'பத்பபூஷன் விருது' பெறும் தமிழக தொழிலதிபர்கள்; நல்லி குப்புசாமி, ஹட்சன் சந்திரமோகன்!
தமிழ்நாட்டில் இரண்டு பிரபல தொழிலதிபர்களான, நல்லி குப்புசாமி மற்றும் ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் உரிமையாளர் ஆர்.ஜி.சந்திரமோகன், இந்த ஆண்டிற்கான பத்மபூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், 7 பத்ம விபூஷன், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ உட்பட 139 பத்ம விருதுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இருந்து விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 13 பேர் தமிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
பல்வேறு துறையின் கீழ் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு, வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் 10 பேர் பத்ம விருதுகளை கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில், தமிழ்நாட்டில் இரண்டு பிரபல தொழிலதிபர்களும் உள்ளனர். அவர்களில் ஒருவர் தொழிலதிபர் நல்லி குப்புசாமி, மற்றொருவர் ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் உரிமையாளரான ஆர்.ஜி.சந்திரமோகன்.
நல்லி குப்புசாமி
1940 ஆண்டு நவம்பர் 9ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தவர் நல்லி குப்புசாமி. இவரது மூதாதையர்கள் ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட பத்மசாலியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நல்லி என்பது இவரது குடும்பப் பெயராகும், புடவை வியாபாரம் செய்யும் தொழில் செய்துவந்தனர் இவரது குடும்பத்தினர்.
பள்ளிப் பருவத்திலேயே தந்தையை இழந்த நல்லி குப்புசாமி, ராமகிருஷ்ணா மிசன் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், அதன் தொடர்ச்சியாக வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையும் படித்தவர்.
தனது 6 வயதில் ஐஸ்கிரீமுக்கு ஆசைப்பட்டு, தனது தந்தையின் புடவைக் கடைக்குச் செல்ல ஆரம்பித்துள்ளார் இவர். அப்போதெல்லாம் அன்றைய வருமானம் நன்றாக இருந்தால், கடையில் இருப்பவர்கள் மற்றும் தனது குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார் அவரது தந்தை. அதனால் கடைக்குச் சென்றால், ஐஸ்கிரீம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில், தினமும் பள்ளி முடிந்ததும் கடைக்குச் செல்ல ஆரம்பித்தவருக்கு, நாளடைவில் புடவை விற்பனையில் ஆர்வம் கூடிப்போனது.
1954ம் ஆண்டு, தனது 15 வயதில் முறைப்படி சேலை வியாபாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தார் நல்லி குப்புசாமி. தரம், நியாயமான விலை, காலத்திற்கேற்ற மாறுதல் இவற்றையே அப்போதிருந்து இப்போது வரை தனது வெற்றிக்கான சூத்திரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். அதன் பலனாகத்தான், 1928ல் சிறிய அளவில் துவங்கப்பட்ட தனது குடும்பத் தொழிலை, இன்று தென்னிந்தியாவில் மட்டுமல்லாது நாடு முழுவதும் மற்றும் தென்னிந்தியர்கள் வசிக்கும் வெளிநாடுகளிலும் பிரபலமாக்கியிருக்கிறார்.
நட்சத்திர வாடிக்கையாளர்கள்
1911ல் நல்லி குப்புசாமியின் தாத்தா, ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு ஒரு பட்டு சேலையை பரிசளித்தார். அதன் பிறகு, நல்லி சில்கிற்கு எண்ணற்ற நட்சத்திர வாடிக்கையாளர்கள் உருவாகினர். அந்தக் காலத்தில் இருந்து, தற்போது வரை இவரது கடைக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல்தலைவர்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர்.
“என் வருமானத்தில் ஒரு பகுதி நல்லி சில்க்ஸுக்கே சென்று விடுகிறது...” என நடிகர் திலகம் சிவாஜிகூட ஒரு பேட்டியில் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லி குழுமத்தின் தலைவராக, வெற்றிகரமான தொழிலதிபராக மட்டுமின்றி, தானத்திற்கும், கொடைக்கும், இலக்கியப் பங்களிப்பிற்கும், இசைக்கும் பேர் போனவராக அறியப்படுகிறார் நல்லி குப்புசாமி. கல்விக்கு, மருத்துவச் செலவிற்கு என இவரிடம் உதவி கேட்பவர்களுக்கு அவர் இல்லை என்று சொல்வதில்லை.
கர்நாடக இசைப் பிரியரான இவர், சென்னையில் உள்ள பல இசை சபைகளுக்குப் புரவலராக இருந்து வருகிறார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் திட்டக்குழு உறுப்பினராகவும், பாரதியார் பல்கலைக்கழகம் செனட் உறுப்பினராகவும் மத்திய பட்டு வாரியத்தின் உறுப்பினராகவும் உள்ளார். பல்வேறு சிற்றிதழ்களுக்கு தமிழ் இலக்கிய அமைப்புகளுக்கும் புரவலராக இருந்து வருகிறார்.
பத்மபூஷன் விருது
வாழ்வியல், வணிகவியல், நிர்வாகவியல், இலக்கியம் போன்ற துறைகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கலை, தொழில், கொடை என இவரது பன்முகப் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், கடந்த 2000ம் ஆண்டு நல்லி குப்புசாமிக்கு கலைமாமணி விருது கொடுத்து கௌரவித்தது தமிழ்நாடு அரசு. அதன் தொடர்ச்சியாக, 2003ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுத்து மத்திய அரசு கௌரவித்தது.
இந்நிலையில், தற்போது பத்மபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ளார் நல்லி குப்புசாமி. நெசவுத் துறையில் இருந்து இந்த விருதுகளைப் பெறும் முதல் நபர் என்ற பெருமையும் அவருக்கு உள்ளது.
