Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'உலகப் பணக்கார பெண்கள் பட்டியலில் நுழைந்த முதல் இந்தியர்' - ஹுருன் பட்டியலில் 5ம் இடத்தில் ரோஷ்னி நாடார்!

2025ம் ஆண்டுக்கான ஹுருன் குளோபல் ரிச் பட்டியலில், லிஸ்டில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்தியப் பெண் என்ற புதிய வரலாற்றைப் படைத்துள்ளார் HCL டெக்னாலஜிஸின் தலைவரான ரோஷினி நாடார்.

'உலகப் பணக்கார பெண்கள் பட்டியலில் நுழைந்த முதல் இந்தியர்' - ஹுருன் பட்டியலில் 5ம் இடத்தில் ரோஷ்னி நாடார்!

Saturday March 29, 2025 , 3 min Read

HCL டெக்னாலஜிஸில் தனக்கு இருந்த 47% பங்குகளைச் சமீபத்தில்தான், சிவ் நாடார் தனது மகள் ரோஷ்னி நாடாரின் பெயருக்கு மாற்றினார். அதன் மூலம், 2025ஆம் ஆண்டுக்கான ஹுருன் குளோபல் ரிச் பட்டியலில் (Hurun Global Rich List 2025), ஐந்தாவது இடத்திற்கு சென்றிருக்கிறார் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா.

இதன் முதல் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

Roshini

5வது இடத்தில் ரோஷ்னி

ஹுருன் குளோபல் என்ற அமைப்பு வருடந்தோறும், உலகின் பணக்காரர்கள் பற்றிய பட்டியலைப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான (2025ஆம் ஆண்டு) உலகின் பணக்கார பெண்கள் குறித்த பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதன்முறையாக முதல் 10 இடங்களுக்குள் இந்தியரான ரோஷ்னி நாடாரின் பெயர் இடம் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில், முதலிடத்தில் பிரபல அமெரிக்க நிறுவனமான வால்மார்ட்டின் நிறுவனர் சாம் வால்டனின் மகள் ஆலிஸ் லூயிஸ் வால்டன் (102 பில்லியன் டாலர்) இருக்கிறார். இரண்டாவது இடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸ் (67 பில்லியன் டாலர்), மூன்றாவது இடத்தில் ஜூலியா கோச் (அமெரிக்கா- 60 பில்லியன் டாலர்), 4வது இடத்தில் ஜாக்குலின் மார்ஸ் (அமெரிக்கா- 54 பில்லியன் டாலர்) உள்ளனர்.

அதைத் தொடர்ந்து 40 பில்லின் டாலர் (ரூ.3.5 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் ரோஷ்னி நாடார் 5வது இடத்தில் இருக்கிறார்.

இதன்மூலம் உலகின் பெரும் பணக்கார பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமை மட்டுமல்லாமல், தமிழர் என்ற கௌரவத்தையும் தமிழ்நாட்டிற்குத் தேடித் தந்துள்ளார்.

பெரும்பாலும் இந்தப் பட்டியலில் அமெரிக்கப் பெண்களே அதிக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால், தற்போது அந்த வரலாற்றை சற்று மாற்றி எழுதியுள்ளார் ரோஷ்னி நாடார். இந்தாண்டு, டாப் 10-இல் 8 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸ் மற்றும் நமது ரோஷ்னி நாடார் ஆகியோர் மட்டுமே அமெரிக்கர் அல்லாதவர்கள்.

roshini

தந்தை சிவ் நாடாருடன் ரோஷினி நாடார்

ரோஷ்னி நாடாரின் வளர்ச்சி

சர்வதேச அளவில் ஐடி துறையில் இந்தியா மிக முக்கிய இடத்தில் உள்ளது. அதில், ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனமும் ஒன்று. தமிழகத்தைச் சேர்ந்த சிவ் நாடார் உருவாக்கிய இந்த நிறுவனம், தற்போது சர்வதேச அளவில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

சிவ் நாடாரின் ஒரே மகளான ரோஷ்னி, 1982ம் ஆண்டு பிறந்தவர். Northwestern University மற்றும் Kellogg School of Management-ல் கல்வி பயின்று, தொழில் நிர்வாகத்தில் தனி முத்திரை பதித்தவர். சமூகச் செயல்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டு, சிவ்நாடார் பவுண்டேசன் மூலமாக கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்குப் பங்களித்து வருகிறார்.

ரோஷினி கட்டுப்பாட்டில் வந்த ஹெச்.சி.எல்

ஹெச்.சி.எல் நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து, கடந்த சில ஆண்டுகளாகவே, தன்னை விடுவித்துக் கொண்டு, மகள் ரோஷ்னி நாடாரை முன்னிலைப் படுத்தி வந்தார் ஷிவ் நாடார். கடந்த 2020ம் ஆண்டு தனது கம்பெனியின் பொறுப்புகளை தனது மகள் ரோஷ்னி நாடாரிடம் ஒப்படைத்தார் சிவ் நாடார். அப்போது ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ரோஷ்னி, அதன்மூலம், நாட்டின் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார்

சமீபத்தில்,  HCL டெக்னாலஜிஸில் தனக்கு இருந்த 47% பங்குகளையும் ரோஷ்னி நாடாரின் பெயருக்கு சிவ் நாடார் மாற்றினார். சிவ் நாடாரின் இந்த முடிவால், 12 பில்லியன் டாலர் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல் கார்ப்பரேசன் மற்றும் வாமா சுந்தரி இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் முழு கட்டுப்பாடும் ரோஷினியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2025ன், இந்த டாப் 10 பட்டியலில் ரோஷ்னி நாடார் நுழைந்துள்ளார்.

முன்னதாக, உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்களில் ஒருவராக, 2023ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 60வது இடத்தைப் பெற்றார் ரோஷ்னி நாடார். அவரது தலைமையிலான ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், இந்திய ஐடி துறையில் கடந்த சில வருடங்களாக வளர்ச்சியை கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

roshini

தந்தை சிவ் நாடாருடன் ரோஷினி நாடார்

தந்தை வழியில் மகள்

செல்வந்தராக மட்டும் இல்லாமல், தனது தந்தையைப் போலவே கொடை வழங்குவதிலும் முன்னிலையில் இருக்கிறார் ரோஷ்னி நாடார். இதற்காக 2014ம் ஆண்டு NDTV வழங்கிய இளம் கொடையாளர் விருதை பெற்றுள்ளார். 2017ம் ஆண்டு வோக் இந்தியா, ஆண்டின் சிறந்த கொடையாளர் விருதை அவருக்கு வழங்கியுள்ளது. 2023ம் ஆண்டில் ஃபார்ச்சூன் இதழில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 72வது இடத்தைப் பிடித்தார். சிவ் நாடார் அறக்கட்டளை மூலம், ரோஷ்னி நாடார் பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.

தனது தந்தையின் தொழிலை மட்டுமின்றி, ரோஷ்னி நாடார் உலகளவில் பல செல்வாக்கு மிக்க பதவிகளையும் வகித்து வருகிறார். அமெரிக்க-இந்தியா மூலோபாய கூட்டாண்மை மன்றத்தின் (USISPF) வாரிய உறுப்பினராக உள்ளார். மேலும், இயற்கை பாதுகாப்பு (TNC) வாரியத்திலும் பணியாற்றுகிறார்.

2010 ஆம் ஆண்டு HCL ஹெல்த்கேரின் துணைத் தலைவராக இருந்த ஷிகர் மல்ஹோத்ராவை ரோஷ்னி மணந்தார். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.