'Jio Brain'- செயற்கை நுண்ணறிவு சேவையை அறிமுகம் செய்த முகேஷ் அம்பானி!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் 47வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவுக்கான அனைத்து சாதனங்கள் மற்றும் தளங்கள் அடங்கிய 'Jio Brain'-ஐ அறிமுகப்படுத்தினார் முகேஷ் அம்பானி.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 47வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவுக்கான அனைத்து சாதனங்கள் மற்றும் தளங்கள் அடங்கிய ஒட்டுமொத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப விவகாரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய 'Jio Brain'-என்பதை ரிலையன்ஸ் உருவாக்கி வருகிறது என்று தெரிவித்தார்.
நிறுவனத்தின் பசுமை ஆற்றல் மூலம் குஜராத் ஜாம்நகரில் கிகாவாட் அளவுக்கு பெரிய செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தை அமைக்கவுள்ளதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
“நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் செயற்கை நுண்ணறிவு அனுமான வசதிகளை உருவாக்கவிருக்கிறோம். இது வளர்ந்து வரும் தேவைகளை ஆதரிக்கும். AI ஐ ஜனநாயகப்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். AI பயன்பாடுகளை மிகவும் மலிவு விலையில் உருவாக்க முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் நாங்கள் கூட்டாண்மை மேற்கொள்ளவிருக்கிறோம்,” என்றார் முகேஷ் அம்பானி.

ஜியோ பிரெயின் என்றால் என்ன?
ஜியோ பிரைன் பற்றி விளக்கிய முகேஷ் அம்பானி, ஜியோ பிரெயின், ஜியோ முழுவதும் AI-க்கு மாறுவதை விரைவுபடுத்தவும், விரைவான முடிவுகளை எடுக்கவும், துல்லியமான கணிப்புகள் மற்றும் வாடிக்கையாளர் தேவைகளை நன்கு புரிந்துகொள்ளவும் நிறுவனத்திற்கு உதவுகிறது.
ரிலியன்ஸின் பிற நிறுவனங்களிலும் இதேபோன்ற மாற்றத்தை ஏற்படுத்தவும், அவர்களையும் செயற்கை நுண்ணறிவுப் பயணத்திற்கு விரைவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
ரிலையன்ஸ் நிறுவனத்திற்குள் ஜியோ பிரெயின் பயன்பாட்டை துல்லியமாக்குவதன் மூலம், மற்ற நிறுவனங்களுக்கும் வழங்கக்கூடிய சக்திவாய்ந்த AI சேவை தளத்தை உருவாக்குவதை நான் எதிர் நோக்குகிறேன், என்றார்.
இதோடு முகேஷ் அம்பானி ஜியோ AI கிளவுட் அறிமுகத்தையும் செய்துவைத்தார், வரும் தீபாவளிப் பண்டிகை முதல் ஜியோ பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு 100 ஜிபி இலவச கிளவுட் சேமிப்பு தளத்தைக் கொடுப்பதாக அறிவித்தார்.
ரிலையன்ஸின் டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சொத்துக்களை வைத்திருக்கும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ஆர்ஐஎல் 67.03% பங்குகளை வைத்திருக்கிறது. தொலைத்தொடர்பு வணிகமானது JPL-இன் மொத்தச் செயல்பாடுகளில் பெரும்பகுதியைக் கொண்டதாகும்.