இவரது மகன் ராமநாதன் நல்லி மற்றும் மகன்வழிப் பெயர்த்தி லாவண்யா, நல்லி சில்க்ஸினை நிர்வாகத்தை செய்து வருகின்றனர். கம்ப்யூட்டர் மூலம் வடிவமைக்கப்பட்ட புடவைகள் கொண்ட நல்லி நெக்ஸ்ட் விற்பனை நிலையங்கள் மூலமும், ஆன்லைன் மூலமும் வர்த்தகத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். நல்லி குப்புசாமியின் மூத்த மகள் ஜெயஸ்ரீ ரவி, குமரன் சில்க்ஸ் குடும்பத்தில் திருமணம் செய்து பாலம் சில்க்ஸ் என்ற பெயரில் பட்டு வியாபாரம் செய்து வருகிறார் குறிப்பிடத்தக்கது.
ஆர்.ஜி.சந்திரமோகன்
ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் உரிமையாளரான ஆர்.ஜி.சந்திரமோகன், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கலில் பிறந்தவர். கணிதத் தேர்வில் தோல்வியுற்றதை அடுத்து, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மர ஆலையில் வேலைக்குச் சேர்ந்தார். தொடக்கத்தில் ரூ.65 சம்பளத்திற்கு வேலை பார்த்த அவருக்கு, ஒரே வருடத்தில் சொந்தமாகத் தொழில் தொடங்கும் எண்ணம் அதிகமானது. அதன் தொடர்ச்சியாக, 1970-ல் தான் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு, ஐஸ்கிரீம் வியாபாரத்தைத் தொடங்கினார்.
250 சதுர அடி கொண்ட அறையில் 3 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி. 15 தள்ளுவண்டிகள் மூலம் தனது ஐஸ்கிரீம்களை விற்கத் தொடங்கினார். தனது சேமிப்பையே முதலீடாகக் கொண்டு, வெறும் ரூ.13,000 முதலீட்டில் அவர் தொடங்கிய அந்த நிறுவனம்தான் இன்று ரூ.234.16 பில்லியனாக குறிப்பிடத்தக்க சந்தை மூலதனத்தைக் கொண்ட ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் நிறுவனமாக வெற்றி நடை போட்டு வருகிறது.
இன்று அவரது வெற்றி பெரிதாகப் பேசப்பட்டாலும், அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. பல தடைகளைக் கடந்து, முதல் வருடத்தில் தனது நிறுவனத்தின் வருமானத்தை ரூ.1.5 லட்சமாக அதிகரிக்கச் செய்தார். இது வணிகத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் நம்பிக்கையை அவருக்கு அளித்தது. இதற்குப் பிறகு, 1981-ல், அவர் தனது சிறு வணிகத்தை பெரிய நகரங்களுக்கு கொண்டு செல்ல 'அருண்' ஐஸ்கிரீம் பிராண்டை நிறுவினார். 1986ல் அவர் நிறுவனத்தின் பெயரை ஹட்சன் அக்ரோ தயாரிப்பு என்று மாற்றினார். இடைத்தரகர்களை மெல்ல நீக்கிவிட்டு, நேரடி வர்த்தகத்துக்குள் இறங்கியதே ஹட்சனின் வெற்றிக்கான அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது.
42 நாடுகளில் விற்பனை
மக்களிடம் அவரது தயாரிப்புகளுக்கு வரவேற்பு அதிகமாக, அதிகமாக தனது தயாரிப்புகளின் எண்ணிக்கையையும் அவர் அதிகமாக்கினார். புதிய பொருட்களை தனது நிறுவனம் மூலம் அவர் அறிமுகப்படுத்தத் தொடங்கினார். தற்போது, அருண் ஐஸ்கிரீம்கள், ஆரோக்கியா பால், ஹட்சன் தயிர், ஹட்சன் பனீர், ஹட்சன் நெய், ஹட்சன் டெய்ரி ஒயிட்னர் மற்றும் ஐபேகோ போன்ற பிராண்டுகள் இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகளவில் 42 நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் பால் நிறுவனமாகத் திகழும் ஹட்சன், தினமும் பால் சேகரிப்புக்காக சுமார் 10,000 கிராமங்களில் இருந்து 4,00,000க்கும் மேற்பட்ட பால் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சரிவிலிருந்து மீண்ட ஹட்சன்
கொரோனா பெருந்தொற்று இரண்டு ஆண்டுகளாக ஹட்சன் நிறுவனத்தின் செயல்பாடுகளை சீர்குலைத்தது. இது 2022-23ம் நிதியாண்டின் 2வது அரையாண்டு மற்றும் 2023-24ம் நிதியாண்டின் முதல் அரையாண்டு பால் கொள்முதலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் தோல்விகளையும் வெற்றிகளாக மாற்றும் சூத்திரம் தெரிந்த சந்திரமோகன், 2023-24 நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டு பால் கொள்முதல் மற்றும் விற்பனை ஆகிய இரண்டிலும் இயல்பு நிலை திரும்பியதாக அறிவித்தார்.
பால் பொருட்கள் தயாரிப்பாளரின் செயல்பாட்டுகள் முந்தைய நிதியாண்டில் 8.7 சதவீதத்திலிருந்து 11.2 சதவீதமாக விரிவடைந்துள்ளன. தயிர் மற்றும் பால் பொருட்கள் மற்றும் சந்தை திறனை விரிவாக்க புதிய வசதிகளை நிறுவனதற்காக ஹாட்சன் நிறுவனம் ரூ.550 கோடி முதலீடு செய்துள்ளது. 2024-25ம் நிதியாண்டில் விரிவாக்கம் மற்றும் விற்பனைத் திட்டங்களை திறன் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.