50 ஆண்டுகளுக்குமுன் திருடிய ரூ.37.50; இலங்கைக்கு தேடிச் சென்று 3 லட்சமாக திருப்பிக் கொடுத்த கோவை தொழிலதிபர்!
50 வருடங்களுக்கு முன்பு தான் சிறுவனாக இருந்தபோது, இலங்கையில் மூதாட்டி ஒருவரிடம் திருடிய ரூ.37.50 பணத்தை, தற்போது அவரது குடும்பத்தினரைத் தேடிக் கண்டுபிடித்து, ரூ. 3 லட்சமாகத் திருப்பிக் கொடுத்த கோவை தொழிலதிபரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன் செய்த தவறு தன்னைத் தவிர யாருக்கும் தெரியாது எனினும், மனசாட்சிக்கும், கடவுளுக்கும் பயந்து, அதற்கான பிராயச்சித்தம் தேடுபவர்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக கோவையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சுமார் 50 வருடங்களுக்கு முன், தான் சிறுவனாக இருந்தபோது, விளையாட்டுத்தனமாக பக்கத்து வீட்டு பாட்டியிடம் திருடிய 37.50 ரூபாய் தனது மனதில் நெருடலாகவே இருக்க, தற்போது அந்த பாட்டியின் உறவினர்களைக் கண்டுபிடித்து, தான் திருடிய பணத்தை பல மடங்காகத் திருப்பிக் கொடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த ரஞ்சித் என்ற தொழிலதிபர்.
என்ன நடந்தது?
இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் பணியாளர்களாக இருந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி எழுவாய். இவர்கள் 2 பேரும் 1970ம் ஆண்டில் அங்கிருந்த வீட்டைக் காலி செய்தனர். அப்போது தங்களது பக்கத்து வீட்டில் இருந்த 10 வயது சிறுவனான ரஞ்சித்தை உதவிக்காக அழைத்துள்ளனர்.
வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்த உதவிய ரஞ்சித், ஒரு தலையணையின் அடியில் ரூ.37.50 காசு இருப்பதைப் பார்த்துள்ளார். தனது குடும்பம் வறுமையில் இருந்ததால், அந்தப் பணத்தைப் பார்த்ததும் ரஞ்சித்தின் மனது சஞ்சலமடைந்துள்ளது. சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதிக்குத் தெரியாமல் அந்தக் காசை அவர் திருடி வைத்துக் கொண்டார்.
அவர் கண் முன்னேயே அந்தக் காசைக் காணவில்லை என எழுவாய் தேடியுள்ளார். ஆனாலும், தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல், அமைதியாக இருந்துள்ளார் ரஞ்சித். இந்த சம்பவம் நடந்து சில வருடங்களுக்குப் பிறகு, 1977ம் ஆண்டு தனது 17 வயதில் வேலை தேடி தமிழகம் வந்து விட்டார் அவர்.
தொழிலதிபரான ரஞ்சித்
கோவைக்குச் சென்ற ரஞ்சித், ஆரம்பத்தில் பல வேலைகளைச் செய்து வாழ்க்கையை ஓட்டியுள்ளார். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக தனது வேலை அனுபவத்தில் இருந்து சமையல் தொழிலைக் கற்றுக் கொண்டு, தானே சொந்தமாக கேட்டரிங் தொழில் தொடங்கியுள்ளார். அவரது கடின உழைப்பிற்குப் பலனாக சில ஆண்டுகளில் வெற்றிகரமான தொழிலதிபராகி விட்டார் ரஞ்சித்.
தற்போது கோவை ரத்னகிரி பகுதியில் கேட்டரிங் நிறுவனத்தை நடத்தி வரும் அவருக்கு, தனது சிறுவயதில் எழுவாய் வீட்டில் திருடிய சம்பவம் மனதை உறுத்திக் கொண்டே இருந்துள்ளது. எனவே, அந்தப் பணத்தை எப்படியாவது திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என அவர் முடிவு செய்துள்ளார்.
