பேச்சுவார்த்தைக்குப் பின் சாம்சங் தொழிலாளர்கள் முக்கியக் கோரிக்கைகள் ஏற்பு - டிஆர்பி ராஜா தகவல்!
“மூன்று பேர் கொண்ட அமைச்சர் குழு மற்றும் நிர்வாகத்தினர், தொழிலாளர்கள் இடையே பல மாரத்தான் சந்திப்புகளுக்குப் பிறகு, சாம்சங் நிர்வாகம் ஊழியர்களால் எழுப்பப்பட்ட முக்கிய கோரிக்கைகளுக்கு ஒப்புக்கொண்டது” - டிஆர்பி ராஜா
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் 900 பேர் சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் மற்றும் 3 பேர் குழு நடத்திய பேச்சு வார்த்தையில் சாம்சங் நிர்வாகம் கோரிக்கைகளுக்கு உடன்பாடு தெரிவித்திருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தன் சமூக ஊடகப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான சி.ஐ.டி.யு.விற்கு சாம்சங் நிர்வாகம் அங்கீகாரம் அளிக்க வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சங்கத்திற்கு அங்கீகாரம் அளித்து அதனுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சாம்சங் நிர்வாகம் ஏற்கவில்லை.
இந்நிலையில், சாம்சங் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் அன்பரசன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தார். அமைச்சர் ராஜா, சாம்சங் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதனையடுத்து, ஸ்டாலின் ஆலோசனைப்படி மூவர் குழு சாம்சங் நிர்வாகத்தினருடன் உரையாடல் நடத்தியதாக அமைச்சர் ராஜா அன்று தன் எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார். அதில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்திருந்தார்.
நேற்று மீண்டும் அமைச்சர்கள் குழு தொழிற்சங்கத்தினர், நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில், அமைச்சர் டிஆர்பி ராஜா தன் எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பேச்சு வார்த்தைகள் குறித்து பதிவிட்டதாவது:
மூன்று பேர் கொண்ட அமைச்சர் குழு மற்றும் நிர்வாகத்தினர், தொழிலாளர்கள் இடையே பல மாரத்தான் சந்திப்புகளுக்குப் பிறகு, சாம்சங் நிர்வாகம் ஊழியர்களால் எழுப்பப்பட்ட முக்கிய கோரிக்கைகளுக்கு ஒப்புக்கொண்டது, குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வு மற்றும் கூடுதல் சலுகைகள் உட்பட, மீதமுள்ள ஊழியர்கள் திரும்பியவுடன் வேறு சில கோரிக்கைகளையும் பரிசீலிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
நிர்வாகம் மற்றும் ஊழியர்களுடன் கிட்டத்தட்ட 12 மணி நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டோம். நன்னம்பிக்கையுடன் உரையாடலுக்கு வந்த சாம்சங்கின் தலைமையை நாங்கள் பாராட்டுகிறோம், மேலும், ஆக்கப்பூர்வமாக ஈடுபட்ட ஊழியர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நிர்வாகம் தங்கள் கவலைகளைக் கேட்கத் தயாராக இருப்பதாகத் தொழிலாளர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். தொழிற்சங்க அங்கீகாரம் தொடர்பான பிரச்சினையைப் பொறுத்தவரை, அது நீதிமன்ற வழக்கில் உள்ளது, எனவே சட்டப்பூர்வ செயல்முறையை நாங்கள் மதிக்கிறோம்.
வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ் பெறப்பட்டு, அனைத்து ஊழியர்களும் பணிக்குத் திரும்பி, தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் எங்கள் பயணத்தில் தொடர்ந்து பங்களிப்பார்கள் என்று நம்புகிறோம்!
முதல்வர் ஸ்டாலின் தொழிலாளர்களின் நலனையே தனது முதன்மையான முன்னுரிமையாக எப்போதும் வைத்துள்ளார் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
மேலும், நிர்வாகம் உற்பத்தித் திறனை உறுதிப்படுத்துவதற்கான ஊக்கத்தொகையாக் அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை ஊழியர்களுக்கு ரூ.5000 கொடுக்க சம்மதித்துள்ளது. தொழிலாளர்களின் ஒரு பிரிவின் பிரதிநிதிகள் சாம்சங் நிர்வாகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்துள்ளது.
ஸ்ட்ரைக் தொடரும் - சிஐடியு அறிவிப்பு!
ஆனால், சாம்சங் இந்தியா ஊழியர்கள் யூனியன் தலைவர் இ.முத்துக்குமார் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்குக் கூறும்போது,
“அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டோம். ஆனால் எங்களது முக்கியக் கோரிக்கைகளை அவர்கள் ஏற்கவில்லை. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. உடன்பாடு என்ற செய்தி சாம்சங் நிர்வாகத்தின் திசைத்திருப்பும் முயற்சி. போராட்டம் தொடர்கிறது,” என்றார்.