழிலாக தொடங்கக் கூடாது என்ற எண்ணம் அப்போது தான் எழுந்தது,” என்று சொல்கிறார்.
நண்பர்கள், உறவினர்கள் என கேட்பவர்களுக்கு மட்டும் விளைபொருட்களை தனசேகர் விற்பனை செய்து வந்துள்ளார். Clothing orbitz போல இயற்கை உணவுப் பொருட்களை ஏன் விற்பனை செய்யக் கூடாது என்ற எண்ணம் மேலோங்க கடந்த ஆண்டு மே மாதம் 'இயற்கை உழவன்' (fr.Eyarkai uzhavan) தொடங்கியுள்ளனர். நிறுவனராக தனசேகரன் இணை நிறுவனராக பூர்ணிமா மோகன் என இருவர் மட்டுமே வாட்ஸ் அப் மூலம் ஏற்கனவே இருந்த வாடிக்கையாளர்கள் தொடர்பை வைத்து தொழிலைத் தொடங்கியுள்ளனர்.

இயற்கை உழவன் குழுவினர்
ஆரம்பத்தில் எங்களிடம் உள்ள விளைபொருட்களை மட்டுமே விற்பனை செய்தோம். காய்கறிகள், பாசிப்பயறு, உளுந்து, வேர்க்கடலை, எள் என ஐந்து பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கினோம். மூலப்பொருட்களாக இல்லாமல் எள் உருண்டை, சத்துமாவு உருண்டை, வேர்க்கடலை உருண்டை, நெய், பனீர் என மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக வாடிக்கையாளர்கள் எங்களிடம் கேட்கத் தொடங்கினர்.
"வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு பொருட்களாக உருவாக்கத் தொடங்கி இப்போது இயற்கை உழவனில் 160 பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எங்களின் சொந்த நிலத்தில் விளையும் 30 சதவிகித பொருட்களோடு தேவைக்கு ஏற்ற மற்ற விவசாயிகளிடம் இருந்து விளை பொருட்களை வாங்கி வந்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறோம். எங்களின் தனித்துவமே ஆர்டர்கள் வரவர பொருட்களை உற்பத்தி செய்து அதன் மணம், புத்துணர்ச்சி, மாறுவதற்குள் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே ஆகும்," என்று மகிழ்கிறார் பூர்ணிமா.
தொடங்கிய 8 மாதத்தில் மாதத்திற்கு 300 பொருட்கள் விற்பனை என தோராயமாக 1 லட்சம் ரூபாய் வருமானம் பெற்று தருகிறது இயற்கை உழவன். இரண்டு பேர் மட்டும் சேர்ந்து தொடங்கினோம் இப்போது கூடுதலாக நான்கு பேரை எங்களின் குழுவில் இணைத்துள்ளோம்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்யாமலே இந்த அளவிற்கு வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளோம், எங்களின் குழுவினருக்கு போதுமான பயிற்சி அளித்து தரம் மற்றும் பொருட்களின் ஆரோக்கியம் குறையாமல் அப்படியே வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
"அடுத்த கட்டமாக பெரிய உற்பத்தி இடம், அதற்கான இயந்திரங்கள் என அரசு திட்டங்கள் மூலம் நிதி பெற்று விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். காங்கேயத்தில் ஒரு outlet தொடங்கவும் திட்டமிட்டிருக்கிறோம். இந்த விரிவாக்கத்திற்கு பிறகு டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை அதிகப்படுத்தினால் நிச்சயமாக வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் என்று நம்புவதாகச் சொல்லும் பூர்ணிமா விரைவில் இணையதளத்தில் ஆர்டர் புக்கிங் வசதியை ஏற்படுத்தவும் முயற்சிகளை செய்து வருவதாக தெரிவித்தார்."

இயற்கை உழவன் தொழிலைத் தொடங்கும் போது 50 பேருக்காவது வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது, அதில், 10 சதவிகிதம் அடைந்திருக்கிறேன். எதிர்காலத்தில் அனைத்தும் சாத்தியமாகும். FSSAI-வின் உரிமம் பெற்றதையடுத்து trademark வாங்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளோம்.
2 நாட்களுக்குள் பயன்படுத்தக்கூடிய சீம்பால், முளைகட்டிய கருப்பு உளுந்து கஞ்சி மிக்ஸ், வெயிட் லாஸ் மிக்ஸ், நவதானிய சத்துமாவு உள்ளிட்டவை எங்களுடைய தனித்துவமான தயாரிப்புகள். எதிர்காலத்தில் EUgreens என்கிற பெயரில் கீரை வகைகள் மற்றும் பால் சார்ந்த பொருட்களை காங்கேயம் சுற்றுவட்டார மக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் டெலிவரி செய்ய இலக்கு வைத்துள்ளோம், என்று கூறுகிறார் தொழில்முனைவில் தீவிரமாக இருக்கும் பூர்ணிமா.
இவரின் தனித்துவமான பொருட்களை வாங்க விரும்புபவர்கள் 9578055449 என்கிற வாட்ஸ் அப் எண்ணில் ஆர்டர் செய்யலாம்.

முதலீடே இல்லாமல் ஃபேஸ்புக்கில் தொடங்கிய தொழில்: ஆண்டுக்கு ரூ.3 கோடி டர்ன்ஓவர் செய்யும் 29 வயது பிரியங்கா!