'மகா கும்பமேளா 2025' - பக்தர்களை ஏமாற்ற அரங்கேறிய மெகா மோசடிகள் பட்டியல்!
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ஆம் தேதி வரை ‘மகா கும்பமேளா - 2025’ வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில், இதில் மக்களின் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து நிதி ஆதாயம் பார்த்துள்ளனர் பல மோசடியாளர்கள்.
மகா கும்பமேளா சிறப்பு என்ன?
கோள்களின் சுழற்சியை வைத்து கும்பமேளா திருவிழா கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மக்கள் புனித நீராடுவது வழக்கம். மதம் சார்ந்து உலக அளவில் நடைபெறும் பெரிய திருவிழாக்களில் இதுவும் ஒன்று. கடந்த 1881-ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் 144 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 'மகா கும்பமேளா' கொண்டாடப்பட்டது. இதில் சுமார் 65 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி உள்ளதாக தகவல்.
பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள், மக்கள் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் மக்கள் என பலரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

4,000 ஹெக்டேர் பரப்பளவில் மக்களுக்கு வேண்டிய தங்குமிடம், கழிவறை போன்ற வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக சிறப்பு கூடாரங்கள் அமைக்கப்பட்டன. பல கோடி ரூபாய் செலவில் இதற்கான நிதியை அரசு ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அரசு, வணிக நிறுவனங்கள், உள்ளூர் வியாபாரிகள் என பலரது வருவாய் பெருகியது என்ற தகவலும் கிடைத்துள்ளது.
அதே நேரத்தில், கூட்ட நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பு அசம்பாவிதங்களும் வருத்தம் தரும் விதமாக அமைந்தது. இந்த சூழலில்தான் மகா கும்பமேளாவை பயன்படுத்தி மெகா மோசடிகளை அரங்கேற்றி மோசடியாளர்கள் சிலர் ஆதாயம் அடைந்துள்ளனர்.
மகா கும்பமேளாவில் நடைபெற்ற மோசடிகள்
போலி ஆன்லைன் விற்பனை: பிரபல சைபர் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலின்படி, கங்கை நீர், ருத்ராட்ச மணிகள், யாகம் செய்யப்பட்ட புனித சாம்பல் போன்றவற்றை விற்பனை செய்வதாக சொல்லி ஆன்லைன் தளங்கள் மூலம் ஆர்டர் பெறப்பட்டுள்ளது. சிலர் அந்த தளங்களில் தங்கள் ஆர்டருக்கான பணமும் செலுத்தியுள்ளனர். இருப்பினும், பணம் செலுத்தியவர்களுக்கு அதை வழங்காமல் அந்த தளங்கள் இருந்துள்ளன. இது குறித்து காவல் துறை விசாரித்து வருகிறது.
பெண்கள் நீராடும் வீடியோ: மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் பெண்கள் நீராடும் மற்றும் உடைமாற்றும் வீடியோவை பேஸ்புக், டெலிகிராம், வாட்ஸ்அப் சமூக வலைதளங்களில் விற்பனைக்கு கிடைத்துள்ளது. இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு வைத்திருந்தனர். போலீஸாரும் சில சமூக வலைதள கணக்குகள், ‘ஐடி’கள் உள்ளிட்டவற்றை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்துள்ளன.
கும்பமேளாவில் பெண்கள் நீராடும் வீடியோ கிளிப்புகள் ரூ.1,999 முதல் ரூ.3,000 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. டீசர் வீடியோ பகிர்ந்து இது ட்ரெண்ட் செய்யப்பட்டுள்ளது. ‘கங்கை நதி திறந்தவெளி குளியல்’, ‘திறந்தவெளி குளியல் வீடியோ குரூப்’ என்ற பெயரில் இந்த வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக ஹேஷ்டேகுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2019-ல் அலகாபாத் நீதிமன்றம் கும்பமேளாவில் பெண்கள் நீராடும் வீடியோ, புகைப்படங்கள் பகிர்வதை தடை செய்துள்ளது.

விஐபி குடில்கள்: மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் போலியான வலைதளம் ஒன்றில் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் சொகுசு குடில்களில் தங்குவது குறித்த தகவலை அறிந்துள்ளார். அதில் இருந்த தொடர்பு எண்ணில் பேசிய போது வந்து செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம், பிரயாக்ராஜில் சொகுசு குடிலில் ஐந்து பேர் தங்குவதற்கான கட்டணம் அனைத்தும் என சேர்த்து ரூ.3.78 லட்சம் பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தி உள்ளார். உத்தர பிரதேச சுற்றுலா என்ற பெயரில் இருந்த வங்கிக் கணக்கில் அவர் பணம் செலுத்தியுள்ளார்.
விமான டிக்கெட் மற்றும் தங்கும் குடில்கள் பதிவு செய்யப்பட்டதற்கான விவரங்களை அவர் பெற்றுள்ளார். அதன் பின்னர், அவர் தொடர்பு கொண்டு பேசிய எண் ‘Not Reachable’ ஆகியுள்ளது. அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டது குறித்து அவர் அறிந்துள்ளார். இது தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் பிஹாரை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், போலி ஹெலிகாப்டர் ரைடு என்ற பெயரில் ஆன்லைன் மூலம் பணம் சுருட்டப்பட்டுள்ளது. இந்த மோசடியை மேற்கொண்டவர்களும் பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என போலீஸார் கண்டறிந்தனர். போலியான QR கோட் ஸ்கேனர்கள் போன்றவற்றை சைபர் மோசடியாளர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

இதுதவிர கும்பமேளாவில் பங்கேற்ற 65 கோடி பேரில் சிலரது மொபைல் போன், பணம், நகை, பைகள், இருசக்கர வாகனங்கள் போன்ற உடமைகளை களவாணிகளிடம் இழந்துள்ளனர். இதுதவிர, டிஜிட்டல் நிதி மோசடி, போலி கரன்சி நோட்டுகள் புழக்கமும் இருந்துள்ளது. இதோடு போலி செய்திகளும், புரளிகளும் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டன. சாமானிய மக்கள், சாதுக்கள், உள்ளூர் மக்கள், வெளிநாட்டினர் என பலரும் இந்த மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகா கும்பமேளா பக்தர்கள் தங்கி, தூங்க அட்டைப்பெட்டி படுக்கைகளை அளித்த அமேசான்!
Edited by Induja Raghunathan