கடனை திருப்பிக் கொடுத்த ரஞ்சித்
அதன் தொடர்ச்சியாக, சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியினரின் குடும்பத்தைப் பற்றி அவர் விசாரித்துள்ளார். அப்போது அந்த தம்பதி இறந்து விட்டதும், அவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்களிடம் தான் திருடிய பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார் ரஞ்சித். அதன் தொடர்ச்சியாக,
சமீபத்தில் இலங்கை சென்ற ரஞ்சித் அங்கிருந்த சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியின் 3 மகன்களின் குடும்பத்துக்கு தலா ரூ.70 ஆயிரம் வழங்கினார். கூடவே, அவர்கள் குடும்பத்திற்கென புத்தாடைகளும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
மேலும், சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியின் மகள் செல்லம்மாள் திருச்சியில் இருப்பதை அறிந்த ரஞ்சித், அங்கும் நேரடியாகச் சென்று அவருக்கு புத்தாடை வழங்கியதோடு ரூ.70 ஆயிரத்தை வழங்கியுள்ளார்.
மகிழ்ச்சியான தருணம்
“எனது 17 வயது வரை நான் இலங்கையில் வசித்து வந்தேன். அப்போது பக்கத்து வீட்டு பாட்டியின் 37.50 ரூபாய் பணத்தை திருடி விட்டேன். அந்தப் பணத்தை நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து தின்பண்டம் வாங்கி செலவழித்தோம். பின்னர், சில ஆண்டுகளில் இங்கு தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வந்து விட்டோம். ஒரு நாள் பைபிளை படித்து கொண்டிருந்த போது, "துர்மார்கன் கடன் வாங்கி செலுத்தாமல் போகிறான்; நீதிமான் அந்த கடனை செலுத்துகிறான்," என்ற வாசகத்தை படித்தேன். அப்போது எனது மனசாட்சி உறுத்தியது. எனவே, நான் வாங்கிய அனைத்து கடன்களோடு, திருடிய பணத்தையும் திருப்பி செலுத்துவது என முடிவு செய்தேன்.“
நான் பணத்தை அவர்களின் வாரிசுகளுக்கு கொடுத்த தருணம் எதிர்பாராத ஒன்று. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருவருக்கொருவர் பார்த்தபோது பண சந்தோஷத்தை விட, மன சந்தோஷம் ஜாஸ்தியாக இருந்தது. அதனை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது, என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ரஞ்சித்.
மேலும், சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும், தான் அந்தப் பணத்தைத் திரும்பித்தர ஒரு காரணமாக அமைந்ததாகக் கூறுகிறார். அதோடு, தற்போது அந்தக் குடும்பத்தினர் தங்களது குடும்ப உறவுகள் ஆகி விட்டதாகவும் ரஞ்சித் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
கொள்ளுப்பேத்தி நன்றி
இப்படி 50 ஆண்டுகள் கழித்து தன் கொள்ளு பாட்டியிடம் திருடிய பணத்தை ரஞ்சித் திருப்பிக் கொடுத்திருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்த, கோவையில் வசித்து வரும் எழுவாயின் கொள்ளுப்பேத்தி பவானி, நேரில் சென்று ரஞ்சித்தைச் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
“எங்கள் பாட்டியிடம் அந்தக் காலத்தில் திருடிய பணத்தை இப்போது எங்களைத் தேடிக் கொடுத்துள்ளதைக் கேட்டு நான் ரொம்பவே சந்தோசப்பட்டேன். இந்த காலத்தில் இப்படியொரு ஆளா? என ஆச்சர்யமாக இருந்தது,” என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் பவானி.
இப்படியாக இலங்கையில் திருடிய 37.50 ரூபாய்க்காக 50 ஆண்டுகள் கழித்து, அந்தப் பணத்தை இழந்த தம்பதியின் வாரிசுகளுக்கு ரூ.3 லட்சத்தை ரஞ்சித் திருப்பித் தந்த சம்பவம் மக்களை நெகிழ வைத்துள்ளது.